

பழைய காலத்து தியேட்டர்களும் தொடக்க கால திரையரங்குகள் வளர்ச்சி நிலைகளும்
விஞ்ஞான உலகம் மீடியா வளர்ச்சியில் விண்ணைத் தொடும் அளவுக்கு முன்னேறி விட்டாலும், எல்லாவற்றையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு முன் வரிசையில் நிற்பது சினிமா என்ற மாபெரும் ஒன்று தான்! வீட்டு மாடல்கள், வீட்டு அலங்காரப் பொருட்களின் வளர்ச்சி, உணவில், உடையில் மாற்றம் என்று ஒரு சமுதாயத்தின் அத்தனை மாற்றங்களையும் எளிதாக மக்களிடம் கொண்டு சேர்க்கும் உயரிய சாதனம் இந்தச் சினிமாதான்! அதோடு மட்டுமல்ல! ஆட்சிப் பீடத்தில் அதன் நாயகர்களை அமர்த்தும் அளவுக்கு அதன் அதிகாரம் இன்று கொடிகட்டிப் பறக்கிறது!
உடைந்து போன இதயங்களை ஒட்டும் மருந்தாகவும், பெற்றோர், உடன்பிறந்தோர், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரின் அபரிமிதமான அன்புப் போராட்டங்களை அகிலத்திற்கு விலக்கும் கருவியாகவும், சரித்திர நாயகர்களை, ஆன்மிகப் பெரியோர்களை, இதிகாச நாயகர்களை, சுதந்திரப் போராட்ட வீரர்களின் அவலங்களையும், ஆற்றாமையையும், அடிபட்டுப் பட்ட துன்பங்களையும், இப்படி அனைத்தையுமே கண்முன்னே காட்டும் காலச் சக்கரமாக அது விளங்குகிறது.
காதலின் அத்தனை பரிமாணங்களையும் அங்குலம், அங்குலமாக அளந்து காட்டிய பெருமை சினிமாவுக்கு மட்டுமே உண்டு. காதலின் பெயரைச் சொல்லிக் கொண்டு காமுகர்கள் கன்னியரை வதைப்பதையும், வஞ்சிப்பதையும், வன்புணர்வுக்கு ஆளாக்கி வாழாவெட்டிகள் ஆக்குவதையும் படம் பிடித்துக் காட்டும் பக்குவச் சாதனம் திரைப்படங்களல்லவா! ஏன்?கடவுளின் திருவிளையாடல்களையும் இப்புவியினர் கண்டுணரச் செய்யும் சிறப்புமிகு மீடியமாகவும் அது நின்று இலங்குகிறது.
இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழின் முத்தாரம் அது என்றால் மிகையன்று. கவிஞர்களின் கருத்தாழமிக்க பாடல்கள், காதுக்கினிமையோடு சிந்தனையையும் தூண்டும் சிறந்த வசனங்கள், இனிய இசைகள், நல்ல நகைச் சுவைகள் இப்படி அனைத்தையுமே சாதாரணமானவர்களையும், சாமானியர்களையும் சென்றடையச் செய்தது சினிமாக்களே என்பது உலகறிந்த உண்மை.
பெரும் கிராமங்களில் டூரிங் டாக்கீஸாகவும், நகரங்களில் தியேட்டர்களாகவும் உருவெடுத்த அவை, மக்களின் மகத்தான பொழுது போக்கிடங்களாகத் திகழ்ந்து வந்தன. ஒரு கால கட்டத்தில், கோவை மாநகரில் அதிகமான தியேட்டர்கள் இருந்ததாகக் கூறுவார்கள். அப்பொழுதெல்லாம் தரை, பெஞ்ச், பேக் பெஞ்ச், சேர் என்ற பிரிவுகளில் அமர்விடங்களை அமைத்தார்கள். டூரிங் டாக்கீசில் தரை என்பது மணலால் நிரப்பப் பட்டிருக்கும். பீச்சில் அமர்ந்து சினிமா பார்ப்பதுபோல் மணலில் அமர்ந்து பார்க்கலாம். தியேட்டர்களின் கூரை பெரும்பாலும் தகரங்களாலேயே மூடப் பட்டிருக்கும்.
டிவி வந்த பிறகு தியேட்டர்களின் மகத்துவம் மெல்லக் குறைய ஆரம்பித்தது. அப்புறம் அவை திருமண மண்டபங்களாகவும், வணிகவளாகங்களாகவும், அதிகப் பேர் குடியிருக்கும் அடுக்குமாடிக் குடியிருப்புகளாகவும் உருமாற ஆரம்பித்தன.
’மல்டி பிளக்ஸ்’ (Multiplex) என்ற பெயரில் மால்களில் ஒரே இடத்தில் பல தியேட்டர்களை ஆரம்பித்து, ஸ்க்ரீன்-1, 2, 3 என்று பெயரிட்டு, மக்களை ஈர்க்க ஆரம்பித்தார்கள். ஒரே இடத்தில் பல ஸ்க்ரீன்கள் - அதாவது தியேட்டர்கள். இன்று உலகம் முழுவதுமே இந்த முறையே பின்பற்றப்பட்டு வருகிறது.
சமீபத்தில் புளோரிடாவின் டாம்பாவிலுள்ள ஏஎம்சி (AMC) தியேட்டர் வளாகத்திலுள்ள ஒரு திரையில் (ScreenX), ‘ஸ்பைடர்-மேன்:பிராண்ட் நியூ டே’ (Spider-Man:Brand New Day) பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. ஜூலை 31 அன்று ரிலீசான இப்படம், உலக அளவில் நல்ல வசூலைக் கொடுப்பதாகக் கூறப்படுகிறது. 3டி(3D) படம் இது. தியேட்டர் வாசலிலேயே நாம் போட்டுக் கொண்டு பார்க்க வேண்டிய ஸ்பெக்ட்சைக் கொடுத்து விடுகிறார்கள்.
நம்மூர் பல்திரையரங்க அமைப்புடனே இருந்தாலும், சற்று பகட்டு அதிகம். அகலமான குஷன் இருக்கைகளை ஈசிச் சேராக்கிக் கொண்டு, வசதியாக அமர்ந்து கால்களை நீட்டியபடி ரிலாக்ஸ்டாகப் படத்தைப் பார்க்கலாம். இதில் மற்றொரு புதுமை என்னவென்றால் மெயின் திரையோடு, வலது, இடது கைப் பக்கங்களிலுள்ள உயர்ந்த சுவர்களும் திரைகளாக ஆக்கப்பட்டுள்ளன.
பல நேரங்களில் அத்திரைகளிலும் படம் ஓடுகிறது. நியூயார்க் நகரில் எடுக்கப்பட்டுள்ள இப்படம் 3டி க்கு மிகவும் ஏற்றதாகவே உள்ளது.
2 மணி 25 நிமிடங்கள் ஓடும் இப்படத்தின் காட்சிகள் நன்றாக உள்ளன; சில இடங்கள் பிரமிக்க வைக்கின்றன. இப்படம் சிறுவர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.
இனி பல தியேட்டர்களிலும் இந்த முப்பக்கத்திரை அறிமுகமாகலாம். இந்த மூன்று திரை தியேட்டர்கள் ஏற்கெனவே நம் இந்திய நாட்டில் அறிமுகம் ஆகியுள்ளனவா என்பது தெரியவில்லை. இங்குள்ள தியேட்டர்களில் இதுவே அறிமுகம் என்கிறார்கள்.
நல்ல பொழுது போக்கும் நலமான சமுதாயத்திற்குத் தேவையல்லவா?
சினிமாவின் தொடக்க காலம் தொட்டு இன்றுள்ள அதிநவீன ScreenX தொழில்நுட்பம் வரையிலான வியக்கத்தக்க மாற்றங்களை அறிந்து, எதிர்கால பொழுதுபோக்கு உலகை முழுமையாகத் தெரிந்து கொள்ளலாம்.