இன்று வெளியாகும் 6 திரைப்படங்கள்- அதிக எதிர்பார்ப்பில் ‘திரௌபதி 2’..!!
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான கதைகளில் புதுப்புது திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் இந்த வாரம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில் பெரிய நடிகர்களின் படங்கள் எதுவும் வெளியாகாத நிலையில் திரௌபதி 2 படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது என்றே சொல்லலாம். அந்த வகையில் இன்று (ஜனவரி 23ந்தேதி) தியேட்டர்களில் ஆறு திரைப்படங்கள் வெளியாக உள்ளன. அவை என்னென்ன என்பது குறித்து இங்கே பார்க்கலாம்.
திரௌபதி 2
2020-ம் ஆண்டு வெளியான திரௌபதி’ திரைப்படத்தின் மிகப் பெரிய வரவேற்பை தொடர்ந்து தற்போது அதன் 2-வது பாகத்தை மோகன் ஜி இயக்கியுள்ளார். இந்த படத்தில் ரிச்சர்ட் ரிஷி கதாநாயகனாகவும், ரக்சனா இந்துசூடன் 'திரௌபதி தேவி'யாக நடித்துள்ளார். இந்த படத்தில் நட்டி, வேலராமமூர்த்தி, நாடோடிகள் பரணி, உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
ஹாட் ஸ்பாட் டூ மச்
விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் பிரியா பவானி சங்கர், எம்.எஸ்.பாஸ்கர், தம்பி ராமையா, ஆதித்யா பாஸ்கர், ரக்ஷன்,சாண்டி மாஸ்டர், ஜனனி ஐயர், சோபியா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
இப்படத்தை கேஜேபி டாக்கீஸ், விஷ்ணு விஷால் ஸ்டியோஸ் மற்றும் ஏ2ஈ சினிமாஸ் இணைந்து தயாரிக்கின்றனர். ஹாட் ஸ்பாட் படத்தின் முதல்பாகம் கடந்த 2024-ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது இரண்டாம் பாகம் வெளியாக உள்ளது. சமூகப் பிரச்சனைகள் மற்றும் சர்ச்சைக்குரிய விஷயங்களை மையமாக கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.
வங்காள விரிகுடா குறுநில மன்னன்
தமிழ் திரையுலகில் முதன்முறையாக கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் உள்ளிட்ட 21 துறைகளை கையாண்டு டாக்டர் குகன் சக்கரவர்த்தியார் இயக்கி நடித்துள்ள படம், ‘வங்காள விரிகுடா குறுநில மன்னன்’. மாதா பிதா ஃபிலிம் பேக்டரி தயாரித்துள்ள இந்த படத்தில் ஜெயஸ்ரீ, பிரபாத், அலினா ஷேக், பொன்னம்பலம், வாசு விக்ரம், வையாபுரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம், நம் மக்களின் வாழ்வியலை படம்பிடிக்கும் அருமையான காவியமாக, அப்துல்கலாமின் கனவு காணுங்கள் எனும் கருத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 21 கலைகளையும் கையாண்டு ஒருவர் படம் எடுப்பது என்பது இதுதான் முதல்முறை குறிப்பிடத்தக்கது.
மாயபிம்பம்
கே.ஜே சுரேந்தர் தயாரித்து, இயக்கியிருக்கும் படம் ‘மாயபிம்பம்’. செல்ஃப் ஸ்டார்ட் புரொடக்சன்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் புதுமுகங்கள் ஜானகி, ஆகாஷ், ஹரி ருத்ரன், ராஜேஷ், அருண் குமார் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். நடிகர், நடிகைகள் மட்டுமில்லாமல் இசையமைப்பாளர் நந்தா, படத்தொகுப்பாளர் வினோத், ஒளிப்பதிவாளர் எட்வின்சகாய் என தொழில்நுட்ப கலைஞர்களும் முழுக்க முழுக்க புதுமுகங்கள் இப்படத்தில் பணிபுரிந்துள்ளனர்.
ஜாக்கி
மதுரையில் நடக்கும் பாரம்பரிய கலாச்சார விளையாட்டான கெடா சண்டையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள திரைப்படம் 'ஜாக்கி'. பிரகபல் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் வான் கிருஷ்ணா, ரிதான் கிருஷ்ணாஸ், அம்மு அபிராமி ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர். பிகே7 ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு, சக்தி பாலாஜி இசையமைத்துள்ளார்.
பேபி கேர்ள்
அரசு மருத்துவமனையிலிருந்து காணாமல் போகும் புதிதாகப் பிறந்த குழந்தையைப் பற்றிய கதைதான் 'பேபி கேர்ள்' மேஜிக் பிரேம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் அருண் வர்மா இயக்கத்தில் கிரைம் திரில்லர் படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் மலையாள நடிகர் நிவின் பாலி கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் லிஜோமோல் ஜோஸ், அதிதி ரவி, அபிமன்யு, சங்கீத் பிரதாப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கருடன் படத்தின் சூப்பர்ஹிட் படத்திற்குப் பிறகு அருண் வர்மா இயக்கும் இரண்டாவது படம் இது. இந்த படத்திற்கு ஃபைஸ் சித்திக் ஒளிப்பதிவையும்,ஷைஜித் குமரன் படத்தொகுப்பையும் மற்றும் ஜேக்ஸ் பெஜோய் இசையமைத்துள்ளார்.

