விமர்சனம்: 'துடரும்' - தொடரட்டும் இது போன்ற 'Top Tucker Thriller' படங்கள்!
ரேட்டிங்(4 / 5)
மழை, மலை, கூட்டமான யானைகள், நிலச் சரிவு என கேரளாவுக்கே உரித்தான இயற்கை அம்சங்களை ஷாஜி குமார் தன் ஒளிப்பதிவில் 'துடரும்' படத்தின் முதல் காட்சியில் காட்டும் போதே, ரசிகர்களாகிய நாம் இருக்கையின் நுனிக்கு வந்து விடுகிறோம். அங்கே தொடங்கும் பரபரப்பு படம் முடியும் வரை நீள்கிறது.
சுனில் கதையில், தருண் மூர்த்தி இயக்கத்தில், மோகன் லால், ஷோபனா நடித்திருக்கும் 'துடரும்' கேரளா எல்லையை தாண்டி, தமிழ் நாட்டிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. துடரும் என்றால் தமிழில் தொடர்வது என்று பொருள். மோகன் லாலும், ஷோபானாவும் 36வது முறையாக இப்படத்தில் ஜோடி சேர்ந்திருக்கிறார்கள்.
சென்னையிலிருந்து கேரளா வந்து செட்டிலான சண்முகம் (மோகன் லால்) கேரளாவில் கார் டிரைவராக இருக்கிறார். மனைவி, ஒரு மகன், மகள் என அமைதியாக வாழ்க்கை போய் கொண்டிருக்கிறது. திடீரென ஒருநாள் இவரது காரை போலீஸ்காரர்கள் சில காரணங்களால் போலீஸ் ஸ்டேஷனில் கொண்டு போய் வைத்து விடுகிறார்கள். போலீஸ் ஸ்டேஷனுக்கு சண்முகம் போய் கேட்ட பின்பும் உதவி ஆய்வாளர் காரை விடுவிக்க மறுக்கிறார். ஒரு வழியாக உயர் அதிகாரி தலையிட்டு காரை விடுவிக்கிறார்.
இதன் நீட்சியாக இன்னொரு பிரச்னை வருகிறது. அது என்ன பிரச்சனை? என்ன கதை? என்பதை சொல்ல முடியாது. படத்தை அவசியம் பாருங்கள் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும்.
படத்தின் முதல் காட்சியிலிருந்து இறுதி வரை ஒவ்வொரு காட்சியையும் மிகவும் சிரத்தையுடன் உருவாக்கி இருக்கிறார் டைரக்டர்.
ஒரு திரில்லர் படம் என்றால் படம் தொடங்கி அரை மணி நேரத்தில் கொலை நடக்கும். அந்த கொலையை விசாரிக்க ஒரு அதிகாரி வருவார் என்ற ரீதியில் படம் நகரும். ஆனால், இது போன்ற விஷயங்கள் இல்லாமல் மாறுபட்ட ஊகிக்க முடியாத திரில்லர் படமாக வந்துள்ளது துடரும். 'இது தேவையே இல்லை' என்று சொல்லும்படியாக எந்த ஒரு காட்சியும், வசனமும், ஷாட்டும் படத்தில் இல்லை.
ஷாஷி குமாரின் ஒளிப்பதிவும், ஜேக்ஸ் பிஜாயின் இசையும் இணைந்து திரையில் ஒவ்வொரு காட்சியும் ஒரு கவிதைபோல் மலர்கிறது.
மோகன் லால், ஷோபனா இவர்கள் இருவரும் எப்படியும் நன்றாக நடிப்பார்கள் என நமக்கு தெரியும். எனவே, நாம் எதிர்பார்க்காத அளவுக்கு அசத்தலாக நடித்து 'ஆஹா' சொல்ல வைத்த பிரகாஷ் வர்மா என்பவரின் நடிப்பை முதலில் பார்ப்போம். சிரித்து கொண்டே வில்லத்தனம் செய்யும் ஜார்ஜ் என்ற போலீஸ் அதிகாரி கேரக்டரில் பிரகாஷ் வர்மா நடிப்பை பார்க்கும் போது "எங்கிருந்து இவரை பிடிசீங்க"? என்று கேட்க தோன்றுகிறது. உள் ஒன்று வைத்து புறமொன்று பேசும் கதாபாத்திரத்தில் சபாஷ் போட வைக்கிறார் பிரகாஷ். தென்னிந்திய சினிமாவில் ஒரு நல்ல எதிர்காலம் இவருக்கு உள்ளது என்பது நிச்சயம். திரை உலகுக்கு இன்னொரு 'ப்ரகாஷ' வில்லன் என்ட்ரி!
போலீஸ் SI ஆக நடித்திருக்கும் பினு பப்பு, 'கட்டை குரலில்' இறுக்கமான முகத்துடன் நல்ல நடிப்பை தந்துள்ளார்.
"எத்தனை வருடமானால் என்ன? என்னால் சோர்வில்லாமல் நடிக்க முடியும்" என ஒரு அன்பான மனைவியாக, இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக லைவ் கேரக்டரில் நடித்துள்ளார் ஷோபனா.
மோகன் லால் த்ரிஷ்யம் படத்திற்கு பிறகு ஒரு எமோஷனல் கதையில் நடித்து வெற்றி பெற்றுள்ளார். அதிகார வர்க்கத்தை எதிர்கொள்ளும் போதும், மகனை நினைத்து அழும் போதும், குடும்பத்தில் ஒரு மனைவிக்கு பயப்படும் சராசரி கணவனாக இருக்கும் போதும் 'லாலேட்டன்' நடிப்பில் உயர்ந்து நிற்கிறார்.
சரியான கதையும், வலுவான திரைக்கதையும் அமைந்தால் சினிமாவில் வெற்றியை தொடமுடியும் என்பதை துடரும் படம் மூலமாக நிரூபித்து உள்ளார்கள் சேட்டன்கள். இந்த படத்தை முழுமையாக ரசிக்க வேண்டும் என்றால் தியேட்டர் சென்று பாருங்கள். இது பெரிய திரையில் பார்க்க வேண்டிய படம்.