ஒன்று சேருமா தமிழ் திரை உலகம்? ஒற்றுமை பாராட்டப்படுமா?

தத்தளிக்கும் திரையுலகம் - 3
Jailer-Leo-Kubera
Jailer-Leo-Kubera
Published on

நடிகர் தனுஷ் ஏற்கனவே நடிக்க அட்வான்ஸ் வாங்கிய படங்களில் நடித்து முடித்தப் பின்பே புதிய படங்களில் நடிக்க வேண்டும் என்று திரைப்பட தயாரிப்பாளர் சங்க கூட்டத்தில் முடிவெடுத்து சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நடிகர் சங்கம் இந்த முடிவை வாபஸ் வாங்க வலியுறுத்தியது. இது தொடர்பாக வெளியிட்ட மற்றொரு அறிக்கையில் தயாரிப்பாளர் சங்கம் இது திடீரென்று எடுக்கப்பட்ட முடிவல்ல; ஏற்கனவே இது தொடர்பாக விளக்கம் கேட்டு அனுப்பப்பட்டுள்ளது; 'தெரியவில்லை' என்று நடிகர் சங்கம் சொல்வதை ஏற்க முடியாது என்று தெரிவித்துள்ளனர். பிரச்னைகளைக் கவனத்திற்கு கொண்டு சென்றும் தீர்வு எதுவும் எட்டாததால் எடுக்கப்பட்ட முடிவு இது என்றும் அந்த அறிக்கை தெளிவாகியுள்ளது.

நடிகர்கள் சம்பளம், படப்பிடிப்பு செலவுகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. அட்வான்ஸ் வாங்கிக்கொண்டு நடித்துக் கொடுக்காமல் வேறு பட ஒப்பந்தங்களில் தொடர்ந்து கையெழுத்து இடுவது நியாயமல்ல, முதலில் நாடி வந்த தயாரிப்பாளர்கள் கதி என்ன என்பது குறித்து யோசிக்க வேண்டும். கூட்டமைப்பின் முடிவுக்கு நடிகர்கள் ஒத்துழைப்புத் தர வேண்டும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமீபத்தில் கௌதம் மேனன் அளித்த ஒரு பேட்டியில், "துருவ நட்சத்திரம் படப்பிரச்சினை தொடர்பாக, தனக்கு உதவி செய்ய ஒருவர் கூட முன் வரவில்லை; ஏன் பேசக்கூட இல்லை. அப்படிப் பேசிய ஒரே ஒருவர் டைரக்டர் லிங்குசாமிதான்" என்று கூறினார். தமிழ்த் திரையுலகம் எப்படி இப்படிப் பாராமுகமாக இருக்க முடியும்? ஒவ்வொரு படத்திற்கும் பிரச்னை என்றால் அவர் என்ன தான் செய்வார்? தமிழ்ப் படமே வேண்டாம் என்று மலையாளத்தில் மம்முட்டி தயாரித்து நடிக்கும் படத்தை இயக்கப் போய்விட்டார். இவ்வளவு வெற்றிகள் கொடுத்த இயக்குநருக்கே இந்த நிலை என்றால் புது இயக்குனர்கள் நிலை கேட்கவே வேண்டாம்.

துருவ நட்சத்திரம் படத்தின் கதாநாயகன் விக்ரம் கூட இது தொடர்பாக எதுவும் பேசுவதாகவோ செயல்படுவதாகவோ தெரியவில்லை. தனது வேலை நடிப்பது. அதற்குப் பணம் வந்துவிட்டது அல்லது வரவேண்டியது வந்துவிடும் என்பது அவர் நினைப்பாக இருக்கலாம். இயக்குனர்கள் சங்கம் என்ன செய்கிறது? தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிலை என்ன? தேர்தல் நடக்கிறது. இந்த அணி ஜெயிக்கிறது. கூட்டம் போடுகிறார்கள். அறிக்கை விடுகிறார்கள். ஓவர்.

ப்ரேமலு, மஞ்சும்மாள் பாய்ஸ், ப்ரம்ம யுகம் போன்ற மலையாளப் படங்கள் வசூல் சாதனை படைக்கின்றன. சிறிய தமிழ் படங்கள் வருவதும் போவதும் கூடத் தெரிவதில்லை. ஆனால், (என்னதான் நல்ல விதமாக விமரிசனங்கள் எழுதப்பட்டாலும்) மக்கள் தேர்ந்தெடுத்துப் படங்கள் பார்க்க ஆரம்பித்து விட்டனர்.

இதையும் படியுங்கள்:
ஆயிரம் கோடி வசூல் தமிழ்படங்களுக்கு எட்டாக்கனியா? ஏன்?
Jailer-Leo-Kubera

கோவிடிற்கு பிறகு பாலிவுட் அவ்வளவு தான். ஹிந்திப் படங்களின் ஆட்சி முடிந்தது என எழுத ஆரம்பித்து விட்டார்கள். மூன்றே  படங்கள். பதான், ஜவான். அனிமல். திரும்பவும் மீண்டு எழுந்து விட்டனர்.

அங்கே இருக்கின்ற ஒரு ஒற்றுமையும் இயைந்து செல்லும் தன்மையும் இங்கே வருவதற்குச் சாத்தியம் இல்லை. பல நடிகர்கள் இணைந்து நடிக்கும் படங்களே தற்போது தான் இங்கே வர ஆரம்பித்து இருக்கின்றன. அதுவும் காலத்தின் கட்டாயம். பணம் குவிக்க ஒரு யுக்தி.

பெரிய நடிகர்கள் படம் அனைத்தும் பான் இந்தியா படங்களாக மட்டும் பார்க்கப்படுகின்றன. இது ஒரு விதத்தில் ஆரோக்கியமாக இருந்தாலும் சிறிய தயாரிப்பாளர்கள் நிலை கவலைக்கிடம். ஆனால் ஒன்று. இந்த நிலை, இப்பொழுது அனைத்து மொழிப்படங்களையும் ஆட்டிப் படைக்கிறது. தெலுங்கு, கன்னடம், என எங்கு நோக்கினும் பான் இந்தியா மோகம் தான். 

மலையாளப்படங்களைப் பார்த்தால் படம் ஆரம்பிக்கும் முன் ஒரு நீண்ட நன்றி நவிலல் பட்டியல் வரும். அதில் அனைத்து நடிகர்களும், இயக்குனர்களும் தொழில் நுட்பக் கலைஞர்களும் இருப்பார்கள். அனைவரும் இயக்குனர்கள். அனைவரும் கதாசிரியர்கள். அனைவரும் அனைவர் படங்களிலும் நடிக்கின்றனர். ஒற்றுமை. இவர்கள் இந்த ரோல் மட்டுமே செய்ய வேண்டும் என்ற எந்தக் கட்டுப்பாடும் கட்டாயமும் அவர்களிடம் கிடையாது. காதல், ப்ரம்மயுகம் போன்ற படங்களில் மம்முட்டியும், மலைக்கோட்டை வாலிபன், நேரு போன்ற படங்களில் மோகன்லாலும் நடிக்கின்றனர். ஓடுவதும் ஓடாததும் பற்றி அவர்கள் முதலில் இருந்தே கவலைப்படுவதில்லை.

Pulimurugan - 2018 - Manjummel Boys
Pulimurugan - 2018 - Manjummel Boys

புலி முருகன், 2018, மஞ்சுமல் பாய்ஸ் என 200 கோடி ரூபாய் வசூல் மார்க்கெட்டாகி வருகிறது மலையாளப்பட உலகம். சம்பளம் குறைவாக இருப்பதால் ஒவ்வொருவரும் வருடத்திற்கு மூன்றிலிருந்து பத்து படம்வரை கூட நடித்து அந்த இலக்கை அடைந்து விடுக்கிறார்கள். இங்கே ஒரே படத்தில் அந்தச் சம்பளம் வாங்கக் கூடியவர்களே இருக்கிறார்கள். அதனால் தயாரிப்புச் செலவும் வசூல் எதிர்பார்ப்பும் எங்கோ இருக்கிறது.

சாட்டிலைட் மற்றும் ஓடிடி பிஸினஸும் முன்பு போல் இல்லை. தேர்ந்தெடுத்த நடிகர்களைத் தவிர மற்றவர்கள் படங்களுக்கு அவர்கள் அள்ளிக் கொடுப்பதாக இல்லை. அதிலும் நான்கு வாரங்களில் கொடுப்பதாக இருந்தால் பிரீமியம் கொடுக்கவும் தயாராக இருக்கிறார்கள். இங்கே விநியோகஸ்தர்களும் திரையரங்கு உரிமையாளர்களும் ஒப்புக் கொள்ள மறுக்கிறார்கள். அதுவும் சரி தான். நன்கு வசூல் ஆகும் ஒரு சில படங்கள் கூட நான்கு வாரங்களில் ஓ டி டி யில் வந்து விட்டால் கல்லா காலி. ரஜினி படங்கள் மட்டுமே விதிவிலக்கு. ஜெயிலர் மட்டுமே அமேசானில் வந்தபிறகும் திரையரங்கில் வசூல் செய்தது. லால் ஸலாம் மிகப்பெரிய தோல்வி. நெட் பிளிக்ஸ் வியாபாரம் முடிவதற்குள் தவித்துப் போய்விட்டார்கள்.

இதையும் படியுங்கள்:
வருகிறது தமிழ்த் திரைப்பட வேலை நிறுத்தம்! தனுஷ் நடிக்கவிருக்கும் படங்களுக்கு செக்?
Jailer-Leo-Kubera

சாட்டிலைட் இன்னும் மோசம். படங்கள் வாங்க யாரும் பெரிய ஆர்வம் காட்டுவதில்லை. இப்போது புதிதாக ஒரு பழக்கம் வந்திருப்பதாக சொல்கிறார்கள், சாட்டிலைட் மற்றும் ஓடிடி ஆட்கள் பிசினஸ் கட்  என்ற ஒன்றைக் கேட்கிறார்களாம். அதன் படி ஒரு அரை மணி நேர படம் எடுத்துக் போட்டுக் காட்ட வேண்டுமாம். அது நன்றாக இருந்தால் வாங்குவார்கள் இல்லையென்றால் அவ்வளவு தான். போஸ்டரையும், டீசரையும், ட்ரைலரையும் வைத்து வியாபாரத்தை முடிக்க முடியாது இனிமேல்.

மேலும் இதன் மூலம் வரும் வருமானம் பாதிக்கும் கீழே குறைந்து விட்டது.  வருமானம் அதிகமாக இருக்கும் பொது சம்பளத்தை ஏற்றிய ஹீரோக்களும், இயக்குனர்களும், குறைந்த பிறகு குறைத்துக் கொள்ள தயாரில்லை. தயாரிப்பாளர்களும் இதை முழுதும் வற்புறுத்தவதில்லை. அவர்கள் கவனமெல்லாம் ஹீரோக்கள் கால்ஷீட் கிடைக்கும் வரைதான. அதன் பிறகு அவர்கள் முகமே மாறிவிடுகிறது என்கிறார் ஒரு திரைப்பட விநியோகஸ்தர். ஜாம்பவான்களான சன் டிவி, கலைஞர் டிவி கூட அடக்கி வாசிக்கிறார்கள். நான்கு திருவிழாக்கள். நான்கு படங்கள். அதை அவர்கள் தயாரிக்கும் படங்களிலேயே சரி செய்து கொள்கிறார்கள். முடிந்தது கதை.

எது நடக்கிறதோ இல்லையோ தமிழ்த் திரையுலகில் மீண்டும் ஒற்றுமை என்ற வஸ்துவை விதைக்க வேண்டும். என்ன தான் வெளியில் கைகுலுக்கிக் காட்டிக் கொண்டாலும் இந்த உள்ளடி விவகாரங்கள் தமிழ் திரையுலகை கீழே இழுத்துக் கொண்டே இருக்கின்றன. இப்பொழுதே பல வழக்கமான தயாரிப்பாளர்கள் படத் தயாரிப்பை நிறுத்தி விட்டார்கள். தெலுங்கிலிருந்து வில்லன்கள், கதாநாயகிகளை இறக்குமதி செய்த காலம் போய் இப்பொழுது தயாரிப்பாளர்கள் வந்து இறங்கி இருக்கிறார்கள். நடிகர்களுக்குப் பணம் வந்து விடும். ஆனால் கட்டுப்பாடு இவர்கள் கைகளை விட்டுச் சென்று கொண்டே இருக்கிறது என்பதே உண்மை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com