‘38 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணைந்த கூட்டணி’- ‘நாயகன்’ சாதனையை முறியடிக்குமா ‘தக்லைஃப்’ ?

38 ஆண்டுகளுக்கு பின் கமல்ஹாசன்-மணிரத்னம் கூட்டணி ‘தக் லைஃப்’ திரைப்படத்தில் இணைந்துள்ளதால் படத்திற்கு ரசிகர்கள் இடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
nayagan and thug life
nayagan and thug life
Published on

இந்திய சினிமாவில் மாபெரும் சக்தியாக வலம் வருபவர் உலகநாயகன் கமல்ஹாசன். தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிப்படங்களில் நடித்துள்ள இவர் பான்இந்தியா நடிகராகவும் அறியப்படுகிறார். 1960-ல் மூன்று வயதில் ‘களத்தூர் கண்ணம்மா’வில் தொடங்கிய இவரது கலைப்பயணம் இன்று வரை கிட்டத்தட்ட 65 வருடங்களாக தமிழ் சினிமாவில் அசைக்கமுடியாத சக்தியாக வலம் வருகிறார்.

இவர் பல்வேறு கதாபாத்திரங்களை ஏற்று நடித்திருந்தாலும் 1987-ம் ஆண்டு வெளிவந்த ‘நாயகன்’ திரைப்படம் அவரது சினிமா வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியது என்று சொல்லலாம். இந்த படத்தில் இவர் ஏற்று நடித்த 60 வயதான வேலுநாயக்கர் கதாபாத்திரம் இன்றளவும் பேசப்படுகிறது. நடிப்பில் முத்திரை பதித்த கமல்ஹாசனுக்கு, இந்தப் படம் ரொம்பவே ஸ்பெஷல். அந்த காலகட்டத்தில் அதாவது தனது 30-வது வயதிலேயே 60 வயது முதியவர் கதாபாத்திரத்தில் நடிக்கும் தைரியம் நடிகர் கமல்ஹாசக்கு மட்டுமே இருந்தது என்று சொல்லலாம்.

மும்பையை பின்னணியாக கொண்ட இந்த படத்தில் வேலு நாயக்கர் கதாபாத்திரத்தில் அட்டகாசமான நடிப்பை கமல் வெளிப்படுத்தியிருப்பார். இயக்குநர் மணிரத்னத்தில் இயக்கத்தில் உருவான இந்த படம் மும்பையில் தாதாவாக விளங்கிய வரதராஜன் முதலியாரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படமாகும். இந்த படத்தில் இளையராஜா இசையில் இடம்பெற்ற 'நீ ஒரு காதல் சங்கீதம்', 'அந்தி மழை மேகம்', 'நான் சிரித்தால் தீபாவளி', 'நிலா அது வானத்து மேலே', 'தென்பாண்டி சீமையிலே' ஆகிய பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் ஒலித்தன.

இதையும் படியுங்கள்:
கன்னட மொழி சர்ச்சை: மன்னிப்பு கேட்காத கமல்; கர்நாடகாவில் 'தக் லைஃப்' கதி என்ன?
nayagan and thug life

முக்கியமான இடங்களில் வருகிற ‘தென்பாண்டிச் சீமையிலே’ பாடல் நம்மைக் காயப்படுத்திவிடும். மருந்தும் போட்டுவிடும். இந்த படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்ததுடன், பல்வேறு சாதனைகளையும் புரிந்து இன்றளவும் கமல்ஹாசனுக்கு பேர்சொல்லும் படமாக அமைந்தது என்று சொல்லலாம். 36 ஆண்டுகளுக்கு முன்பே நாயகன் திரைப்படம் ரூ.15 கோடி வசூல் செய்துள்ளதாக சினமா வட்டாரங்களில் பேசப்படுவது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் தலைசிறந்த நூறு படங்கள் பட்டியலில், ‘நாயகன்’ படமும் இருக்கிறது. அதுமட்டுமின்றி இந்த திரைப்படம் 1988-ம் ஆண்டிற்கான ஆஸ்கார் விருதிற்காக இந்தியா சார்பில் பரிந்துரைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு கௌரவிக்கப்பட்ட இந்த படம் மூன்று தேசிய விருதுகளையும், பல தனியார் விருதுகளையும் வென்றது. இந்தப்படத்துக்காக கமல்ஹாசனுக்கு சிறந்த நடிகர் மற்றும் ஒளிப்பதிவாளர் பிசிஸ்ரீராம், கலை இயக்குநர் தோட்டா தரணிக்கு தேசிய விருது கிடைத்தது.

இன்னும் பல நூற்றாண்டுகளானாலும் ‘நாயகன்’ நாயகனாகவே மக்கள் மனங்களில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருப்பான்!, இப்படி பல்வேறு சாதனைகளை புரிந்த இந்த திரைப்படம் வெளிவந்த கிட்டதட்ட 38 ஆண்டுகள் கழித்து மீண்டும் கமல்ஹாசன்-மணிரத்னம் கூட்டணி ‘தக்லைஃப்' படத்தில் இணைந்துள்ளதால் ரசிகர்கள் இடையே அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த கூட்டணியில் உருவான ‘நாயகன்’ மாபெரும் சாதனை புரிந்த நிலையில் ‘தக்லைஃப்’ திரைப்படமும் பல சாதனைகளை புரியும் என்று ரசிகர்கள் நம்புகின்றனர். இந்த படம் தொடங்கியதில் இருந்து அதிக எதிர்பார்ப்பு மற்றும் பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில் இன்று ‘தக்லைஃப்’ திரைப்படம் உலகளவில் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி மொழிகளில் பான்இந்தியா படமாக வெளியாகிறது.

ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தில், கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, ஐஸ்வர்யா லட்சுமி, அசோக் செல்வன், ஜோஜு ஜார்ஜ், நாசர், அலி ஃபசல், பங்கஜ் திரிபாதி, ரோஹித் சரஃப் மற்றும் பாபுராஜ் ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்தில் கமல்ஹாசன்-மணிரத்னம் கூட்டணி மட்டுமில்லாமல், கமலுடன் சிம்பு முதல் முறையாக இணைந்து நடித்துள்ளார். கமல்ஹாசனின் 234வது படமான ‘தக் லைஃப்’ திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் நடந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் கன்னடம் குறித்து பேசியது சர்ச்சையான நிலையில் கர்நாடகாவில் கமல்ஹாசனுக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

கமல் மன்னிப்பு கேட்கும்வரை, 'தக் லைஃப்' படத்தை திரையிட அனுமதிக்கமாட்டோம் என கர்நாடகாவில் கூறிய நிலையில், கமல் மன்னிப்பு கேட்கமாட்டேன் என திட்டவட்டமாக மறுத்து, படத்தை கர்நாடகத்தில் திரையிட அனுமதிக்க வேண்டும், அந்த படம் வெளியாகும் தியேட்டர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க கர்நாடக அரசுக்கு உத்தரவிடுமாறு கர்நாடக நீதிமன்றத்தில் வழங்கு தொடர்ந்தார். ஆனால் கர்நாடக நீதிமன்றம், நடிகர் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி விசாரணையை வருகிற 10-ந்தேதிக்கு தள்ளிவைத்தது. இந்நிலையில் நடிகர் கமல்ஹாசனின் தக் லைஃப் பட வெளியீட்டை கர்நாடகாவில் ஒத்திவைப்பதாக ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இப்படி பல்வேறு பிரச்சனைகளுக்கு இடையே தமிழ்நாட்டில் ‘தக் லைஃப்’ இன்று வெளியாவதால் இந்த படம் நிச்சயமாக மாபெரும் வெற்றி பெறும் என ரசிகர்கள் கூறிவருகின்றனர். அதற்கு காரணம் கடந்த சில வருடங்களுக்கு முன் கமல் நடித்த ‘விஸ்வரூபம்’ பட வெளியீட்டின் போதும் தமிழகத்தை சேர்ந்த சில அரசியல் கட்சிகள் படத்தை தடை செய்ய வேண்டும் என பிரச்சனை செய்த நிலையில் நீண்ட இழுப்பறிக்கு பின் படம் வெளியாகி சூப்பர் ஹிட்டானது. அந்த சம்பவத்தை நினைவுகூர்ந்த ரசிகர்கள் இந்த படத்திற்கும் அரசியல் தலையீடு ஏற்பட்டதால் தக் லைஃப் சூப்பர் ஹிட்டாகும் என கூறிவருகின்றனர்.

இதையும் படியுங்கள்:
சிவராஜ் குமார் ஆதரவு எதிரொலி: 'தக் லைஃப்'-க்கு கர்நாடகாவில் சிக்கல்!
nayagan and thug life

எதுஎப்படி இருந்தாலும் 38 ஆண்டுகளுக்கு பின்னர் இணைந்த கமல்-மணிரத்னம் கூட்டணி மீண்டும் வெற்றிக் கனியை பறிக்குமா? ‘நாயகன்’ சாதனையை முறியடிக்குமா? ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com