இந்த மாதம் சிறிய மற்றும் பெரிய பட்ஜெட் என பல்வேறு புதிய திரைப்படங்கள் திரைக்கு வரவுள்ளன. அதிலும் குறிப்பாக தமிழ், தெலுங்கில் முக்கிய முன்னணி நடிகர்களின் படங்கள் ஜூன் மாதத்தில் ரிலீஸ் ஆக உள்ளதால் ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அந்த வகையில் கமல்ஹாசனின் 'தக் லைப்', பவன் கல்யாணின் 'ஹரி ஹர வீரமல்லு', தனுஷின் 'குபேரா' மற்றும் விஷ்ணு மஞ்சுவின் 'கண்ணப்பா' ஆகிய படங்கள் வெளியாகும் நிலையில் யாருடைய படம் வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் இடையே அதிகரித்துள்ளது. எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கும் இந்த படங்களில் தொகுப்பை இங்கே பார்க்கலாம்.
கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் உருவாகியுள்ள படம் 'தக் லைப்'. 36 வருடங்களுக்குப் பிறகு இந்த கூட்டணி இணைந்துள்ளதால் படத்திற்காக எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படத்தில் நடிகர் சிம்பு, திரிஷா, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, அசோக் செல்வன் மற்றும் பாலிவுட் நடிகர் அலி பசல் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கும் இப்படம் வருகிற ஜூன் 5-ம் தேதி திரைக்கு வருகிறது. ரெட் ஜெயன்ட், ராஜ் கமல் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த படம் கமல்ஹாசனின் 234வது திரைப்படமாகும். இசைவெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் பேசிய கன்னடம் குறித்த பேச்சு சர்ச்சையான நிலையில் கமல்ஹாசன் மன்னிப்பு தெரிவிக்க மறுத்தால் இந்த படத்தை வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து தயாரிப்பு நிறுவனம் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தக் லைஃப் சார்பில் வழக்கு தொடர்ந்து படத்தை வெளியிட அனுமதி கோரியுள்ளது. இந்த படம் குறித்து தினமும் பல்வேறு சர்ச்சைகள் எழுந்த வண்ணம் உள்ளதால் ரசிகர்கள் இந்த படத்தை பார்க்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனா மற்றும் நேச்சுரல் பியூட்டி ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘குபேரா’. தனுஷின் 51-வது படமான ‘குபேரா’ திரைப்படத்தை ஸ்ரீவெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரித்துள்ளது. இந்த படம் தனுஷின் நேரடி தெலுங்கு படமாகும். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வருகிற ஜூன் 20-ம்தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. நடிகர் தனுஷ், நாகார்ஜுனாவுடன் சேர்ந்து நடித்துள்ளதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது எனலாம். கமல்ஹாசனின் தக் லைஃப் திரைப்படம் வெளியாகி 2 வாரம் கழித்து ‘குபேரா’ வெளியாக உள்ளதால் அந்த படம் தனுஷிக்கு வெற்றிப்படமாக அமையுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
நடிகரும் ஆந்திர துணை முதல்-மந்திரியும், தெலுங்கு முன்னனி நடிகருமான பவன் கல்யாண் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் படம் 'ஹரி ஹர வீர மல்லு'. ஜோதி கிருஷ்ணா இயக்கி உள்ள இந்த படத்தில் நிதி அகர்வால் கதாநாயகியாக நடித்துள்ளார். மேகா ஸூர்யா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் ஏ.எம்.ரத்னம் இந்த படத்தை தயாரித்துள்ளது. ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி இசையமைப்பில் தெலுங்கு திரைப்படமாக உருவாகும் இப்படம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு பான் இந்தியா படமாக வரும் 12ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு பவன் கல்யாணின் படம் வெளியாக உள்ளதால் அவரது ரசிகர்கள் ஏகோபித்த எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டு இருக்கின்றனர்.
தெலுங்கு நடிகர் மோகன் பாபுவின் மகன் மனோஜ் மஞ்சுவின் நடிப்பில் உருவாகியுள்ள ‘கண்ணப்பா’ வரும் 27-ம் தேதியன்று நாடு முழுவதும் தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் , கன்னடம் ஆகிய மொழிகளில் ஒரு பான் இந்தியா திரைப்படமாக வெளியாகவுள்ளது. வரலாற்று பின்னணியில் கடவுள் சிவனை வழிபடும் அவரது தீவிர பக்தன் கண்ணப்பரை பற்றிய கதையை தழுவி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் நாயகியாக ப்ரீத்தி முகுந்தன் நடிக்க, இவருடன் மோகன்லால், பிரபாஸ், அக்ஷய்குமார், காஜல் அகர்வால் ஆகியோர் கௌரவ தோற்றத்தில் நடித்துள்ளனர். மேலும் இவர்களுடன் சரத்குமார், மதுபாலா, மோகன்பாபு, முகேஷ் ரிஷி, கருணாஸ், பிரம்மானந்தம், பிரம்மாஜி, ஐஸ்வர்யா, சிவபாலாஜி, சம்பத்ராம், சப்தகிரி, சுரேகா வாணி என பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்திருக்கிறது. மிகவும் பிரபலமான மகாபாரதம் தொடரை இயக்கிய பாலிவுட் இயக்குனர் முகேஷ் குமார் சிங் இத்திரைப்படத்தை இயக்கி இருக்கிறார்.
தெலுங்கில் வரலாற்று புதினத்தை தழுவி உருவாகி இருக்கும் பக்தி சார்ந்த ஆன்மிக திரைப்படம் 'கண்ணப்பா'இன்றைய ‘ஜென்ஸீ’ தலைமுறையினரைக் கவருமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். ‘கண்ணப்பா’ இந்திய சினிமாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஷ்ணு மஞ்சு பேட்டியில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.