

'TN 2026 தங்க நட்சத்திரம்' படத்தை தேர்தலுக்கு முன் திரையிட கூடாது என்று சில அரசியல் கட்சிகள் பிரச்னை செய்தார்கள். அதையும் மீறி இப்படம் வெளியாகி உள்ளது. இப்படத்தை நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா இயக்கி உள்ளார். நட்டி, தம்பி ராமையா, M.S பாஸ்கர் முக்கிய கேரக்டரரில் நடித்து உள்ளார்கள்.
1980 கால கட்டம். பொள்ளாச்சி பகுதியில் மிகப்பெரிய செல்வந்தராக இருக்கிறார் மன்றாடியார் (தம்பி ராமையா). எம்.ஜி ஆரின் தீவிர ரசிகர். அந்த சமயத்தில் குல்கந்த் குமார் (நட்டி) என்ற வளர்ந்து வரும் நடிகர் ஒருவர் பொள்ளாச்சிக்கு படப்பிடிப்புக்கு வருகிறார்.
குலகந்த்தை மன்றடியாருக்கு மிகவும் பிடித்து போகிறது. எம்.ஜி.ஆர் பாணியில் ஹரோவாக நடிக்கும் படி குல்கந்திடம் சொல்கிறார் மன்றாடியார். ஆனால் எம்.ஜி.ஆர் பார்முலா குல்கந்திற்கு ஒர்க் அவுட் ஆக வில்லை. இதனால் Anti Hero சப்ஜெக்ட் படத்தில் நடித்து மிகப்பெரிய வெற்றி பெறுகிறார் குல்கந்த்.
மன்றடியாரும், குல்கந்தும் உடன் பிறவா அண்ணன் தம்பி போல் பழகுகிறார்கள். சில ஆண்டுகள் கழித்து குலக்கந்தை அரசியலில் இறக்கி தமிழ்நாட்டின் முதல்வராக்க முயற்சி செய்கிறார் மன்றாடியார். குலகந்த் அரசியலில் இறங்க முடிவெடுத்த உடன் ஆளும்கட்சி, எதிர் கட்சிகள் நெருக்கடிகள் தருகிறார்கள். இந்த நெருக்கடிகளில் இருந்து குல்கந்த் தப்பித்தாரா? தமிழ் நாட்டின் முதல்வர் ஆனாரா? என்று சொல்கிறது மீதிக்கதை.
நீண்ட நாட்களுக்கு பின்பு ஒரு Political Satire படம் தந்ததற்கு டைரக்டர் உமா பதியை பாராட்டலாம். படத்தில் சில லாஜிக் மீறல்கள், குறைகள் இருந்தாலும் படம் நகரும் விதமும் அடுத்தடுத்து வரும் நகைச்சுவை துணுக்குகளும் இந்த குறைகளை மறக்கடிக்க செய்து விடுகிறது. சினிமாவிலிருந்து அரசியலுக்கு வரும் எந்த நடிகறையும் இந்த படம் குறிப்பிடவில்லை என்று சொன்னாலும் பல காட்சிகளும், சம்பவங்களும் ஒரு சில நடிகரை நினைவு படுத்துகின்றன.
படத்தின் டைட்டில் விஜய் அரசியல் என்ட்ரியையும் வருமான வரிதுறை ரைடும், ஹீரோ படத்தை திரைக்கு வராமல் தடுக்கும் போது சம காலத்தில் விஜய் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களையும் நினைவு படுத்துகிறது.
முதல்வர் வருகைக்காக தனது காரை நிறுத்தும் போது, ஹீரோ சாலையில் இறங்கி நடக்கும் காட்சி, கிளைமாக்ஸ் காட்சி இரண்டும் ரஜினியை நினைவு படுத்துகிறது. ஒரு காட்சியில் கமலும் நினைவில் வருகிறார்.
ஹீரோவின் காதலியாக வரும் பிரபல நடிகையின் பெயர் இப்போது மீடியாவில் பேசப்படும் ஒரு ஹீரோயின் பெயரை ஒத்து போகிறது. 'இந்த படத்தில் வரும் சம்பவங்களும், பெயர்களும் யாரையும் குறிப்பிடவில்லை' என டைட்டிலில் முதலில் சொல்வது நமக்கு சிரிப்பை வரவழைக்கிறது.
இதுவரை வில்லனாக பார்த்த நட்டி நகைச்சுவையில் மாஸ் செய்து விட்டார். எம்.ஜி.ஆர், ரஜினி, விஜய் என மூவரையும் கலந்து கட்டி நடித்திருக்கிறார் நட்டி. ஹீரோ குல்கந்த் குமார் கேரக்டரில் சபாஷ் போட வைக்கிறார். தம்பி ராமையா கொஞ்சம் நகைச்சுவை, கொஞ்சம் சீரியஸ் என நடித்துள்ளார். இவரது நடிப்பு தமிழ்நாட்டு அரசியலில் இருந்த இரண்டு கிங் மேக்கர்களை நினைவு படுத்துகிறது.
அரசியல் மட்டும் இல்லாமல் சினிமாவையும் கிண்டல் செய்துள்ளது இந்த படம். படத்தின் ஆரம்பத்தில் வரும் ஷூட்டிங் காட்சிகள் சிரிப்புக்கு உத்தரவாதம் தருகிறது. சினிமாவுக்குள் ஒரு சினிமாவை சொல்வது என்பது வெற்றி பெற்ற பார்முலா கிடையாது. இருந்தாலும் இந்த படத்தில் நகைச்சுவையால் சினிமாவுக்குள் சினிமா ஒர்க்அவுட் ஆகி விடுகிறது.
மொத்தத்தில் TN 2026 தங்க நட்சத்திரம் - நகைச்சுவையால் ஜொலிக்கிறது.