
தமிழ் சினிமாவில் முன்னனி இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் அட்லீ. பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரிடம், நண்பன் மற்றும் எந்திரன் ஆகிய படங்களில் உதவி இயக்குநராக பணிபுரிந்த இவர் 2013-ல் ‘ராஜா ராணி’ திரைப்படத்தை இயக்கியதன் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அடுத்த படமே கலைப்புலி தாணு தயாரிப்பில், இளையதளபதி விஜய்யை வைத்து ‘தெறி’படத்தை இயக்கினார். இந்த படம் சூப்பர் ஹிட்டாக, அதனை தொடர்ந்து இந்தியில் ஷாருக்கானை வைத்து 'ஜவான்' படத்தினை இயக்கினார். இந்த படம் மிகப்பெரியளவில் ஹிட்டாக அதன் மூலம் பாலிவுட்டிலும் முத்திரை பதித்த அட்லீ, தற்போது தமிழ் மற்றும் பாலிவுட் சினிமாவில் அசைக்க முடியாத சக்தியாக உருவெடுத்துள்ளார்.
கடைசியாக இவர் இயக்கத்தில் வருண் தவான், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான 'பேபி ஜான்' திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றியடையவில்லை.
இந்நிலையில் தற்போது அல்லு அர்ஜுனை வைத்து மிகப்பெரிய பொருட் செலவில் புதியபடம் ஒன்றினை இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்திற்கு தற்காலிகமாக AA22 என்று பெயரிடப்பட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சுமார் ரூ.800 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தில் தீபிகா படுகோன், மிருணால் தாக்கூர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
அதே நேரத்தில் ஜான்வி கபூர் இந்த படத்தில் நடிக்க உள்ளதாகவும் அவருடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இளம் இசையமைப்பாளர் சாய் அப்யங்கர் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.
இந்த படத்தை அட்லீ ஹாலிவுட் தரத்திற்கு மிகவும் பிரம்மாண்டமாக எடுக்கப்போவதால் இப்போதே இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. சைன்ஸ் ஃபிக்ஷன் அல்லது சூப்பர் ஹீரோ ஜானரில் இந்த படத்தின் கதைக்களம் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அவதார் திரைப்படத்தை போல் இந்த படத்திற்காக ஒரு உலகத்தை கிராபிக்ஸ் தொழிநுட்ப உதவியுடன் உருவாக்கி வருவதால் அதற்காக ஹாலிவுட் படங்களில் பணியாற்றிய கலைஞர்கள் இப்படத்தில் பணியாற்ற உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தபடம் அடுத்தாண்டு தீபாவளிக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தில், வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க, பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் மற்றும் ட்வைன் ஜான்சன் (தி ராக்) ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வில் ஸ்மித் மற்றும் தி ராக் இருவருக்கும் இந்தியாவில் மட்டுமின்றி உலகளவில் அதிகளவு ரசிகர்கள் உள்ளனர்.
இவர்கள் இருவரில் ஒருவரை தன்னுடைய படத்தில் வில்லனாக நடிக்க வைப்பதற்கு இயக்குனர் அட்லீ தீவிரமாக முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது. ஒருவேளை அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுனுக்கு வில்லனாக ‘வில் ஸ்மித்’ அல்லது ‘தி ராக்’ நடித்தால் உலகளவில் இந்த படத்துக்கு மிகப்பெரிய விளம்பரமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.