
சினிமா துறையில் முன்பெல்லாம் ஒரு படம் வசூலில் ரூ.100 கோடியைக் கடந்தாலே, அது மிகப்பெரிய சாதனையாகப் பார்க்கப்பட்டது. ஆனால் இன்றோ ரூ.1,000 கோடி வசூலைக் கூட எளிதாக நெருங்கி விடுகின்றன. அதிலும் தெலுங்கு திரைப்படங்கள் தான் இந்தப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளன. இன்றைய காலகட்டத்தில் திரைப்படங்கள் பெரும்பாலும் பான் இந்திய அளவில் திரைக்கு வருவதால், வசூலும் அதிகரிக்கத் தொடங்கி விட்டன.
இந்திய சினிமாவில் முதலில் ரூ.1,000 கோடி வசூலைக் கடந்தது பாலிவுட்டின் தங்கல் திரைப்படம் தான். இதற்குப் பின் பல ஆண்டுகள் கழித்தே 1,000 கோடி ரூபாய் வசூலை ஈட்டிய படத்தைக் காண முடிந்தது. அதுவும் தெலுங்கு சினிமாவில் பாகுபலி 2 படத்தின் மூலமாகத் தான். பாகுபலி திரைப்படத்திற்குப் பிறகு பான் இந்தியப் படங்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கி விட்டன. அதற்கேற்ப வலுவான திரைக்கதையுடன் இயக்குநர்கள் நடைபோட தொடங்கினர்.
இதன் விளைவாக தெலுங்கில் கல்கி 2898 AD, RRR மற்றும் புஷ்பா 2 ஆகிய தெலுங்குத் திரைப்படங்கள் ரூ.1,000 கோடி வசூலை ஈட்டி சாதனைப் படைத்தன. ஆனால் இந்தப் பட்டியலில் தமிழ்ப் படங்கள் ஏதும் இடம் பெறாதது தமிழ் ரசிகர்களுக்கு வருத்தமே. இருப்பினும் ரூ.1,000 கோடி வசூலித்த மற்ற மொழிப் படங்கள் அனைத்தும் தமிழ்நாட்டிலும் நல்ல இலாபத்தை ஈட்டியுள்ளன. இதற்கிடையில் கன்னட சினிமாவின் சார்பில் கேஜிஎஃப் 2 படமும் ரூ.1,000 கோடி வசூலை ஈட்டி சாதித்து விட்டது.
பாலிவுட் சினிமா வசூலில் தடுமாறிக் கொண்டிருந்த நேரத்தில் ஷாருக்கான் நடித்த பதான் மற்றும் ஜவான் ஆகிய இரண்டு திரைப்படங்களும் ரூ.1,000 கோடி வசூலை ஈட்டியது. இதில் மற்றுமொரு சாதனை என்னவென்றால், இந்த இரண்டு படங்களும் ஒரே ஆண்டில் வெளியானவை என்பது தான். மலையாளத்தில் ரூ.1,000 கோடி வசூல் படங்கள் ஏதும் வரவில்லை என்றாலும், கடந்த சில ஆண்டுகளாகவே இயக்குநர்கள் நல்ல படங்களைக் கொடுத்து வருகின்றனர். ஆனால் தமிழில் மட்டும் வெற்றிப் படங்களின் எண்ணிக்கை கூட குறைவாகவே உள்ளது.
தெலுங்கில் 4, பாலிவுட்டில் 3 மற்றும் கன்னட சினிமாவில் 1 என மொத்தம் 8 திரைப்படங்கள் மட்டுமே இந்திய அளவில் ரூ.1,000 கோடி வசூலை ஈட்டியவை. இந்தப் பட்டியலில் தமிழ்த் திரைப்படம் எப்போது இடம்பெறும் என்பதே தமிழ் ரசிகர்களின் ஒரே கேள்வியாக உள்ளது. இந்த ஆண்டு வருமா அல்லது அடுத்த ஆண்டு வருமா என ரசிகர்கள் கடந்த சில ஆண்டுகளாகவே, அந்த ஒரு நாளுக்காக காத்துக் கிடக்கிறார்கள்.
மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படம் ஆயிரம் கோடியை வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்தக் கனவை நனவாக்கத் தவறி விட்டது. அடுத்ததாக ரஜினியின் கூலி மற்றும் கமலின் தக் லைஃப் ஆகிய 2 திரைப்படங்களின் மீது அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆனால் ரசிகர்கள் நினைத்தது நடக்குமா? 1,000 கோடி வசூலைக் கடக்குமா அல்லது இல்லையா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.