
சமீபத்தில் 2023-ம் ஆண்டுக்கான 71வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டது. இந்த விருது அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே எழுந்த பலதரப்பட்ட சர்ச்சைகள் இன்னும் ஓய்ந்தபாடில்லை. அதேபோல் சினிமா துறையை சேர்ந்த பிரபலங்களில் சிலர் மட்டுமே தவறுக்கு எதிராக தைரியமாக எதிர்த்து குரல் கொடுப்பார்கள். அவர்களில் ஒருவர் தான் நடிகை ஊர்வசி.
அவர் தேசிய திரைப்பட விருதை தேர்வு செய்த குழுவை (ஜூரி) சாரமாரியாக கேள்விகளால் துளைத்தெடுத்திருப்பது தான் தற்போது ஹாட் டாப்பிக்காக இணையத்தில் தலைப்பு செய்தியாக உலா வந்து கொண்டிருக்கிறது. பல்வேறு துறையை சேர்ந்தவர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டாலும், அவர்கள் அனைவரும் அமைதி காத்த நிலையில் நடிகை ஊர்வதி மட்டும் தன் மனதில் பட்டதை தைரியமாக வெளிப்படுத்தி உள்ளார்.
மலையாளத்தில் சிறந்த படமாக ‘உள்ளொழுக்கு’ திரைப்படம் தேர்வு செய்யப்பட்டு இதில் நடித்த ஊர்வசிக்கு சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டது. அதேபோல் தமிழில் பார்க்கிங் படத்திற்கு 3 விருதுகளும், ஜி.வி.பிரகாஷிக்கு சிறந்த இசையமைப்பாளருக்காக விருதும் வழங்கப்பட்டுள்ளது.
இதில் சிறந்த நடிகருக்கான விருதை ஜவான் படத்தில் நடித்த ஷாருக்கானுக்கு வழங்கப்பட்டது தான் தற்போது மிகுந்த சர்ச்சையை எழுப்பி உள்ளது. முழுக்க முழுக்க கமர்சியல் படத்தில் நடித்த ஒரு ஹீரோவுக்கு எந்த அடிப்படையில் தேசிய விருது வழங்கப்பட்டது என்று நடிகை ஊர்வசி தேர்வு குழுவை கேள்வி எழுப்பி உள்ளார்.
சிறந்த நடிகருக்கான தகுதி என்ன, ஆடுஜீவிதம் படமும் அந்த படத்தில் உயிரை கொடுத்து நடித்த பிரித்விராஜுக்கு ஏன் விருது வழங்கவில்லை என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார். மேலும் எந்த அடிப்படையில் தேசிய விருது வழங்கப்படுகிறது என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.
நடிகை ஊர்வசி கூட தனக்கு விருது கிடைத்தது பற்றி பெரிதாக சந்தோஷப்படாமல் உரிய திறமையாளர்களுக்கு விருது கிடைக்காமல் போய்விட்டதே என்கிற தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
அதேசமயம் சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், ஆடுஜீவிதம் எப்பேர்பட்ட படம், அந்த படத்திற்காக பிரித்விராஜும், இயக்குனர் பிளஸ்சியும் பல வருடங்களாக கடுமையாக கஷ்டப்பட்டார்கள். விருதுக்கு தகுதியான அந்த படத்தை குழுவினர் கண்டுகொள்ளாததற்கு முக்கிய காரணம் எம்புரான் படம் தான் என்ற தனது சந்தேகத்தையும் கூறியுள்ளார்.
பிரித்விராஜ், மோகன்லால் நடித்த எம்புரான் படத்தில் குஜராத் கலவரம் குறித்த சில நிமிட காட்சிகள் இடம் பெற்றிருந்ததால் அதற்கு இந்துத்துவா அமைப்புகளிடமிருந்து பலத்த எதிர்ப்பு கிளம்பியதையடுத்து அந்த படத்தில் இருந்து 17க்கும் மேற்பட்ட காட்சிகள் நீக்கப்பட்ட பின்னரே படம் வெளியாக அனுமதி அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை இயக்கியது பிரித்விராஜ் என்பதால் தான் அவர் நடித்த ஆடுஜீவிதம் படம் திட்டமிட்டு விருது குழுவினரால் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும், இதில் பின்னணியில் அரசியல் இருக்கிறது என்பதும் தான் ஊர்வசி சொல்ல வந்த கருத்து என்பது இதன் மூலம் தெளிவாகிறது.
எதுஎப்படியோ விருது கிடைத்தவர்கள் சந்தோஷமாக இருந்தாலும், விருது கிடைக்க வேண்டிய திறமையாளர்கள் புறக்கணிக்கப்பட்டதற்கு முதல் ஆளாக குரல் கொடுத்த ஊர்வசியின் தைரியத்தை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.