

திரையரங்கில் ஒரு திரைப்படத்தைப் பார்க்கச் செல்லும்போதோ, வீட்டில் ஓடிடி தளத்தில் படம் பார்க்கும்போதோ, அதன் பெயருக்குக் கீழே U, U/A, A போன்ற குறியீடுகளைப் பார்த்திருப்போம். இவை வெறும் எழுத்துகள் அல்ல; ஒரு திரைப்படம் யாருக்குப் பொருத்தமானது என்பதைத் தெரிவிக்கும் முக்கிய வழிகாட்டிகள். குறிப்பாக, குழந்தைகளுடன் படம் பார்க்கத் திட்டமிடும் பெற்றோர்கள் இந்தச் சான்றிதழ்களின் பொருளைத் தெரிந்துகொள்வது அவசியம்.
இந்தியாவில் திரைப்படங்களுக்குச் சான்றிதழ் வழங்கும் அமைப்பு மத்திய திரைப்படத் தணிக்கை வாரியம் (CBFC) ஆகும். திரைப்படத்தில் இடம்பெறும் காட்சிகள், வசனங்கள், வன்முறை உள்ளிட்ட அம்சங்களைப் பரிசீலித்து, அதற்கேற்ற சான்றிதழை இந்த அமைப்பு வழங்குகிறது.
U – அனைவரும் பார்க்கலாம்!
U என்பது Universal என்பதைக் குறிக்கிறது. இந்தச் சான்றிதழ் பெற்ற திரைப்படங்கள் பொதுவாக எல்லா வயதினரும் பார்க்க ஏற்றவை. குழந்தைகளும் குடும்பத்தினருடன் பார்க்கக்கூடிய வகையில் இவை அமைந்திருக்கும். இருப்பினும், பெற்றோர்கள் படத்தின் கதையையும் உள்ளடக்கத்தையும் தெரிந்துகொண்டு குழந்தைகளுக்கு ஏற்றதா என்பதை முடிவு செய்வது நல்லது.
U/A – பெற்றோர் வழிகாட்டுதல் அவசியம்!
U/A என்பது பெற்றோரின் வழிகாட்டுதலுடன் பார்க்க வேண்டிய திரைப்படங்களைக் குறிக்கிறது. 2023-ஆம் ஆண்டின் திருத்தப்பட்ட திரைப்படச் சான்றிதழ் விதிகளின்படி, U/A வகை வயதின் அடிப்படையில் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
U/A 7+ என்பது ஏழு வயதுக்குக் குறைவான குழந்தைகளுக்குப் பெற்றோர் வழிகாட்டுதல் தேவை என்பதைக் குறிக்கிறது.
U/A 13+ என்பது பதின்மூன்று வயதுக்குக் குறைவானவர்களுக்கும்,
U/A 16+ என்பது பதினாறு வயதுக்குக் குறைவானவர்களுக்கும் பெற்றோர் வழிகாட்டுதல் அவசியம் என்பதைக் காட்டுகிறது.
A – பெரியவர்களுக்கு மட்டும்!
A என்பது Adults Only என்பதைக் குறிக்கிறது.
இந்தச் சான்றிதழ் பெற்ற திரைப்படங்களைப் பதினெட்டு வயது நிரம்பியவர்கள் மட்டுமே திரையரங்குகளில் பார்க்க அனுமதிக்கப்படுகிறார்கள். வன்முறை, பாலியல் உள்ளடக்கம் அல்லது வயது வந்தோருக்கான பிற அம்சங்கள் காரணமாக இத்தகைய சான்றிதழ் வழங்கப்படலாம்.
S – குறிப்பிட்ட பிரிவினருக்கு!
S என்ற சான்றிதழ் குறிப்பிட்ட தொழில் அல்லது பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே திரைப்படம் திரையிடப்படுவதைக் குறிக்கிறது. உதாரணமாக, மருத்துவர்கள் அல்லது அறிவியல் துறையினருக்காக உருவாக்கப்பட்ட குறிப்பிட்ட உள்ளடக்கங்கள் இவ்வகையில் வரலாம்.
திரைப்படச் சான்றிதழ்களைப் பார்த்தவுடன் ஒரு படம் குழந்தைகளுக்கு முழுமையாகப் பொருத்தமானது என்று முடிவெடுத்து விடக் கூடாது. ஒரே வயது பிரிவைச் சேர்ந்த குழந்தைகளிடம் கூட புரிந்து கொள்ளும் திறனும் மனப்பக்குவமும் வேறுபடலாம். எனவே படத்தின் கதைச் சுருக்கம், முன்னோட்டக் காட்சிகள், அதில் இடம் பெறும் வன்முறை, பயமுறுத்தும் காட்சிகள் போன்றவற்றையும் பெற்றோர்கள் கவனிக்க வேண்டும்.
இன்றைய காலத்தில் திரையரங்குகளைத் தாண்டி ஓடிடி தளங்களிலும் ஏராளமான திரைப்படங்கள் வெளியாகின்றன. அத்தளங்களில் வயதுக்கேற்ற உள்ளடக்கத்தைத் தேர்ந்தெடுக்கும் வசதிகள், பெற்றோர் கட்டுப்பாடுகள் போன்றவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
குழந்தைகள் தாங்களாகவே எந்தப் படத்தையும் தேர்ந்தெடுத்துப் பார்க்கும் சூழலில், இந்த வசதிகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
குழந்தைகளுடன் படம் பார்க்கும் போது கவனம் செலுத்த வேண்டியவை!!
குழந்தைகளுடன் திரைப்படம் பார்க்கும் போது, கதையில் வரும் நல்லொழுக்கம், நட்பு, நேர்மை, குடும்ப உறவுகள் போன்ற அம்சங்களைப் பற்றி அவர்களுடன் பேசலாம். அதே சமயம் திரைப்படத்தில் காட்டப்படும் அனைத்தும் நிஜ வாழ்க்கையில் பின்பற்ற வேண்டியவை அல்ல என்பதையும் மென்மையாகப் புரிய வைக்க வேண்டும்.
சில திரைப்படங்களில் நகைச்சுவை என்ற பெயரில் பிறரை இழிவுபடுத்தும் வசனங்களும், பிரச்சினைகளைத் தீர்க்க வன்முறையைப் பயன்படுத்தும் காட்சிகளும் இடம் பெறலாம். இவற்றை குழந்தைகள் எவ்வாறு புரிந்து கொள்கிறார்கள் என்பதைக் கவனிப்பது முக்கியம். திரைப்படம் பார்த்த பிறகு அவர்களிடம் கருத்துக்களைக் கேட்பது, நல்லது எது, தவிர்க்க வேண்டியது எது என்பதைச் சிந்திக்க உதவும்.
திரைப்படச் சான்றிதழ் குறித்த விழிப்புணர்வு!!!
திரைப்படச் சான்றிதழ் குறித்த விழிப்புணர்வை குழந்தைகளுக்கும் வயதுக்கு ஏற்ற வகையில் எடுத்துரைக்கலாம். ஒரு படத்திற்கு வழங்கப்படும் சான்றிதழ் ஏன் முக்கியம், அது எதை உணர்த்துகிறது என்பதைப் புரிய வைத்தால், அவர்களும் பொறுப்புடன் திரைப்படங்களைத் தேர்ந்தெடுக்கக் கற்றுக் கொள்வார்கள். குடும்பத்துடன் அமர்ந்து படம் பார்ப்பது உறவுகளை வலுப்படுத்துவதோடு, நல்ல கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும் உதவுகிறது.
திரைப்படச் சான்றிதழ்களைத் தெரிந்துகொள்வது பெற்றோருக்குப் பயனுள்ள வழிகாட்டியாகும். குழந்தைகளின் வயது, மனப்பக்குவம், படத்தின் உள்ளடக்கம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு திரைப்படங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். சான்றிதழ் மட்டுமல்லாமல், படத்தின் கதை மற்றும் உள்ளடக்க விவரங்களையும் அறிந்துகொள்வது நல்லது. குழந்தைகள் என்ன பார்க்கிறார்கள் என்பதில் பெற்றோர் காட்டும் அக்கறை, அவர்களுக்குச் சிறந்த பொழுதுபோக்கையும் ஆரோக்கியமான சிந்தனை வளர்ச்சியையும் அளிக்கும்.
வாசகர்கள் U/A திரைப்பட சான்றிதழ் பற்றிய புதிய விதிகளைத் தெரிந்துகொண்டு, இளம் வயதினருக்குப் பொருத்தமில்லாத திரைப்படங்களிலிருந்து அவர்களைப் பாதுகாக்க உதவுகிறது.