
2023-ல் கதைவசனம் எழுதி வினோத் இயக்கி வெளியான படம் துணிவு. போனிக் கபூர் தயாரித்த இந்த படத்தில் நடிகர் அஜித்குமாருடன் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, பவானி ரெட்டி, சான் கொக்கின், மமதி சாரி, அசய், வீரா பகவதி பெருமாள் ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படத்தில் பாவனி மற்றும் அமீர் இருவரும் சேர்த்து நடித்திருந்தனர். அப்படத்தில் இருவரின் பாத்திரங்களும் வெகுவாக பாராட்டப்பட்டது.
பாவனி என்றும் அழைக்கப்படும் பவ்னி ரெட்டி விஜய் டிவியில் நடந்த பிக் பாஸ் 6 என்ற ரியாலிட்டி ஷோவில் போட்டியாளராக கலந்து கொண்டு 2வது இடத்தைப் பிடித்தார். இந்த நிகழ்ச்சிக்கு வைல்டு கார்டு போட்டியாளராக வந்த அமீர், பாவனியை காதலிப்பதாக கூறினார். ஆனால், அமீரின் காதலை பாவனி ஏற்காமல் இருந்தார்.
இதையடுத்து, அமீர் மற்றும் பாவனி ஜோடி நடன நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது, அந்த நிகழ்ச்சியில் பாவனி, அமீரின் காதலை ஏற்றுக்கொண்டார். இதனையடுத்து, இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் கடந்த 3 வருடங்களாக ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். அவர்களின் லிவ்விங் ரிலேஷன்ஷிப் சர்ச்சையாக பேசப்பட்டாலும் அதை பற்றி எல்லாம் இவர்கள் இருவரும் கவலைப்படாமல் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக காதல் தினம் அன்று அறிவித்தனர். அதன்படி இன்று இருவருக்கும் திருமணம் நடைபெறுகிறது.
21 வயதில் மாடலாக தனது வாழ்க்கையைத் தொடங்கிய பாவனி, 2012-ம் ஆண்டு பாலிவுட் திரைப்படமான லாஜின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார். ரெட்டை வால் குருவி என்ற தொலைக்காட்சி தொடர் மூலம் சின்னதிரைக்கு அடியொடுத்து வைத்தார். அதுமட்டுமின்றி இவர் மலையாளம் மற்றும் தெலுங்கு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடித்துள்ளார்.
பாசமலர் என்கிற சீரியலில் நடித்தபோது பாவனிக்கும், பிரதீப் குமாருக்கும் இடையே காதல் ஏற்பட்டு, இவர்கள் கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் பிரதீப் திருமணம் முடிந்து சில மாதங்களிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். கணவரின் மறைவுக்கு பின்னர் மீண்டும் சின்னத்திரைக்கு வந்த பாவனி, விஜய் டிவியில் ஒளிபரப்பான சின்னத்தம்பி என்கிற சீரியலில் பிரஜனுக்கு ஜோடியாக நடித்தார்.
இந்த சீரியலுக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்ததால், பாவனிக்கென தனி ரசிகர் பட்டாளமும் உருவானது. பின்னர், டபுள் ட்ரபிள் , வஜ்ரம் , மொட்ட சிவா கெட்ட சிவா, ஜூலை காற்றில், மல்லி முதலியாண்டி, மல்லி போன்ற படங்களில் நடித்தார். தொடர்ந்து, தெலுங்கு மற்றும் தமிழ் மொழி படங்களில் பாவனி நடித்து வந்த நிலையில், தமிழ் சீரியலிலும் நடித்து வந்தார்.
இவர்களின் நெருங்கிய தோழியான பிரியங்காவிற்கு கடந்த 16-ம்தேதி திருமணம் நடைபெற்ற நிலையில் பாவனி மற்றும் அமீர் இருவரும் கலந்து கொண்டு ஆட்டம் போட்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தனர்.
வாழ்க்கையில் பல சிக்கல்களை சந்தித்த பாவனிக்கு பிக்பாஸில் பங்கேற்றதன் மூலம் பேரும், புகழும் கிடைத்தது மட்டுமின்றி வாழ்க்கை துணையும் கிடைத்தது என்றே சொல்லலாம்.
இதேபோன்று, தொழில்முறை நடனக் கலைஞரான அமீர், நடனத்தில் முழுவதும் கவனம் செலுத்தி வருகிறார். இருவரும் தங்கள் துறையில் பயணித்துவரும் நிலையில், இன்று திருமணம் எனும் புதிய பந்தத்தில் இணைந்து ஒன்றாக பயணிக்க உள்ளனர். இவர்களுக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.