#BREAKING: அதிர்ச்சியில் தமிழ் திரையுலகம்: பிரபல இசையமைப்பாளர் தேவா காலமானார்!

ஆஸ்திரேலிய பாராளுமன்ற கௌரவம் , சிங்கப்பூர் ஜனாதிபதியின் பிடித்தமான இசையமைப்பாளர்.1986-ல் தொடங்கி 40 ஆண்டு காலம் தமிழ் இசையை ஆளுமை செய்த தேவாவின் இசைப் பயணம் நிறைவடைந்தது.
Musician Deva Honoured Aus Parliament
Deva PassedFacebook
ராஜமருதவேல்

வி.ராஜமருதவேல், பொறியியல் பட்டதாரி; வெளிநாடுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். தற்போது வங்கி மற்றும் காப்பீட்டுத் துறையில் பணிபுரிகிறார். கல்கி ஆன்லைனில் ஆன்மீகம், ஆரோக்கியம், பயணம், மோட்டிவேஷன், விளையாட்டு, சுற்றுச்சூழல், கலை-கலாச்சாரம், சினிமா ஆகிய பிரிவுகளில் எழுதி வருகிறார்.

Updated on: 

தமிழ் சினிமாவின் மிகப் பிரபலமான இசையமைப்பாளராக இருந்த தேவா இன்று காலை காலமானார் , அவருக்கு வயது 75 . வேலூர் மாவட்டத்தில் உள்ள மாங்காடு என்னும் கிராமத்தில் தேவனேசனாக பிறந்தார். சிறுவயது முதலே இசையின் மீதும் கானா பாடல்களின் மீதும் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். சிறுவனாக இருக்கும்போது கானா பாடல்களை எழுதி பாடும் அளவிற்கு தேவா திறமை பெற்று இருந்தார்.

1980 களில் சென்னைக்கு வந்த தேவா இளையராஜாவின் இசை குழுவில் பணியாற்றி வந்தார். கோவில்கள் மற்றும் திருவிழாக்களில் கானா பாடல்களைப் பாடி புகழ்பெற்றார். ஒரு சில ஆன்மீக பாடல்களுக்கும் இசையமைத்து பிரபலமடைந்தார். 1986 ஆம் ஆண்டு 'மாட்டுக்கார மன்னாரு' திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். அந்த திரைப்படம் அதிகமாக பிரபலமாகாததால் அடுத்த வாய்ப்பு தேவாவிற்கு உடனடியாக கிடைக்கவில்லை.

அந்த காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் போட்டிகள் எதுவுமின்றி இசையமைப்பாளராக இளையராஜா உச்சத்தில் இருந்தார். அந்த நேரத்தில் தமிழ் சினிமாவில் ஏராளமான இசையமைப்பாளர்கள் அறிமுகமானாலும் எவராலும் நிலைத்து நிற்க முடியவில்லை. அத்தகைய சூழலில் 'வைகாசி பொறந்தாச்சு' திரைப்படத்தில் தேவா இசையமைத்த பாடல்கள் பிரபலமாக தொடங்கியது. 1900 களின் காலகட்டத்தில் தேவா வளர ஆரம்பித்த நேரத்தில், இசையமைப்பாளராக ஏ.ஆர். ரஹ்மான் மிகப்பெரிய உச்சத்தை தொட்டிருந்தார்.

இரண்டு இசை ஆளுமைகள் இருந்த போதும் தேவாவின் வளர்ச்சி பெரிதாக இருந்தது. தேவா இசையமைத்த ரஜினிகாந்த் நடிப்பில் உருவான அண்ணாமலை திரைப்படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. அந்த திரைப்படத்தின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணம் தேவாவின் துள்ளலான பின்னணி இசை தான். அதிலிருந்து ரஜினிகாந்த்க்கு தனியாக பின்னணி இசை அமைப்பது வழக்கமானது. அண்ணாமலை திரைப்படத்தில் ரஜினிகாந்த் டைட்டில் கார்ட்டிற்கு தேவா அமைத்த இசை தான் , 30 ஆண்டுகளைக் கடந்தும் இன்றும் ரஜினிகாந்தின் டைட்டில் கார்டிற்கு இசையாக இருக்கிறது.

Deva passed
Deva passed facebook

அண்ணாமலை வெற்றியை தொடர்ந்து , ரஜினியின் பாட்ஷா , அருணாச்சலம் , கமலின் அவ்வை சண்முகி, பஞ்சதந்திரம், பம்மல் கே சம்பந்தம் ஆகிய திரைப்படங்களுக்கும் இசையமைத்திருந்தார். குறிப்பாக பிரபு, சரத்குமார், சத்தியராஜ், அஜித், விஜய், பிரசாந்த், பிரபுதேவா, சூர்யா , அப்பாஸ், வினித் உள்ளிட்ட அந்த முன்னணி கதாநாயகர்களின் திரைப்படங்களுக்கு தொடர்ச்சியாக இசையமைத்து முன்னணியில் இருந்தார். அன்றைய காலகட்டத்தில் இந்த நடிகர்களின் ஆஸ்தான இசையமைப்பாளராகவும் இருந்தார்.

தேவா இசையமைப்பில் வெளியான சூரியன், ஆசை, காதல் கோட்டை, முகவரி, குஷி, வாலி , பொற்காலம் , ஒன்ஸ்மோர், நேருக்கு நேர் , காலமெல்லாம் காதல் வாழ்க போன்ற திரைப்படத்தின் பாடல்கள் எல்லாம் நீண்ட காலமாக ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தவை. சிங்கப்பூரின் ஜனாதிபதியாக இருந்த எஸ்.ஆர்.நாதன் இசையமைப்பாளர் தேவாவின் தீவிர ரசிகர். அவருக்கு தேவா இசையமைப்பில் 'பொற்காலம் ' திரைப்படத்தில் வெளியான " தஞ்சாவூரு மண்ணு எடுத்து " என்ற பாடல் மிகவும் பிடித்தமானது. அவர் மறைந்த அன்று முழுக்க அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இந்த பாடல் நாள் முழுக்க ஒலிக்கப்பட்டு வந்தது.

கடந்த 2025 ஆண்டு தேவாவின் இசை உலக சாதனையை பாராட்டி , ஆஸ்திரேலியா பாராளுமன்றம் அவரை கௌரவ சபாநாயகராக அமர வைத்து கௌரவித்தது. ஆஸ்திரேலியா பாராளுமன்றத்தில் முதல் முறையாக ஒரு இந்திய இசையமைப்பாளருக்கு இந்த கௌரவம் வழங்கப்பட்டுள்ளது.

சினிமா உலகில் தமிழ் ,தெலுங்கு ,கன்னடம் , மலையாளம் , ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் 400 திரைப்படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். இவரது இசை உதவியாளர்களாக இருந்த , அவரது சகோதரர்கள் சபேஷ் - முரளி பிரிந்து சென்ற பின்னர் , அவர் இசையமைப்பது குறைந்து போனது. தேவாவின் மகன் ஶ்ரீ காந்த் தேவாவும் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக உள்ளார்.

இசைத்துறையில் 40 ஆண்டுகாலம் தாண்டி அவரது புகழ் பரவியுள்ளது. இந்நிலையில் இன்று அவர் தனது வீட்டில் காலமானார். தேவா மறைந்தாலும் அவரது இசை எப்போதும் ஒலித்துக் கொண்டிருக்கும்.