
ஒரு படம் எடுக்கும்போது அதில் இருக்கும் அனைத்துக் காட்சிகளும் இயக்குநருக்கு முக்கியமாகத்தான் தோன்றும். அதை அப்படி வைத்தால் என்ன ஆகும்? படப்பிடிப்பில் பேசப்பட்ட சில வசனங்களை டப்பிங்கில் சரி செய்து கொள்ளலாம்; சேர்த்துக் கொள்ளலாம் என்று நினைத்து ஏகப்பட்ட மாற்றங்கள் செய்தால் என்ன ஆகும்? இவை இரண்டும் தான் விடுதலை பாகம் இரண்டில் நிகழ்ந்திருக்கிறது.
தன்னுடைய முயற்சியால் கைது செய்யப்பட்ட 'வாத்தியார்' எனப்படும் 'பெருமாள்' கலகப்படையின் தலைவராக எப்படி மாறினார்? ஒரு சாதாரணப் பள்ளிக்கூட வாத்தியாரைத் தீவிரவாதிபோல மாறிச் செயல்பட வைத்தது எது? தன்னுடைய சொந்த நலனுக்காக அரசு இயந்திரங்கள் எப்படியெல்லாம் மாறி வஞ்சகமாக யோசிக்கும்? தங்களது அதிகாரப் போதைக்காகக் காவல்துறை அதிகாரிகள் எப்படியெல்லாம் செயல்படுவார்கள்? இதில் சிக்கிய அப்பாவி மக்கள், கீழே பணிபுரியும் அதிகாரிகள், என்னவாகிறார்கள்? என்பதெல்லாம் தான் விடுதலை பாகம் இரண்டு.
முதல் பாகத்தில் சூரி கதாநாயகன் என்று சொல்லப்பட்டாலும், இதில் முழுக்க விஜய் சேதுபதியின் ராஜ்ஜியம் தான். கதிரேசனின் கோணத்தில் கதை சொல்லப்பட்டாலும், வாத்தியாரின் ப்ளாஷ் பேக் ஆரம்பித்ததும் சூரி காணாமல் போய்விடுகிறார். தனக்கு மிகவும் நெருங்கிய ஒரு குடும்பத்தின் மரணம் வாத்தியாரை எப்படி மாற்றுகிறது, தனது சொந்தக் குடும்பத்திற்கு எதிராகவே கம்யூனிசம் பேசிப் போராட்டத்தில் ஈடுபடும் மஞ்சு வாரியருக்கும் விஜய் சேதுபதிக்கும் முகிழ்க்கும் காதல், பண்ணையடிமைகளுக்கு நிகழும் கொடுமைகள், தொழிலாளர் பிரச்சினைகள் என இந்தப் படத்தின் முதல் பாதி பேசும் விஷயங்கள் ஏராளம்.
சம்பவங்களால் சொல்லப்படுவதை விட வசனங்களால் அசத்த நினைத்து அயர்ச்சி அடைய வைத்துவிட்டார் வெற்றி மாறன். மிக வலுவான வசனங்கள் கூடத் தொடர்ந்து பிரசங்கங்கள் போலச் சொல்லப்படுவதால் எப்படா இன்டர்வல் வரும் என்று யோசிக்க வேண்டியிருக்கிறது. ஏற்கனவே சொன்ன டப்பிங் பிரச்சினை காரணமாக லிப் சிங் என்பது பல இடங்களில் அடி வாங்கியிருக்கிறது. அதே போல, கிராபிக்சும் சில இடங்களில் அப்பட்டமாகத் தெரிகிறது. மூன்று மணி நேரங்களை நெருக்கி ஓடும் இந்தப் படத்தின் மிகப் பெரிய பலவீனம் படத்தின் முதல் பாதி தான்.
இரண்டாம் பாதியில் விஜய் சேதுபதி காவலர்களிடம் பிடிபட்டதும் கதையின் போக்கு சுவாரசியமாக மாறுகிறது. தனது வாழ்க்கையைப் பகிர்ந்து கொண்டே காட்டுக்குள் அவர் காவலர்களுடன் நடக்கும் அந்தச் சீக்வன்ஸ் தான் படத்தின் அடி நாதம். ஒரு தீவிரவாதி என்று தாங்கள் நினைத்துக் கொண்டிருக்கும் வாத்தியாரின் உண்மை முகம் தெரியவர, காவலர்களுக்கும் மனமாற்றம் ஏற்படுகிறது. தனக்குத் தீங்கிழைக்கப் போகிறார்கள் எனத் தெரிந்தும் பெருமாள் அவர்களிடம் பேசியே புரிய வைக்கத் தான் பார்க்கிறார். முதல் பாகத்தில் தனது வில்லத்தனத்தால் அசத்திய சேத்தன் இதிலும் பார்வையாளர்களின் ஆத்திரத்தைக் கொட்டிக் கொள்கிறார். நரித்தனமாக அவர் செய்யும் செயல்கள் போட்டுத் தள்ரா அவனை என்று சொல்ல வைக்கிறது.
ராஜீவ் மேனன், சரவணா சுப்பையா, இளவரசு கூட்டணி சதியாலோசனையில் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டே இருக்கிறார்கள். தங்களது சுய லாபத்துக்காக அரசு இயந்திரம் எவ்வளவு மோசமான செயல்களில் ஈடுபடக்கூடும்; அதை எத்தனை அமைதியாக அவர்கள் எதிர்கொள்கிறார்கள் என்பதை அழகாகக் காட்டியிருக்கிறார் வெற்றி மாறன். பெருமாளின் மனைவியாக மஞ்சு வாரியர். பாத்திரத்திற்குப் பொருத்தமாக இருந்தாலும் பொருந்தாத விக் வைத்துக் கொண்டு வளைய வருகிறார். அதற்கும் ஒரு காரணத்தைச் சொல்லி இருக்கிறார் இயக்குநர். இதே போல் தான் விஜய் சேதுபதியும். அவரது சிகையலங்காரம் பொருத்தமாகவே இல்லை. தனது காதலைச் சொல்லும் இடம், ஒரு வெடி விபத்தின்போது அவர் துடிக்கும் துடிப்பு, கிளைமாக்சில் நம்பி வந்தும் தனக்கு இழைக்கப்பட்ட துரோகம் அறிந்து அவர் பார்க்கும் பார்வையெனப் பல இடங்களில் அருமையாகச் செய்திருக்கிறார்.
முதல் பாதி முழுதும் பேசியது போதாதென்று மிக முக்கியமான கிளைமாக்ஸ் சண்டைக் காட்சிகளில் கூட விடாமல் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அருமையாகப் படமாக்கப்பட்டுள்ள அந்தக் காட்சிகளின் வீரியத்தை இந்தக் கவனச் சிதறல்கள் குறைக்கின்றன. திராவிடம், கம்யூனிசம், வர்க்கப் போராட்டம், சித்தாந்தம் எனத் தொடர்ந்து முகத்தில் அறைந்தார் போல் சொல்லிக் கொண்டே இருக்கிறார் வெற்றிமாறன். ஒரு கட்டத்தில் நாம் ரஞ்சித் படம் அல்லது மாரி செல்வராஜ் படம் பார்க்கிறோமோ என்று நினைப்பும் வருகிறது.
கதிரேசன் என்ற சூரியின் கண்ணோட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் படம் அவரது வலுவான பாத்திரப்படைப்பை ஓரங்கட்டி முற்றிலும் வேறுபட்ட கோணத்தில் பயணிக்க ஆரம்பித்து விடுகிறது. கதாநாயகன் என்று சொல்லப்பட்டு விட்டதால் இறுதிக் காட்சியில் அவர் செய்யும் ஒரு செயல் அவருக்குக் கைதட்டல் வாங்கிக் கொடுக்கிறது. ஆனாலும் இது போன்ற அந்தரத்தில் விடப்படும் முடிவுகள் படத்திற்கு ஒரு முழுமையைத் தராது என்றே தோன்றுகிறது.
பின்னணி இசையில், 'நன்று' என்று சொல்ல வைக்கும் இளையராஜா பாடல் காட்சிகளில் 'இன்னும் கொஞ்சம் நன்றாக இருந்திருக்கலாம்' என்றே சொல்ல வைக்கிறார். வேல்ராஜின் ஒளிப்பதிவு படத்திற்குத் தேவையான பங்களிப்பைத் தந்திருக்கிறது. கென் கருணாஸ் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் வந்தாலும் நிறைவு. முதலிலேயே சொன்னது போல் தன்னுடைய படங்களில் சமரசம் செய்துகொள்ளக் கூடாது என்ற கொள்கையில் வெற்றிமாறன் இருப்பது நல்லது தான். அந்த முனைப்பை படத்தொகுப்பிலும் சற்று காட்டியிருக்கலாம்.
இரண்டாண்டு உழைப்புக்குப் பிறகு மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் வந்திருக்கும் இந்தப் படம் அனைத்துத் தரப்பையும் கவருமா என்பது கேள்விக்குறிதான். தனிப்பட்ட முறையில் தனது நடிப்பிற்காக விஜய் சேதுபதி சில பல விருதுகளை வெல்லலாம். அவரது உழைப்பு கண்கூடாகத் தெரிகிறது. தனது திரையுலக வாழ்கையை மாற்றிய படம் என்று விடுதலையைக் குறிப்பிட்ட சூரி இரண்டாம் பாகத்தையும் அப்படிச் சொல்வாரா என்றால் நிச்சயம் மாட்டார்.
ரத்தம் தெறிக்கும் காட்சிகளும், மிக இயல்பாகப் பயன்படுத்தப்படும் கெட்ட வார்த்தைகளும் படத்திற்கு வழங்கப்பட்ட ஏ சான்றிதழ் சரிதான் என்று நினைக்க வைக்கிறது. விஜய் சேதுபதி, மற்றும் வெற்றி மாறன் ரசிகர்களை இந்தப் படம் கவரலாம். சாமானிய ரசிகர்களை?
நல்ல கதை, ஆங்காங்கே சிறப்பான வசனங்கள், சொல்லப்படவேண்டிய கருத்துகள் அனைத்தும் இருந்தும் ஏதோ ஒன்று மிஸ்ஸிங் என்ற எண்ணம் படம் பார்க்கும் நேரம் வந்துகொண்டே இருப்பது மறுக்க முடியாத உண்மை.