

பாட்டி கதை சொல்லக் கேட்டு வளர்ந்தவர்கள் என்று ஒரு தலைமுறை இருந்தது. 2K தலைமுறைகளுக்கு அப்படி ஒன்று இருந்ததே அடையாளம் தெரியாமல் காணாமல் போய்விட்டது. கதைகளை யூடியூப்பில் தேடிக் கொண்டு இருக்கிறார்கள்.
திரை உலகத்தில் அப்படி இருந்தவர் தான் பாக்யராஜ் (Bhagyaraj) அவர்கள். இவரை கதாநாயகனாக தேர்ந்தெடுத்தவர் அவரது குருநாதர் பாரதிராஜா. புதிய வார்ப்புகள் படத்தில் ஆசிரியர் வேடத்திற்கு கச்சிதமாக பொருந்தினார்.
'பூவை பறிச்சிட்டா மட்டும் வாடிடும்ன்னு நெனைக்காதீங்க... செடியிலே விட்டு வச்சாலும் வாடிடும்' - காதலிச்ச பெண்ணை கரம் பிடிக்கா விட்டால் அந்த பெண் நிலைமை என்ன ஆகும் என்பதை தனது எளிமையான வசனத்தின் மூலம் சொல்லி இருப்பார்.
'இ லோகத்தில் திரைக்கதைக்கு ஆசிரியர்ன்னு ஒருத்தர் இருந்தா அது இ பாலக்காட்டு மாதவனை தந்த பாக்யராஜ் அவர்கள் மட்டுமே.'
கதை, திரைக்கதை, வசனம், டைரக்ஷன்...பாக்யராஜ் என்று போடும் இடம் தனித்தன்மையாக இருக்கும் என்பதற்கு தூறல் நின்னு போச்சு படத்தை சொல்லலாம்.
சிக்கலான... தாலி செண்டிமெண்ட் கதைகளுக்கு அருமையான நகைச்சுவை கலந்த திரைக்கதை அமைத்து இமாலய வெற்றி கண்டவர்.
'என்ட காதலி உங்களுக்கு மனைவியா வரலாம்... பக்சே... உங்க மனைவி ஒரு நாளும் எனக்கு காதலியா வரமாட்டா...' இந்த வசனம் மூலம் அந்த 7 நாட்கள் படத்தை மிக உயரத்தில் தூக்கி நிறுத்தினார். இன்றளவும் அந்த இறுதி காட்சி பேசும் பொருளாக இருந்து வருகிறது. அந்த படம் பார்த்தவர்கள் மன நிறைவோடு திரும்பினார்கள்.
அந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் ராஜேஷ் வீட்டில் இருக்கும் ஒரு நிர்வாண சிலையை பார்த்து முகம் சுளித்து அதை மறைக்க படாதபாடு படுவார். வேறு எந்த இயக்குனரும் இது போன்ற ஒரு காட்சியை வைக்க மாட்டார்கள். துணிந்து வைத்து வெற்றி கண்டார்.
எல்லா இடங்களிலும்... அது கல்யாண வீடாக இருந்தாலும்... அசாதாரண நிகழ்வு நடந்த இடமாக இருந்தாலும் அங்கே ஏதேனும் ஒரு நகைச்சுவை நடக்கும். அவரது திரைக்கதையில் இது போல அன்றாட நிகழ்வுகள் இடம்பெற்று அவருக்கு பெரும் புகழை வாங்கித் தந்தது.
இவரின் மெளன கீதங்கள் வார இதழ் ஒன்றில் தொடர்கதையாக வந்து பின்னர் திரைக்கு வந்து மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
கணவன் மனைவிக்குள் நடந்த சண்டைகளை, பேருந்து ஒன்றில் இருவரும் ஒன்றாக பயணிக்கும் போது நடக்கும் சம்பவங்களை, அவர்களின் கடந்த கால சம்பவங்களோடு இணைத்து பிளாஷ் பேக்கில் சொன்ன உத்தி மிக மிக புதியது. முடிவு யாரும் எதிர்பாராத அவர் பாணி நகைச்சுவை கலந்தது.
அதே போல டார்லிங் டார்லிங் கதையிலும் கிளைமாக்ஸ் சீரியஸாக கொண்டு சென்று நகைச்சுவையாக முடித்திருப்பார்.
தூறல் நின்னு போச்சு படத்தில் பெண் பார்க்கும் படலத்தை நகைச்சுவையாக தொடங்கி அதன் பின் மலரும் காதலை அழகாக 'தங்க சங்கலி' போல மின்னும் வண்ணம் சொல்லி இருப்பார்.
அமிதாப் பச்சன் நடித்த 'ஆக்ரி ரஸ்தா' இவர் இயக்கிய ஒரே ஹிந்திப் படம். அதுவும் மிகப் பெரிய ஹிட். அமிதாப் நடித்த டாப் 10 படங்களில் இதுவும் ஒன்று. இதன் ஒரிஜினல் தமிழ் வடிவத்தை பாரதிராஜா இயக்கி இருப்பார். அந்த படத்திற்கும் ஆக்ரி ரஸ்தா விற்கும் கிளைமாக்ஸ் உட்பட நிறைய வேறுபாடுகள் இருக்கும்.
ஒரு ஆண் ஒரு பெண்ணை விரும்புகிறான். இந்த ஒன்லைனை கொடுத்தால் போதும். இரண்டரை மணி நேர அழகான நகைச்சுவை கலந்த படத்தை தருவார் பாக்யராஜ்.
பூவையும் நாரையும் கொடுத்தால் போதும் சூடிக்கொள்ள அழகான மாலை தருவார். பூவோடு சேர்ந்து நாரும் மணக்கும் என்று சொல்வார்களே அதுதான் அவரின் கைவண்ணம்.
அதே கை தான் 'நாரோடு சேர்ந்து பூவும் நாறிடுச்சு' ன்னு 'இது நம்ம ஆளு' படத்தில் சாதி கடந்த காதலுக்காக பெண்ணின் தாத்தா பேசுவது போல எழுதியது.
பழமொழிகளை கூட மாற்றி யோசிச்சு எழுதியவர்.
முதல் படத்திலேயே 'மயிலு' என்பதை எப்படி உச்சரிக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தாக கேள்விப்பட்டு இருக்கேன். 'ஹி இஸ் எ குட் ரைட்டர்' என்று 'டைரக்டர்' சொல்லி இருக்கார். இங்கே 'டைரக்டர்' என்பது அவரின் குரு 'பாரதிராஜா' வை குறிக்கும். இன்று வரையில் எங்க டைரக்டர் என்றே அழைத்து வருகிறார்.
இன்றைய இளைஞர்கள் ரசித்துப் பார்க்க அதே 'மங்களம், வசந்தி, ராதா, பவுனு, பரிமளா, முதலிரவில் 'தேவனே தேவியே' பாடும் தெய்வானை, சண்முக மணி, அழகப்பன், செல்லத்துரை, ரகுநாதன் M.A. M.Com, சுகுணா, 'சங்கீதம் பாட கேள்வி ஞானம் போதும்'னு சொல்லும் கோபால், கிருஷ்ணையர், பாலக்காட்டு மாதவன், சிஷ்யன் கோபி, குஸ்தி வாத்தியார், டைலர் காளியண்ணன், சங்கிலி, இவர்களை எல்லாம் திரையில் இந்தக் காலத்திற்கு தகுந்தது போல ஒரு திரைக்கதையில் அழைத்துக் கொண்டு வந்து அவரின் திரைப்பயண 50 வது ஆண்டில் சாதனை புரிய வேண்டும்!