நடிகனாக இருப்பதைவிட இதுதான் எனக்கு பெருமை என பேசியிருக்கிறார் நடிகர் சூர்யா.
நடிகர் சூர்யா தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்துள்ளார். 1997இல் 'நேருக்கு நேர்' படத்தின் மூலம் அறிமுகமான இவர், ஆரம்பத்தில் சில தோல்விகளைச் சந்தித்தாலும், தனது விடாமுயற்சியாலும் திறமையான நடிப்பாலும் இன்று முன்னணி நட்சத்திரமாக ஜொலிக்கிறார்.
பாலா இயக்கிய 'நந்தா' திரைப்படம் சூர்யாவின் திரை வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. அதனைத் தொடர்ந்து 'காக்க காக்க', 'பிதாமகன்', 'கஜினி', 'வாரணம் ஆயிரம்' போன்ற வெற்றிப் படங்கள் அவரை ரசிகர்கள் மனதில் ஆழமாகப் பதிய வைத்தன. ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடிப்பதில் சூர்யா முக்கியதத்துவம் கொள்கிறார்.
'சூரரைப் போற்று' திரைப்படத்தில் அவரது எதார்த்தமான நடிப்பு தேசிய விருதைப் பெற்றுத் தந்தது. சமீபத்தில் வெளியான 'ஜெய் பீம்' திரைப்படம் சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. வணிக ரீதியான வெற்றிகளைத் தாண்டி, சிறந்த கதையம்சம் உள்ள படங்களைத் தேர்ந்தெடுத்து நடிப்பதில் சூர்யா ஒரு முன்மாதிரியாகத் திகழ்கிறார். தயாரிப்பாளராகவும் தனது பங்களிப்பை அளித்து வரும் சூர்யா, திரையுலகில் தனது தனித்துவமான அடையாளத்தை தொடர்ந்து நிலைநாட்டி வருகிறார்.
சமூக அக்கறை கொண்ட மனிதநேயராகவும் திகழ்கிறார். அவர் நிறுவியுள்ள அகரம் ஃபௌண்டேஷன், பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களின் கல்விக்காக நிறுவப்பட்டுள்ளது. 2006 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த அறக்கட்டளை, தரமான கல்வியை அனைவருக்கும் கொண்டு சேர்க்கும் உயரிய நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது.
மாணவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களின் பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்புக்கான முழு செலவையும் ஏற்றுக்கொள்கிறது. இதன் மூலம், மாணவர்கள் சிறந்த கல்வி வாய்ப்புகளைப் பெற்று, நல்ல எதிர்காலத்தை அமைத்துக்கொள்ள உதவுகிறது.
சமீபத்தில் சூர்யா நடித்த ரீட்ரோ படத்தின் இசைவெளியீட்டு விழாவில் பேசுகையில், “ சினிமாவில் ஒரு நடிகனாக இருப்பதை விட என்னுடைய அகரம் பவுண்டேஷன் மூலமாக 8,000-க்கும் மேல் தம்பிகளும் தங்கைகளும் பட்டதாரியாக வந்து இருப்பது தான் எனக்கு மிகப்பெரிய பெருமை. இன்னும் பல மாணவர்களை பட்டதாரிகளாக ஆக்க வேண்டும் என்பேதுதான் என் கனவு.” என்று பேசினார்.