விமர்சனம்: உலஜ் - அபத்தச் சிக்கல்களுடன் ஒரு ஆக்சன் படம்!

Ulajh Movie Review
Ulajh Movie Review
Published on

சதிவேலை, உளவுத்துறை தொடர்பான படங்கள் ஏராளம் வந்திருந்தாலும் இதைப் போன்ற வழுக்கலான படம் இதுவரை வந்ததில்லை என்று நிரூபிக்க வந்துள்ள படம் தான் ஜான்வி கபூர் நடிப்பில் நெட்பிளிக்சில் சமீபத்தில் வந்துள்ள உலஜ். உலஜ் என்றால் சிக்கல்கள் என்று அர்த்தமாம்.

இந்திய அரசுப்பணிகளில் உச்சங்கள் தொட்ட குடும்பம் ஜான்வி கபூரின் குடும்பம். தந்தை, தாத்தா எனப் பிரசித்தி பெற்ற கௌரவமான குடும்பம். ஜான்வி கபூர் இந்திய வெளியுறவுப் பணி (IFS) முடித்துக் காட்மாண்டுவில் பணிபுரிகிறார். இவருக்கு லண்டனில் டெபுடி ஹை கமிஷனராகப் பதவி உயர்வு கிடைக்கிறது. அதுவரை அந்தப் பணிக்கு நியமிக்கப்பட்டவர்களில் மிகவும் இளையவர் இவர் தான். இது அங்குப் பணியாற்றும் ரோஷன் மேத்யூ (குட்டி) உள்ளிட்ட பலருக்கு கடுப்பைக் கொடுக்கிறது. அங்கு செஃப் என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ளும் நகுலுடன் (குல்ஷன் தேவையா) தொடர்பு ஏற்படுகிறது. அது சற்று அத்துமீறிச் சென்று அவர்கள் நெருக்கமாக இருக்கும் வீடியோவை வைத்துப் பிளாக்மெயில் செய்யும்பொழுது தான் நகுலின் உண்மையான முகம் தெரிய வருகிறது. அதன் மூலம் சில வெளிநாட்டு ரகசியங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டிய சூழலில் சிக்கிக் கொள்கிறார் ஜான்வி. இந்திய அரசுக்கு மிகப் பெரிய தலைகுனிவை ஏற்படுத்தும் ஒரு தேச விரோதச் செயலில் ஈடுபடப் போகிறார் என்று தெரிந்ததும் அதை எதிர்த்துப் போராட ஆரம்பிக்கிறார். அடுத்து நடந்தது என்ன என்பது தான் கதை.

எப்படி அந்தப் பதவிக்கு ஜான்வி சரியான தேர்வில்லை என்று படத்தில் நினைக்கிறார்களோ அதுபோல் தான் இந்தப் படத்துக்கும் அவர் சரியான தேர்வில்லை. இது போன்ற அரைகுறையாக எழுதப்பட்ட ஒரு கதாநாயகி பாத்திரம் சமீபத்தில் வந்ததேயில்லை. அவர் நடந்து கொள்ளும் விதம் நமக்குத் பதற்றத்தை தருவதை விடக் கடுப்பைத் தான் தருகிறது. மிகப் பிரமாதமான நடிகர்களான அடில் ஹுசைன், ராஜேஷ் தைலங், அலி கான் என ஒரு பட்டாளமே நடித்திருந்தாலும் அவர்கள் ஓரங்கட்டப்பட்டு ஜான்வி கபூர் மட்டும் முன்னிருத்தப்பட்டு இருக்கிறார். ரோஷன் மாத்யூ கடைசியில் ஏதாவது செய்வது போல வந்து அவரும் அடங்கி விடுகிறார். ஒரு தூதரக அதிகாரி இப்படி எல்லாம் நடக்க முடியுமா, ஒரு தூதரகத்தில் தீவிரவாதி ஒருவர் சர்வசாதாரணமாக நடமாடமுடியுமா, அவ்வளவு விவரமானவராகக் காட்டப்படும் முற்போக்கு பெண்ணான ஜான்வி அந்த வீடியோவைக் கண்டு பயந்து தேச ரகசியங்களைப் பகிர்ந்து கொள்ள துணிவது எல்லாம் அபத்தக் களஞ்சியம்.

இதையும் படியுங்கள்:
மகாத்மா காந்தி இணையத் தொடருக்கு இசையமைக்கும் ஏ.ஆர்.ரஹ்மான்!
Ulajh Movie Review

மிகப் பெரிய உளவு அமைப்பான ராவில் இருந்தே ஒரு மத்திய அமைச்சருக்கு உதவுவதாகக் காட்டப்படுவதும் நினைத்த மாத்திரத்தில் நாடு விட்டு நாடு சென்று சதி செய்வதும் நம்பும்படி இல்லை. கிளைமாக்சில் அரங்கேறும் கொலை முயற்சி இன்னும் குழந்தைத்தனம் பாகிஸ்தான் பிரதமர் வருகிறார். ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் என்றால் அது இப்படியா நடக்கும். அதுவும் இந்திய சுதந்தர தினத்திற்கு ஒரு நாள் முன்பு. பார்ப்பவர்கள் யாருமே எதுவும் நினைக்கமாட்டார்கள். படம் வேகமாக எடிட் செய்யப் பட்டிருந்தால் போதும் என்று நினைத்து விட்டார் போல இயக்குனர் சுதான்ஷு ஷரியா.

இவ்வளவு சிறுபிள்ளைத் தனமாகச் செயல்படும் ஒரு நாயகி பாத்திரம். அதை மெச்சி மிக ரகசிய உளவு அமைப்பான பிளாக் கேட் என்ற அமைப்பில் ஜான்வியைச் சேரச் சொல்லிக் கடைசியில் அழைக்கிறார்கள். அப்பொழுது தானே சீக்வல் என்று ஒன்று ட்விஸ்ட் வைக்க முடியும். போதுண்டா சாமி.

பெரிதாகக் கதை என்றெல்லாம் ஒன்று வேண்டாம். சற்றே வேகமாகச் சில திருப்பங்களுடன் படம் இருந்தால் போதும் என்று நினைப்பவர்கள் பார்க்கலாம். இல்லை திரையரங்கில் தவறவிட்டது போல ஓடிடியிலும் இதைத் தவற விட்டு விடலாம். இழப்பொன்றுமில்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com