

தமிழக முதல்வர் விஜயின் இறுதி திரைப்படமாக 'ஜனநாயகன்' இருக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதனால், அந்த திரைப்படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்து வந்தது. அதே நேரம் அந்த திரைப்படம் ஏராளமான சிக்கல்களையும் , தணிக்கை சான்றிதழ் பெறுவதில் பிரச்சனைகளையும் சந்தித்தது. இது தொடர்பாக வழக்குகள் உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்திற்கு மாறி மாறி சென்று வந்தன.
ஜனநாயகன் திரைப்படத்திற்கு சிக்கல்கள் தொடர்ந்து நீடித்து வந்த நிலையில் , அதன் வெளியீட்டு தேதியும் தாமதமாகி வந்தன. இந்த நிலையில் சட்டமன்ற தேர்தலில் விஜய் அதிக கவனம் செலுத்தி வந்தார். தேர்தலில் வெற்றிவாகை சூடிய நடிகர் விஜய் தமிழ்நாட்டின் முதல்வராகவும் பதவி ஏற்றுக்கொண்டு உள்ளார். கிட்டத்தட்ட ஜனநாயகன் திரைப்படத்தின் நோக்கத்தினை தமிழக வெற்றி கழகம் அடைந்த பின்னர், அதன் ரிலீஸ் குறித்து அதிகம் விவாதிக்கப்பட்டது.
விஜய் முதல்வராகி விட்டதால் அவர் மீதான எதிர்பார்ப்புகள் தமிழ்நாடு மட்டுமின்றி மற்ற மாநிலங்களிலும் அதிகரித்துள்ளது. பல மாநில மக்கள் விஜயின் ஜனநாயகன் திரைப்படத்தை பார்ப்பதற்கு மிகுந்த ஆவலாக உள்ளனர். மேலும் இந்த திரைப்படத்தில் விஜய்க்கு எப்போதும் வழங்கப்படும் 'தளபதி' என்ற அடைமொழியுடன், "தமிழக முதல்வர் விஜய்" என்ற தலைப்புடன் வெளியிட வேண்டும் , என்று அவரது ரசிகர்கள் தயாரிப்பாளரிடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.
கடந்த பல மாதங்களாக மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியத்தின்(CBFC) தணிக்கை அனுமதி பெற ஜனநாயகன் திரைப்பட குழுவினர் போராடிக் கொண்டுள்ளனர். ஆனாலும் தற்போது ஜூன் மாதத்தில் இந்த திரைப்படம் வெளியாக உள்ளது என்ற தகவல் இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
திரையரங்குகளில் டிக்கெட்களை முன்பதிவு செய்யும் ஆப்பான புக் மை ஷோ (BookMyShow) மற்றும் டிஸ்ட்ரிக் (District) ஆகிய இணையதளங்கள் ஜூன் மாதத்தில் ஜனநாயகன் திரைப்படத்தை பட்டியலிட்டுள்ளது. குறிப்பாக புக் மை ஷோ ஜூன் மாதத்தில் ஜனநாயகன் திரைப்பட போஸ்டரை காட்சிப் படுத்தியுள்ளது. டிஸ்ட்ரிக்ட் தளம் ஜூன் 19 ஆம் தேதியில் இந்த திரைப்படத்தை காட்சிப்படுத்தியுள்ளது.
விஜயின் பிறந்தநாள் ஜூன் 22 ஆம் தேதி என்பதால், அதை முன்னிட்டு திரைப்படத்தை வெளியிடுவதற்காக தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. விஜய் பிறந்தநாளை முன்னிட்டு அவரது இறுதி திரைப்படத்தை வெளியிட்டால் பெரிய அளவில் படத்தின் வெற்றியும் இருக்கும், ரசிகர்களும் பிறந்தநாள் பரிசாக கொண்டாடுவார்கள் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனநாயகன் திரைப்பட தயாரிப்பாளர் வெங்கட் .கே.நாராயணா ," படம் இன்னும் சென்சார் போர்டின் தணிக்கை சான்றிதழை பெறுவதற்கு காத்திருக்கிறது. அது கிடைத்தவுடன் உடனடியாக ரிலீஸ் தேதி குறித்த செய்தி அறிவிக்கப்படும். இந்த திரைப்படம் உலகெங்கிலும் உள்ள விஜய் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ட்ரீட்டாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதற்கு தகுந்தது போல் படத்தின் வெளியீடு மிகவும் பிரம்மாண்டமாக இருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.