

சோனி பிக்சர்ஸ் தயாரிப்பில் ராமாயணா படத்தின் பிரம்மாண்டமான ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி யூ ட்யூபில் செம ஹிட் அடித்திருக்கிறது. கூடவே சில சர்ச்சைகளும் எழுந்திருக்கின்றன.
1800 கோடி முதல் 2500 கோடி வரை இதன் பட்ஜெட் இருக்கலாம் என யூகிக்கப்பட்டாலும் மார்க்கெட்டிங்க் செலவுடன் சேர்த்து 4000 கோடி பட்ஜெட் என சொல்லப்படுகிறது.
ராமாயணம் ட்ரெய்லர் பார்த்த எல்லோராலும் ஒருமனதாக ஏற்றுக்கொண்ட ஒரு விஷயம். கே ஜி எப் ஹீரோ யாஷ் ராவணன் கேரக்டருக்கு மிகப் பொருத்தமான நபர் என்பது. அவரது ஆஜானுபாகுவான உடலமைப்பு, கம்பீர உடல் மொழி, கெத்து எல்லாம் சேர்ந்து ராவணன் கேரக்டரை நியாயப்படுத்தி விட்டது.
ரன்பீர் கபூர் மட்டும் ராமன் கேரக்டருக்கு செட் ஆகவில்லை என்கிறார்கள். ஆதி புருஷ் படத்தில் ராமனாக நடித்த பிரபாஸ் அளவுக்கு ரன்பீர் இல்லை என்கிறார்கள். அதை விட முக்கியமான சர்ச்சை சாய்பல்லவி சீதை கேரக்டரில் நடிப்பது தான்.
நயன்தாரா சீதையாக நடித்தபோதே ஒரு சர்ச்சை எழுந்தது. 'நயன்தாரா பல படங்களில் கிளாமராக நடித்தவர். சிம்பு, பிரபு தேவா ஆகியோருடன் கிசுகிசுக்கப்பட்டவர். அவர் எப்படி சீதையாக நடிக்கலாம்?' என்று கேள்வி எழுப்பி இருந்தார்கள் நெட்டிசன்கள். ஆனால் நயன்தாரா சீதை வேடத்தில் சிறப்பாக நடித்துப் பெயர் வாங்கினார்.
சாய் பல்லவி பிரேமம் படத்தில் மலர் டீச்சராக நடித்தபோதே 'நம் முகத்தில், கன்னத்தில் பருக்கள் இருக்கின்றன. ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்களா?' என்ற சந்தேகத்தில் தான் நடித்தார். ஆனால் ரசிகர்கள் அதை எல்லாம் பொருட்படுத்தாமல் பிரேமம் படத்தை மெகா ஹிட் ஆக்கினார்கள். மலர் டீச்சர் கேரக்டரும் பேசப்பட்டது. சாய் பல்லவியும் வெற்றிகரமான நாயகியாக வலம் வந்தார்.
ராமாயணா ட்ரெய்லர் வந்ததிலிருந்தே சாய் பல்லவி ட்ரோல் மெட்டீரியல் ஆனார். பல மீம்ஸ்கள் அணி வகுத்தன. சாய்பல்லவி நடிகை ஆகும் முன் ஒரு மேடை நிகழ்ச்சியில் நடனமாடினார். அதில் அவரது உள்ளாடை தெரியும் அளவுக்கு கேமரா கோணங்கள் அமைந்தது.
நடிகையாகப் புகழ் பெற்றபின் பொது நிகழ்ச்சிகளில் சேலை அணிந்து வருவதை சாய் பல்லவி வழக்கமாக்கிக்கொண்டார். இனி மாடர்ன் டிரஸ் அணிந்து பொது மேடைகளில் தோன்ற மாட்டேன் என்று அறிவித்து விட்டார். அதே போல் படங்கள் நடிக்கும்போதும் நம்ம ஊர் நடிகை ரேவதி, சுஹாசினி, நதியா போல் கண்ணியமான வேடங்களில் மட்டுமே நடித்தார். படத்தில் அவர் அணிந்து வரும் உடைகளும் கண்ணியமாகவே இருந்தன.
சாய்பல்லவிக்கு கர்லி ஹேர் நேச்சுரலாகவே. விக் எதுவும் வைக்காமல் நடித்து இருக்கிறார். சீதைக்கு எந்தக்காலத்தில் சுருட்டை முடி இருந்தது? சாய் பல்லவியின் நாசி பெரிதாக இருக்கிறது. சீதைக்கு அப்படி இல்லை என்பது போல் பொருத்தமே இல்லாத கமெண்ட்கள் வந்தவண்ணம் இருக்கின்றன.
மருத்துவக் குறைபாடு காரணமாக சாய்பல்லவிக்கு இயற்கையாகவே கன்னத்தில் சிவப்புப்பருக்கள் அதிகம். அதற்கான ட்ரீட்மெண்ட் எடுத்திருக்கிறார். அதையும் ட்ரோல் செய்கிறார்கள்.
ஒரு முன்னணி பிராண்ட் ஸ்கின் கேர் க்ரீம் கம்பெனி ரூ 2 கோடி ரூபாய் சம்பளம் கொடுத்து அவர்கள் தயாரிப்பு கிரீம்க்கு விளம்பரம் செய்யக் கேட்டுக்கொண்டபோது கூட, சாய்பல்லவி அதை மறுத்தவர். 'பணத்துக்காகப் பொய்யான விளம்பரங்களில் நடிக்க மாட்டேன். என்னை நம்பி அதை வாங்கி ரசிகைகள் பின் விளைவுகளுக்கு உள்ளானால் அதற்கு யார் பொறுப்பு?' எனக்கேட்டு அந்த வாய்ப்பை நிராகரித்து விட்டார். அவரது பாசிட்டிவான செயலைக்கூட ட்ரோல் செய்கிறார்கள்.
அதை விட உச்சக்கட்டக் காமெடி. சூர்ப்பனகையாக நடித்திருக்கும் ரகூல் ப்ரீத்தி சிங் சீதையாக நடித்த சாய் பல்லவியை விட அழகாக இருப்பதாகவும், அதெப்படி சூர்ப்பனகை சீதையை விட அழகியாகத் தெரியலாம்? எனவும் தேவை இல்லாமல் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
கைகேயியாக லாரா தத்தா வருகிறார். அவர் ஒரு சீனில் நகைகள் எதுவும் இல்லாமல் இந்தக்கால சேலை அணிந்து வருகிறார். அதையும் கிண்டல் செய்கிறார்கள்.
மண்டோதரியாக காஜல் அகர்வால் அழகாக இருப்பதாகக் கூறுகிறார்கள். அனுமனாக நடித்திருக்கும் சன்னி தியோல் ட்ரெய்லரில் ஒரு சீனில் கூட இல்லாததால் 'அனுமன் இல்லாத ராமாயணமா?' என்று கிண்டலடிக்கின்றனர்.
ஒரே ஒரு ட்ரெய்லர் தான் வந்தது. நான்கு நிமிட ட்யூரேஷனில். அதற்கு 45,388 ட்ரோல் கமெண்ட்ஸ் நிரம்பி விட்டன. இனி படம் வந்தால் என்ன கதியோ தெரியவில்லை.
பிரம்மாண்டமான சினிமா படைப்புகளைப் பற்றிய சினிமா உலக வாதங்கள் மற்றும் சமூக வலைதள விவாதங்களை முழுமையாகப் புரிந்து கொண்டு, விமரிசனங்களுக்குப் பின் உள்ள யதார்த்த உண்மைகளை நடுநிலையோடு தெரிந்து கொள்ள இந்த விரிவான அலசல் உங்களுக்கு உதவும்.