

நாளைய தீர்ப்பு திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி , வெளியாகவுள்ள ஜனநாயகன் திரைப்படம் வரை தமிழ்நாட்டு ரசிகர்களின் மனதை ஆட்சி செய்த விஜய் , ஜனநாயக திருவிழாவின் மூலம் இன்று தமிழ்நாட்டை ஆட்சி செய்கிறார்.
1984 ஆம் ஆண்டு விஜயகாந்த் நடிப்பில் வெளியான 'வெற்றி' என்ற திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமானவர் விஜய். இந்த திரைப்படத்தில் சிறுவயது விஜயகாந்தின் வேடத்தில் விஜய் நடித்திருந்தார். அவரது அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் இந்த திரைப்படத்தை இயக்கியிருந்தார். ஜோசப் விஜய் என்ற இயற்பெயர் இருந்தாலும் அவரின் திரை பெயராக விஜய் என்றே அவரது தந்தை சந்திரசேகர் பயன்படுத்திக் கொண்டார்.
விஜய் அப்பா சந்திரசேகருக்கு விஜய் என்ற பெயரின் மீது ஒரு அதீத நம்பிக்கை , அன்பு , செண்டிமெண்ட் அல்லது வேறு எது வேண்டுமானாலும் கூறலாம். அந்தளவுக்கு விஜய் என்ற பெயரை அவரது ஏராளமான திரைப்படங்களில் பயன்படுத்தியுள்ளார். 10 க்கும் மேற்பட்ட விஜயகாந்த் நடிப்பில் தான் இயக்கிய படங்களில் விஜய் என்ற பெயர் தான் அவருக்கு சூட்டி இருக்கிறார் , அதிலும் 'சட்டம் ஒரு விளையாட்டு’ என்ற படத்தில் விஜயகாத்தின் பெயர் 'ஜோசப் விஜய்' என்பது குறிப்பிடத்தக்கது.
விஜயகாந்த் மட்டுமல்ல , ரஜினி காந்த், தெலுங்கு மெகாஸ்டார் சிரஞ்சீவி , ஹிந்தி நடிகர்கள் ரிஷி கபூர் , ஜாக்கி ஷெராப் , ஜிதேந்திரா , மிதுன் சக்கரவர்த்தி, கன்னட நடிகர் சங்கர் நாக், ரகுமான் , சரண் உள்ளிட்ட பல நடிகர்கள், தன்னுடைய திரைப்படத்தில் நடித்தபோது விஜய் என்ற பெயரையே அவர்களின் கதாபாத்திரங்களுக்கு சூட்டியிருந்தார்.
பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாபச்சன் நடித்து மிகப்பெரிய வெற்றி பெற்ற ' தீவார் ' திரைப்படத்தில், அவரது கதாபாத்திரத்தின் பெயர் விஜய். அதிலிருந்து தனக்கு விஜய் என்ற பெயர் மிகவும் பிடித்தமானது என்று சந்திரசேகர் ஒரு பழைய நேர்காணலில் குறிப்பிட்டிருந்தார்.
90 களில் பிற்பகுதியில் விஜய் வெற்றிகரமான நடிகராக உருவெடுத்தார். விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உதவியாளராக இருந்த ஷங்கர், தமிழ் சினிமாவின் மிகப் பெரிய இயக்குனராக மாறி இருந்த காலகட்டம் அது. ஷங்கர் விஜயை வைத்து ஒரு திரைப்படம் எடுக்க வேண்டும் என்பது அவரது நீண்ட நாள் திட்டம்.
ஷங்கர் ஆரம்பத்தில் முதல்வன் திரைப்படத்தை ரஜினிகாந்தை வைத்து இயக்குவதற்கு திட்டமிட்டு இருந்தார். அந்த காலகட்டத்தில் ரஜினிகாந்த் எதிர்காலத்தில் அரசியல் கட்சி துவங்குவதாக தமிழ்நாட்டில் பரபரப்பாக பேசப்பட்டது. ரஜினியின் வாய்ஸ்க்கு மிகப்பெரிய செல்வாக்கு இருந்த நேரம் என்பதால் , முதல்வன் திரைப்படத்தில் நடிப்பதற்கு ரஜினியை ஷங்கர் அணுகினார். ஆனால், திரைப்படத்தின் கதை அன்றைய தமிழக அரசியல் சார்ந்திருந்ததால் , ரஜினி மறுத்து விட்டார்.
ஷங்கர் அடுத்ததாக விஜயை வைத்து முதல்வன் படத்தை இயக்க பேச்சுவார்த்தை தொடங்கினார். அப்போது விஜய் வளர்ந்து வரும் காலகட்டம் என்பதாலும், அப்போது தமிழக முதல்வராக மு.கருணாநிதி இருந்ததாலும் , அரசியல் பின்னணி கொண்ட இந்த கதையில் விஜய் நடிக்க வேண்டாம், என்று சந்திரசேகர் முடிவு செய்ததாக கூறப்படுகிறது. சந்திரசேகர் தீவிரமான திமுக ஆதரவாளராக நீண்ட காலம் இருந்தவர் , கருணாநிதி கதை வசனத்தில் விஜயை வைத்து திரைப்படங்களும் இயக்கியுள்ளார்.
அன்று திரையுலகில் உச்சத்தில் இருந்தபோது ஷங்கர் இயக்கத்தில் உருவான 'முதல்வன்' திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்ட விஜய், இன்று நிஜ அரசியலில் தடம் பதித்து, யாரும் எதிர்பாராத வகையில் மிக குறுகிய காலத்தில் தமிழகத்தின் முதலமைச்சர் நாற்காலியை கைப்பற்றி நிஜ 'முதல்வனாக' சாதனை படைத்துள்ளார். சினிமாவில் தவறவிட்ட ஒரு மாபெரும் பாத்திரத்தை, நிஜ வாழ்க்கையில் மக்கள் பேராதரவோடு அவர் அடைந்திருப்பது அரசியல் அரங்கில் மிகப்பெரிய ஆச்சரியத்தையும் புதியதொரு அரசியல் சகாப்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது என்றே கூற வேண்டும்.