'டைட்டானிக்' காதல் கரை சேர்ந்ததா? கலையரசன் படத்தின் விமர்சனம்!

சண்டை, கிராபிக்ஸ் இல்லாமல் மனித உணர்வுகளை மட்டும் பேசும் காதல் காவியம் எப்படி இருக்கிறது?
டைட்டானிக்
டைட்டானிக்
ராகவ்குமார்

ராகவ் குமார். கல்லூரி படிக்கும் காலம் தொட்டு சிறு சிறு கட்டுரைகள் தினசரிகளில் எழுதிய அனுபவம். இதழியல் மற்றும் தகவல் தொடர்பு துறையில் முதுகலை மற்றும் எம் பில் படிப்பு . 15 ஆண்டுகளுக்கு மேலாக உதவி பேராசிரியராக பணி. சென்னை அகில இந்திய வானொலியில் சில காலம் தொகுப்பாளராக பணி. 2006 முதல் கல்கியில் சினிமா விமர்சனங்கள், சினிமா பிரபலங்களின் நேர்காணல் எழுதிய ராகவ், கல்கி ஆன்லைன் தொடங்கிய சமயத்திலிருந்து உடன் பயணித்து வருகிறார். புதிய சினிமா, புதிய சினிமா கலைஞர்களின் படைப்புகளை ஊக்கப்படுத்தி அவர்களின் நேர்காணல்களை எழுதுவதில் ஆர்வம் அதிகம்.

Updated on: 
ரேட்டிங் (3 / 5)

ஜானகிராமன் இயக்கத்தில் கலையரசன், காளி வெங்கட், கயல் ஆனந்தி இவர்கள் நடித்துள்ள டைட்டானிக் என்ற படம் வெளியாகி உள்ளது. ஹாலிவுட்டில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற டைட்டானிக் படத்திற்கும் நம்மூர் மக்கள் எடுத்த இந்த டைட்டானிற்கும் என்ன தொடர்பு என்று கேட்கிறீர்களா? ஒரே ஒரு தொடர்பு மட்டும் தான். அது என்னவென்றால் இரண்டு படத்திலும் இருக்கும் ஒரே விஷயம் காதல். அந்த காதல் தான் இந்த டைட்டானிக்கிலும் இருக்கிறது. இந்த டைட்டானிக் காதலில் கரை சேர்ந்ததா? என்று இப்போது பார்க்கலாம்.

காளி வெங்கட், கலையரசன், ராகவ் விஜய் இவர்கள் மூவரும் ரயில் பயணத்தில் சந்திக்கிறார்கள். மூவரும் தங்கள் காதல் அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்கள். அதில் ராகவ் விஜய் மட்டும் பெங்களூரில் தனது திருமணத்திற்காக செல்கிறார். காளி வெங்கட் பள்ளி படிக்கும் போது காவிரி என்ற பெண்ணை காதலித்து இருக்கிறார். இதை பகிர்ந்து கொள்கிறார். எதிர்பாராத விதமாக இந்த காதல் கைகூடவில்லை. அதனால் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு கோவையில் குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.

கலையரசன் தனது காதலை பகிர்ந்து கொள்கிறார். தீபா என்ற பெண்ணை காதலித்து வந்திருக்கிறார். அப்பெண் தன்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தும் நிலையில் தனது தங்கை, அக்காவுக்கு திருமணம் செய்த பின்பு தான் திருமணம் செய்து கொள்வேன் என்று கலையரசன் சொல்ல அது பிரச்சினையாக மாறி தீபா பிரிந்து செல்கிறார். ராகவ் விஜய் வேலை செய்யும் இடத்தில் ஒரு பெண்ணை காதலித்திருக்கிறார். எதிர்பாராத விதமாக அந்த காதலும் கைகூடவில்லை. இப்போது பெற்றோரின் வற்புறுத்தலுக்காக வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள பெங்களூர் சென்று கொண்டிருக்கிறார்.

இவர்கள் மூவரும் பெங்களூரில் இறங்கி ராகவ விஜய் அழைப்பின் பேரில் காளி வெங்கட்டும் கலையரசனும் ராகவ் விஜய் திருமணத்திற்கு செல்கிறார்கள். அங்கே அவர்களுக்கு எதிர்பாராத விதமான சில அதிர்ச்சிகள் காத்திருக்கிறது. அந்த அதிர்ச்சி என்ன அதிலிருந்து மீண்டு வந்தார்களா என்று சொல்கிறது மீதி கதை.

டைட்டானிக்
டைட்டானிக்

ஆக்சன் திரில்லர் பரபரப்பான காட்சிகள் கொஞ்சம் வன்முறை இப்படி எதுவுமே இல்லாமல் முழுக்க முழுக்க காதல் என்ற ஒரு ஒற்றை புள்ளியில் கதையை பின்னி இருப்பதற்காக டைரக்டர் ஜானகிராமனை நாம் பாராட்டலாம்.

இதையும் படியுங்கள்:
விஜய் சேதுபதி - சாய் நடித்துள்ள 'பத்தா' விமர்சனம்: பயம் கலந்த சிரிப்பு விருந்து!
டைட்டானிக்

மூன்று காதல் படத்தில் இருந்தாலும் கலையரசன், கயல் ஆனந்தியின் காதல் பகுதி மிகவும் ரசிக்கும்படி உள்ளது. காரணம் இந்தப் பகுதி சம காலங்களில் காதலர்களுக்குள் வரும் ஈகோ பிரச்சனையை மையப்படுத்தி உள்ளது. சில ஹீரோயின்கள் அவ்வப்போதுதான் சில படங்களின் நடிப்பார்கள். ஆனாலும் இவர்களின் நடிப்பும் இவர்கள் ஏற்று நடிக்கும் கதாபாத்திரமும் மனதில் நிற்கும். அந்த வகையில் கயல் ஆனந்தி இந்த படத்தில் காவேரி மற்றும் தீபா என்ற இரு கேரக்டரை ஏற்று நடித்து இருக்கிறார். காதல் தரும் மகிழ்ச்சி, காதல் தரும் சோகம் அதனால் ஏற்படும் வலி அனைத்தையும் ஆனந்தி மிக அம்சமாக தனது உணர்வுகளில் காட்டிவிட்டார்.

டைட்டானிக்
டைட்டானிக்

கலையரசன் எப்பொழுதும் போல நடிக்கும் படங்களிலிருந்து விலகி ஒரு முழு நீள காதல் படத்தில் நடித்து தனக்கு கொஞ்சம் ரொமான்ஸ் செய்ய வேண்டும் என்று நிரூபித்து இருக்கிறார்.காளி வெங்கட் நடிப்பில் ஓகே ரகம். இவர்கள் இல்லாமல் சேர்த்த தேவதர்ஷினி, மதுமிதா போன்றவர்களும் அவ்வப்போது வந்து கொஞ்சம் சிரிக்க வைக்கிறார்கள். படத்தில் பின்னணி இசை நன்றாக உள்ளது. காதல் படத்திற்கு பாடல்கள் இன்னும் நன்றாக இருந்திருக்க வேண்டும் இல்லையா? அதை இன்னும் கொஞ்சம் சிறப்பாக தந்திருக்கலாம்.

இதையும் படியுங்கள்:
விஜய் சேதுபதி இயக்குநர் கூட்டணியில்... ஹன்சா என்டர்டெயின்மென்ட் வெளியிட்ட 4 அதிரடிப் படங்கள்!
டைட்டானிக்

ஒளிப்பதிவை பொருத்தவரை ஒரு நாடக பாணி காதல் திரைப்படத்திற்கு என்ன தேவையோ அதை மட்டும் கரெக்டாகத் தந்திருக்கிறார். பல பாராட்டும்படியான அம்சங்கள் இருந்தும் சில குறைகளும் படத்தில் இருக்கின்றன. படம் நகரும் விதம் பெரும்பாலும் வசனங்களால் இருப்பது கொஞ்சம் தவிர்த்து இருக்கலாம். காட்சிகள் வழியே கதையை நடத்தி இருந்தால் இன்னும் சுவாரஸ்யம் இருக்கும். மேலும் திரைக்கதை எழுதப்பட்ட இடம் 1990ல் காலகட்டத்தில் வந்த காதல் படங்களை நினைவூட்டுவதாக உள்ளது. இது இந்த தலைமுறை இளைஞர்களுக்கு பிடிக்குமா என்று சிறிது சந்தேகமே.

இருந்தாலும் படம் முடிந்து வரும் போது ஒரு நல்ல காதல் திரைப்படத்தை பார்த்த உணர்வு வருகிறது. கடைசியாக ஒரு விஷயம் பறந்து பறந்து அடிப்பது, கிராபிக்ஸ், அனிமேஷன் இதுபோன்று எதுவுமே இல்லாமல் முழுக்க காதல் என்ற மனித உணர்வுகளின் அடிப்படையில் ஒரு படம் பார்க்க விரும்பினால் இந்த டைட்டானிக் உங்களுக்கு ஒரு சரியான தேர்வாக இருக்கும். டைட்டானிக் -கரை சேர்ந்த காதல்.

பழைய 90ஸ் திரைப்படங்களின் நினைவலைகளையும், ஏக்கம் நிறைந்த காதல் தருணங்களையும் வாசகர்கள் மீண்டும் அனுபவித்த உணர்வைப் பெறுவார்கள்.