
முன்னாள் மத்திய அமைச்சர் மேனகா காந்தி அவர்கள் விலங்குகள் மீது அலாதியான அன்பு கொண்டவர். விலங்குகள் பாதுகாப்பிற்காக 'தி பீப்பிள் பார் அனிமல்ஸ்' என்ற அமைப்பை நடத்தி வருகிறார். விலங்குகளுக்கு தனியாக மருத்துவமனை ஒன்றை ஏற்படுத்தி உள்ளார்.
கூரன் படம் இன்னும் ஒரிரு நாட்களில் திரைக்கு வர உள்ளது.
மேனகா காந்திக்கும் கூரன் படத்திற்கும் என்ன கனெக்க்ஷன்?
விலங்குகள் மீது அன்பு கொண்ட மேனகா காந்தி, நாயை மையமாகக் கொண்ட 'கூரன்' படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வந்தால் நன்றாக இருக்கும் என்றெண்ணிய படத்தின் டைரக்டர் நிதின், அவருக்கு அழைப்பு விடுத்திருந்தார். மேனாகாவும் விழாவில் கலந்து கொண்டு விலங்குகளுடன் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.... அவரது பகிர்விலிருந்து ஒரு சில துளிகள்...
மரியா என்ற பெண்மணி லண்டனில் இருந்து எங்கள் விலங்குகள் மருத்துவமனைக்கு வந்திருந்தார். விலங்குகள் பேசும் மொழி தனக்கு தெரியும் என்று கூறினார். அங்கே இருந்த பசு மாடு அருகில் சென்று தலையில் கை வைத்தார். மாடு எதோ மெதுவாக சத்தம் செய்தது. மரியா என்னிடம் வந்து "தலையில் அடிபட்ட மாடுக்கு நீங்கள் சிகிச்சை செய்திருக்கிறீர்கள். இதற்காக இந்த மாடு உங்களுக்கு நன்றி சொல்கிறது. மேலும் இன்னும் தலையில் வலி இருக்கிறது, மருந்து கேட்கிறது என்றார். அங்கே காலில் அடிபட்டு சிகிச்சை எடுத்துக் கொண்டுள்ள நாயிடம் சென்றார். அந்த நாய் அவரை பார்த்து குரைத்தது. நாய் பசி என்கிறது உணவு கேட்கிறது என்றார். உணவு தந்தோம். உடனே தூங்கி விட்டது.
நான் ஒரு முறை இரவு நேரத்தில் கார் ஓட்டி கொண்டிருந்தேன். எதிரே ஒரு பாம்பு சென்று கொண்டிருந்தது. நான் காரை நிறுத்தி பாம்பு கடந்து செல்லும் வரை பொறுமையாக இருந்தேன். அன்று இரவு நான் படுக்கையில் படுத்து கொண்டிருந்த போது அந்த பாம்பு என் கட்டிலை சுற்றி சில முறை வந்தது. பிறகு என்னை ஒரு பார்வை பார்த்து விட்டு சென்று விட்டது. அந்த பார்வையில் நன்றி இருந்தது. பாம்புகளுக்கு பற்களில் மட்டும் தான் விஷம். உணர்வுகள் முழுவதும் நன்றியால் ஆனது.
இந்தியாவில் வாகன ஓட்டிகளால் அதிக அளவு நாய்கள் அடிபடுகின்றன. உத்தர பிரதேசத்தில் வாகனம் ஓட்டி சென்ற ஒருவர் நாய் மீது ஏற்றி விட்டார். அங்கே இருந்த போலீஸ்காரர் அந்த நபர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் நிறுத்தினர். அந்த நீதிபதி இதெல்லாம் ஒரு வழக்கே இல்லை என்று தள்ளுபடி செய்து, வழக்கு பதிவு செய்த போலீஸ்காரருக்கு அபராதம் விதித்தார். நாய் தான் என்று நினைத்த அந்த நீதிபதிக்கு இந்த 'கூரன்' படத்தை போட்டு காட்டி நாயை பற்றி புரிய வைக்க வேண்டும் என நினைக்கிறேன்.
கூரன் படம் சிறப்பாக வந்துள்ளது. இந்த படத்தில் நடித்த SA .சந்திரசேகர் அவர்கள் இப்படத்தை பல்வேறு இடத்திற்கு கொண்டு செல்வார் என்று நம்புகிறேன்.
விலங்குகளை அன்புடன் பராமரித்தால் மனிதர்களாகிய நம் வாழ்க்கையில் அமைதி கிட்டும். அதனால் விலங்குகளிடம் அன்பு வேண்டும்.