
ஓடும் பேருந்தில், பறக்கும் விமானத்தில், ஓடும் ரயிலில் பாம் வைப்பது போன்ற படங்கள் அநேகம் வந்திருக்கின்றன. உலகின் அதிவேக ரயிலான ஜப்பானின் புல்லட் ட்ரெயினில் பாம் வைப்பதாக வந்து எழுபதுகளில் சக்கைப்போடு போட்ட படம் தான் தி புல்லட் ட்ரெயின். அதே போல் ஒரு கதை. டோக்கியோவை நோக்கிச் செல்லும் ஹயபுஸா 60 என்ற புல்லட் ட்ரெயின். நூறு கிலோமீட்டருக்குக் கீழே அதன் வேகம் குறைந்தால் அதில் வைக்கப்பட்டுள்ள குண்டு வெடித்து ஊரே சின்னாபின்னமாகி விடும். அதைத் தடுக்க நூறு பில்லியன் கொடுத்தால் செயலிழக்கச் செய்வதாக மிரட்டல். இதன் பின் என்ன ஆனது என்பது தான் புல்லட் ட்ரெயின் எக்ஸ்ப்ளோஷன்.
நெட்பிளிக்ஸில் வெளியாகியுள்ள இந்தப்படமும் மற்றப்படங்கள் போலத்தான். இது போன்ற கதைகளில் முடிவு நல்லபடியாக இருக்கும் என்பது தெரியும். ஆனால் எப்படி அது நடக்கிறது என்பதில் தான் உள்ளது திரைக்கதையின் சாமர்த்தியம்.
எந்தவிதமான முன்னேற்பாடுகளும் இல்லாமல் முதல் காட்சியிலேயே கதைக்குள் சென்று விடுகிறது படம். பாத்திரங்களை அறிமுகப்படுத்துவதில் ஒரு பாணி உள்ளது. ஒவ்வொரு முக்கிய பாத்திரமாகக் காட்டி ஒரு விதமான எதிர்பார்ப்பை உண்டாக்குவது. இதில் கதை நகர நகரப் பாத்திரங்களை அறிமுகப்படுத்துகிறார் இயக்குநர். சில பாத்திரங்களைப் பார்க்கும் போதே இவர் இறந்து விடுவார். இவர் தான் கெட்டவர் என்று சந்தேகம் தோன்றும். அதில் தான் இந்தக் கதையில் ஒரு முக்கிய டுவிஸ்ட். அதன் பிறகு அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது படம்.
"நாங்கள் தீவிரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில்லையென அரசாங்கம் சொல்ல, எனது நூறு பில்லியன் பணத்தை அரசாங்கம் தரத் தேவையில்லை. நாட்டு மக்கள் தங்கள் சொந்தப் பணத்திலிருந்து தர வேண்டும்" என்று குண்டு வைத்தவர் சொல்ல ஆரம்பிக்கிறது அதிகாரச் சண்டைகள்.
அந்த ரயிலில் பணியாற்றும் ஓர் எழுத்தாளர் நன்கொடை கொடுக்க ஒரு வலைத்தளத்தைத் துவங்க மக்கள் அதில் பணம் போடத்துவங்குகிறார்கள். " நான் ஒரு சாமானியன். நீங்கள் ஓர் எம்பி. நீங்கள் செய்ய வேண்டியதை நான் செய்கிறேன். இதில் உங்களுக்கு என்ன கோபம்" என்று அவர் அதே ரயிலில் பயணம் செய்யும் அரசியல்வாதியிடம் கேட்க, எல்லா ஊரிலும் இப்படித்தானா என்ற கேள்வி எழுகிறது.
இது போன்ற சமயங்களில் நடக்கும் வார்த்தைச் சண்டைகள், கைகலப்புகள், உணர்வுப்பூர்வமான காட்சிகள் இதிலும் உண்டு. ஆனால் அதில் அதிகக் கவனம் செலுத்தாமல் இந்தச் சிக்கலிலிருந்து ரயிலை மீட்க அதிகாரிகள் படும் பாட்டை காட்டியதில் நின்று பேசுகிறது இந்தப் படம்.
அந்தப் பாதுகாப்பு அதிகாரியாக வரும் கசாகி என்ற பாத்திரத்தில் நடித்தவர் அசத்தியிருக்கிறார். எல்லாம் முடிந்து ஊழியர்கள் கொண்டாடும் வேளையில் "அந்த வேலை முடிந்தது. அடுத்ததாக ஸ்தம்பித்து நிற்கும் ரயில் பாதைகளைச் சரி செய்யுங்கள். மக்கள் எந்தவிதமான சிரமங்களுக்கும் இனிமேல் ஆட்படக் கூடாது" என்று சொல்லும்போது சபாஷ் என்று சொல்லத் தோன்றுகிறது.
"தண்ணீர் குடித்தால் பாத்ரூம் செல்ல நேரிடும். இப்போது உள்ள நிலையில் அது என்னால் முடியாது. எனவே வேண்டாம். ஸ்பீடிங் கியரில் உள்ள கையை எடுக்க முடியாமல் மரத்துப் போய்விட்டது. ஒவ்வொரு விரலாக அதை விடுவிக்க முடியுமா?" என கேட்கும் அந்த ரயிலை ஓட்டும் பெண்,
"எல்லாருக்கும் பிடிக்காது என்றாலும் அவர் குற்றம் செய்திருந்தாலும் இந்த ரயிலில் அவர் ஒரு பயணி. அவர் எனது பொறுப்பு" எனச் சொல்லும் நடத்துநர்,
"தங்களுக்குப் பிடித்த பொய்களை நிஜம் என்றே நம்பி மக்கள் வாழ ஆரம்பிக்கும்பொழுது ஆரம்பிக்கிறது சமூகத்தின் அக்கறையின்மையும், பொறுப்பற்றத்தன்மையும். இந்தச் சிக்கலிலிருந்து வெளிப்பட நான் சொல்லும் முறையையும் நீங்கள் ஏற்றுக் கொள்ள மறுக்கிறீர்கள். இதிலிருந்து தான் மனிதர்கள்மேல் உள்ள என் நம்பிக்கையின்மை இன்னும் வலுப்படுகிறது" என்று சொல்லும் மாணவி,
"இதோ பார். அரசாங்கம் செய்யாத செய்ய முடியாத ஒரு காரியம். மக்களாகச் சேர்ந்து நூறு பில்லியன் நன்கொடையாகக் கொடுத்திருக்கிறார்கள். அவர்களுக்கு ரயிலும் ரயிலில் உள்ளவர்களும் என்ன விதத்திலுறவு. மனிதமும், மனிதர்களும் எப்பொழுதும் இருப்பார்கள்" எனச் சொல்லும் காவலதிகாரி,
"ரயிலைக் காப்பாற்ற நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி காற்றில் புகையைப் பிடிக்க முயல்வது போல் தான். கடவுள் காக்கட்டும்" என்று சொல்லும் அமைச்சர்...
இது போன்ற வசனங்கள் தான் இந்தப்படத்தின் இன்னொரு பலம். டெக்னிக்கலாக இந்தப்படத்திற்கு என்ன தேவையோ அதை ஒளிப்பதிவாளரும், தொகுப்பாளரும் சரியாகச் செய்துள்ளனர்.
படமே வேகமாக ஓடும் ரயிலைப்பற்றியதாக இருந்தாலும் சில இடங்களில் சற்று மெதுவாக நகர்வது போலத் தோன்றுவது குண்டு வைத்தவர்கள் தங்கள் காரணத்தைச் சொல்லும் போதும், அதில் எந்தவிதமான அழுத்தமும் இல்லாத போதும் தான். அதைக் கொஞ்சம் கண்டிப்பாக இவர்கள் சரி செய்திருக்கலாம். பழைய படத்தையும் இதையும் இணைக்கும் ஒரு முடிச்சைக் கண்டுபிடித்ததெல்லாம் சரி. ஆனால் அதைக் காட்சிப்படுத்திய விதத்தில் சற்றுத் தெளிவின்றி அழுத்தமும் இல்லாமல் கோட்டை விட்டிருக்கிறது இந்த டீம்.
ஸ்பீட், ஸ்பீட் 2, புல்லட் ட்ரெயின், பர்னிங் ட்ரெயின் போன்ற படங்களெல்லாம் உங்களுக்குத் தெரியும் பிடிக்கும் என்றால் இந்தப்படம் உங்களைக் கண்டிப்பாகக் கவரும்.