
எது நடந்தாலும் பழியை யார் மீது சுமத்தி தப்பித்துக் கொள்ளலாம் என்பதே பெரும்பாலானவர்களின் எண்ணமாக இருக்கும். எந்த தவறுக்கும் பொறுப்பேற்றுக் கொள்வதற்கு நாம் தயாராக இருப்பதில்லை. உதாரணமாக ஒரு கல்லிலோ அல்லது பெஞ்சிலோ முட்டிக்கொண்டு, அது வந்து நம் மீது இடித்ததாகக் கூறுவோம். ஆனால் உண்மையில் நாம்தான் அதன் மீது சென்று மோதியிருப்போம். இருந்தாலும் நாம் பழிபோடுவது, கல் அல்லது பெஞ்சின் மீதுதான்.
தவறுகளை அடையாளம் கண்டு திருத்துவதற்குப் பதிலாக, தவறு செய்தவர்களை அடையாளம் காண்பதிலேயே நாம் அதிக கவனம் செலுத்துவதுதான் இதற்குக் காரணம். இதில் பிரச்னைகள் தீர்க்கப்படுவதில்லை. மாறாக பழிபோடும் காரியம் மட்டுமே நடந்து கொண்டிருக்கிறது.
ஒவ்வொரு பிரச்னைக்கும் விளக்கங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் அதனால் எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை. அதற்குப் பதிலாக, பிரச்னைகளைத் தீர்ப்பதற்கான வழியைக் கண்டுபிடிக்க முயற்சி செய்யவேண்டுமே தவிர, யார் மீது குறை சொல்லலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கக் கூடாது.
'பழிபோடுவதும், பிரச்னைகளில் இருந்து விலகி ஓடுவதும் எதிர்மறைச் சிந்தனையின் விளைவுகள்' என்கிறார்கள். அறிஞர்கள். யாராக இருந்தாலும் சரி, ஒருபோதும் எதிர்மறைச் சிந்தனைகளுக்கு இடமளிக்கக் கூடாது. அவ்வாறு செய்தால் பிரச்னைக்குத் தீர்வுகாண வேண்டும் என்ற எண்ணம் ஏற்படாது.மாறாக எப்படி இந்தப் பிரச்சினையில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்ற எண்ணம்தான் தோன்றும், இது நல்லதல்ல.
பிரச்னைகள் இல்லாத வாழ்க்கை கிடையாது. நம்முடைய ஒவ்வொரு நாளும் பிரச்னைகளோடு பின்னிப் பிணைந்துதான் இருக்கிறது. அவற்றை நாம் எவ்வாறு அணுகுகிறோம் என்பதைப் பொறுத்துதான் விளைவுகள் கிடைக்கின்றன. இதை ஒரு சம்பவத்தின் மூலம் பார்ப்போம்.
நேரு பிரதமராக இருந்தபோது, ஒரு சமயம் பஞ்சாப்புக்குச் சென்றார். அப்போது பஞ்சாப்பில் முதலமைச்சராக இருந்தவர். பிரதாப்சிங் கெய்ரோன். இருவரும் ஒரு ஜீப்பில் பஞ்சாப்பை சுற்றிப் பார்த்தனர். அவர்கள் செல்லும் வழியில் இரண்டு பக்கங்களும் தரிசு நிலங்களாகக் கிடந்தன. அது உணவு தானியப் பற்றாக்குறையால் இந்தியா அவதிப்பட்டுக்கொண்டிருந்த நேரம் தரிசு பூமியைக் கண்ட நேரு, "இது போன்ற பகுதிகளை விளைநிலமாக்கிவிட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்" என்று கெய்ரோனிடம் கூறினார்.
சில வருடங்கள் கழித்து நேரு மறுபடியும் பஞ்சாப்புக்குச் சென்றபோது நேருவும், கெய்ரோனும் பயணம் செய்த பாதையின் இரண்டு பக்கங்களிலும் கண்ணுக்கு எட்டிய தூரம்வரை கோதுமை வயல்களாக இருந்தன. அதைப் பார்த்த நேருவுக்கு அளவிட முடியாத மகிழ்ச்சி. முற்றிய கோதுமைக் கதிர்கள் மெல்லிய தென்றலில் கம்பீரமாகத் தலையசைத்துக் கொண்டிருந்தன. சற்றுத் தொலைவில் இருந்த களத்து மேட்டில் குன்றுபோல கோதுமை குவிக்கப்பட்டிருந்தது.
நேருவின் ஆச்சரியத்தைக் கண்ட கெய்ரோன் "சில வருடங்களுக்கு முன்பு இந்தப் பாதையில் நாம் வந்தபோது, தரிசு நிலங்களை விளைநிலங்களாக்கினால் நன்றாக இருக்கும் என்று சொன்னீர்கள், இவ்வாறு ஆக்குவதில் பல பிரச்னைகள் இருந்தன. இருந்தாலும், அவற்றை எல்லாம் சமாளித்து இந்தப் பகுதியைக் கோதுமை விளைவிக்கிற பூமியாக மாற்றிவிட்டோம்" என்றார்.
அந்த இடத்திலேயே காரை நிறுத்தச் சொன்னார் நேரு. கெய்ரோனின் கையைப் பிடித்துக் கொண்டு களத்து மேட்டுக்கு அழைத்துப் போனார். அங்கிருந்த கோதுமை மணிகளை இரண்டு கைகளிலும் எடுத்து, கெய்ரோனின் தலையில் அபிஷேகம் செய்தார். கெய்ரோனின் சாதனைக்கு அவர் தெரிவித்த பாராட்டு அது.
"கஷ்டமான காரியத்தை நேரு சொல்கிறாரே" என்று கெய்ரோன் எதிர்மறையாகச் சிந்திக்கவில்லை. நேருவின் யோசனையை ஆக்கப்பூர்வமாக அணுகினார். அதன் விளைவால் பஞ்சாப்பில் கோதுமை உற்பத்தி அதிகரித்து ஓரளவு உணவுப் பஞ்சம் தீர்ந்தது.
எனவே, எதிர்மறையான சிந்தனைகளைத் துரத்துங்கள். எல்லாப் பிரச்னைகளுக்கும் எளிதாகத் தீர்வு கிடைக்கும். வெற்றியும் உங்களை நோக்கி வரும்.