வெற்றி மாறன் இயக்கத்தில் உருவாகி வரும் வாடிவாசல் படம் குறித்த சூப்பர் அப்டேட் வெளியாகியுள்ளது.
சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். சூர்யாவின் திரைப்பயணத்திலேயே மிகப்பெரிய பொருட்ச்செலவில் தயாராகும் இப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளன. முதல் பாகம் அநேகமாக செப்டம்பர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளை வைத்து கங்குவா ரிலீஸ் தேதியை முடிவு செய்யமுடியும் என படக்குழுவிடமிருந்து தகவல்கள் வருகின்றன. இந்நிலையில் சூர்யாவின் நடிப்பில் கடைசியாக ஒரு படம் வெளியாகி இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. கடைசியாக எதற்கும் துணிந்தவன் திரைப்படம் 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளியானது. அதன் பிறகு சூர்யாவின் திரைப்படங்கள் வேறெதுவும் வெளியாகவில்லை. எனவே ஒட்டுமொத்த சூர்யாவின் ரசிகர்களும் கங்குவா திரைப்படத்தை தான் ஆவலாக எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கின்றனர். இந்த படம் அக்டோபர் மாதம் 10ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இதையடுத்து சூர்யா கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தன் 44 ஆவது திரைப்படத்தில் நடிக்க இருக்கின்றார். இதன் அறிவிப்பு கடந்த மாதம் வெளியிடப்பட்டது. இந்நிலையில் கங்குவா படத்திற்கு பிறகு சூர்யா கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் நடிக்க இருப்பதால் வெற்றிமாறனின் இயக்கத்தில் உருவாகும் வாடிவாசல் திரைப்படம் எப்போது துவங்கும் என்பதே கேள்விக்குறியாக இருக்கின்றது. வாடிவாசல் திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகி பல ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கும் நிலையில், கடந்த மாதம் கூட இயக்குனர் வெற்றிமாறன் விடுதலை படம் முடிந்த பிறகு வாடிவாசல் தான் என கூறி ரசிகர்களை குஷிப்படுத்தியிருந்தார்.
இது ஒரு பக்கம் இருக்க வாடிவாசல் படத்தில் இருந்து சூர்யா விலகிவிட்டதாகவும் வதந்திகள் பரவி வந்தது. இந்த நிலையில் தனியார் தொலைக்காட்சியின் விருது விழாவில் பேசிய தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, “உலகத் தமிழர்களுக்கு வாடிவாசல் திரைப்படம் அங்கீகாரமாக அமையும், மேலும் வாடிவாசல் படத்தில் நடிகர் சூர்யா தான் இதில் எந்த மாற்றமும் இல்லை, விரைவில் வாடிவாசல் படப்பிடிப்பு தொடங்கும்” என்று கூறினார். இந்த செய்தியை கேட்ட சூர்யா மற்றும் வெற்றிமாறன் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தோடு வாடிவாசல் படப்பிடிப்பை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.