கோடிக்கணக்கில் செலவு செய்து படம் எடுக்கிறோம் என்ற விளம்பரங்களுக்கு மத்தியில் ஒரு சுவையான தகவல். உலகிலேயே மிகக் குறைந்த செலவில் எடுக்கப்பட்ட வெற்றிகரமான திரைப்படம் "ரெஸ்கியூட் பை ரோவர்" (Rescued by rover) என்ற ஆங்கில திரைப்படம் தான். லெனின் ஃபிட்ஷாமன் இயக்கத்தில் 1905 ம் ஆண்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தை எடுத்து முடிக்க ஆன மொத்த செலவு 37 முதல் 40 அமெரிக்க டாலர்கள் தான்.
2015ல் ஹாலிவுட்டில் உருவாகி உலகெங்கும் வெளியான "ஸ்டார் வார்ஸ்: தி ஃபோர்ஸ் அவேகன்ஸ்" (Star Wars: The Force Awakens) எனும் ஆங்கில படம், திரைப்பட வரலாற்றில் அதிக பொருட்செலவில் எடுத்த திரைப்படம். பிரபல ஹாலிவுட் முன்னணி ஹீரோ ஹாரிசன் ஃபோர்டு (Harrison Ford) கதாநாயகனாக நடித்து, ஜே ஜே அப்ரம்ஸ் (JJ Abrams) இயக்கிய இப்பட செலவு சுமார் ரூ.3000 கோடிகள் உலகில் அதிக செலவில் எடுக்கப்பட்ட திரைப்படம் இது தான்.
ரீலிசான நாளிலிருந்து தொடர்ந்து 11 ஆண்டுகளுக்கு மேலாக ஓடிய திரைப்படம், "தில் வாலே துல்ஹானியாலே ஜாயேங்கே" என்ற ஹிந்தி திரைப்படம் தான். ஷாருக்கான், கஜோல் இணைந்து நடித்த திரைப்படம் 1995 ல் ரிலீசானது. மும்பை மராட்டா மந்திர் என்ற திரையரங்கில் தான் இந்த படம் ரிலீசாகி தினமும் பகல் காட்சியாக 11 ஆண்டுகள் ஓடி உலக சாதனை படைத்தது.
தி எய்ஸ் ஆப் லாரா மார்ஸ்" ( The eyes of Laura Mars) என்ற திரைப்படம் 1978 ம் ஆண்டு அமெரிக்காவில் வெளியாகி சக்கை போடு போட்டது. பின்னர் அதே பெயரில் அந்தப்படம் பற்றிய புத்தகம் வெளியிடப்பட்டது. இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் படத்தில் கிடைத்ததை விட புத்தகத்தில் அதிக லாபம் கிடைத்தது தான்.
ஜேம்ஸ் பாண்ட் 007 எந்த திரைப்படத்திலும் பாடல் பாட மாட்டார். ஆனால் ஒரே ஒரு திரைப்படத்தில் அவர் பாடல் பாடி இருக்கிறார். அது தான் "டாக்டர் நோ" என்ற திரைப்படம். இது 1962 ம் ஆண்டு சீன் கானரி ஜேம்ஸ் பாண்டாக நடித்து வெளிவந்த திரைப்படம்.
1967ம் ஆண்டு செக்கோஸ்லோவாகியா நாட்டில் "ஹேப்பி எண்ட்"என்ற பெயரில் ஒரு திரைப்படம் வெளியானது. இதில் என்ன செய்தி? இந்த திரைப்படம் முழுவதுமே தலைகீழாக திரையில் தெரியும்படி கட்டப்பட்டது. நடப்பவர்கள் பின்னோக்கியபடி நடந்தார்கள். சாப்பிடுபவர்களின் உணவு வாயிலிருந்து தட்டிற்கு வந்து விழும், கார்கள் பின்னோக்கியே ஓடும்,படத்திற்கான ஆரம்ப காட்சியில் 'கில்லெட்டில்'வெட்டப்பட்ட தலை ஒன்று சேர்வது போன்ற காட்சி தான் இடம் பெற்றது. இந்த டார்க் காமெடி படத்தை ஓல்ட்ரிச் லிப்ஸ்கி இயக்கியிருந்தார்.
இன் தி நேம் ஆஃப் தி ஃபாதர் (In the Name of the Father) என்பது 1993-ல் வெளியான ஒரு வாழ்க்கை வரலாற்று குற்ற நாடகத் திரைப்படம். இது, 1974-ல் நடந்த கில்ட்ஃபோர்ட் பப் குண்டுவெடிப்புகளில் தவறாகக் குற்றம் சாட்டப்பட்டவர்களின் கதையை அடிப்படையாகக் கொண்டது. "டேனியல் டே லூயிஸ்" திரைப்படத்தில் ஒரு ஜெயில் கைதியாக நடித்தார். இதற்காக ஒரு சிறைச்சாலை அறை எப்படி இருக்குமோ அதே மாதிரி கட்டச்சொல்லி, அதுக்குள்ளேயே ஒரு மாதத்திற்கு மேல் தங்கி , அங்கேயே தங்கி, பாத்ரூம் போறது, குளிக்கிறன்னு சகலமும் அனுபவித்து அந்த மூடுக்கு வந்து அதன் பிறகு நடித்தாராம்.
2004 ஆம் ஆண்டு அமிதாப் பச்சன், ஜான் ஆபிரஹாம், பிபாசா பாசு நடிப்பில் வெளியான ஆட்பார் (Aetbaar) திரைப்படத்தை தயாரித்தது ரத்தன் டாடாதான். இப்படத்தை விஜய் பட் இயக்கியிருந்தார். ரூ. 8 கோடி மதிப்பில் உருவான இப்படம் வணிக ரீதியான தோல்வியைச் சந்தித்தது. இதில், இணை தயாரிப்பாளராகவே ரத்தன் டாடா இருந்திருக்கிறார். என்ன காரணமோ, இப்படத்திற்குப் பின் எந்த படத்தையும் ரத்தன் டாடா தயாரிக்கவில்லை.
ஐரிஷ் நடிகர் லியாம் நீசன், ஸ்டார் வார்ஸ் படங்களில் ஜெடி மாஸ்டர் குய்-கோன் ஜின் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 1999-ல் வெளியான ஸ்டார் வார்ஸ்: எபிசோட் I - "தி பாண்டம் மெனஸ் "(The Phantom menace) திரைப்படத்தில் அவர் குய்-கோன் ஜின்னாக நடித்திருந்தார். இதில் அவர் ஒரு அதிநவீன தகவல் தொடர்பு சாதனம் ஒன்றை பயன்படுத்தியிருப்பார். அது கொஞ்ச நாட்களில் மறு வடிவம் கண்டு பெண்கள் பயன்படுத்தும் ரேசர் ஆக மாறியது குறிப்பிடத்தக்கது.
"சார்லி அண்ட் த சாக்லேட் பேக்டரி" 2005 ஆம் ஆண்டு வெளிவந்த ஆங்கிலத் திரைப்படமாகும். இத்திரைப்படத்தின் இயக்குநர் டிம் பர்டன், எழுத்தாளர் ஜான் ஆகஸ்ட். இத்திரைப்படம் ரூவால் டால் எழுதி 1964 ஆம் ஆண்டு வெளியான சார்லி அண்ட் த சாக்லேட் பேக்டரி எனும் பிரிட்டன் நூலிலிருந்து எடுக்கப்பட்டத் திரைப்படமாகும். இந்த திரைப்படத்தில் 40 நிஜ அணில்களை நடிக்க வைத்திருப்பார் இயக்குநர். இதற்காக அணில்களை பல வீடுகளில் மற்றும் காட்டுப் பகுதியில் தேடி அலைந்து சேகரித்து 10 மாதங்கள் பயிற்சி கொடுத்து நடிக்க வைத்திருப்பார். அந்த ஒவ்வொரு அணிலுக்கும் ஒரு பெயர் வைத்து இருப்பார். இந்த திரைப்படத்தில் அணில்கள் சாக்லேட் கொட்டைகளை உடைப்பது போல காட்சி வரும்.