
ராப்பரும் இசையமைப்பாளருமான யோ யோ ஹனி சிங், ஏ.ஆர்.ரகுமானின் மீதுள்ள மரியாதையின் காரணமாக, அவரது பெயரை தனது தோள்பட்டையில் பச்சை குத்தி இருக்கிறார்.
ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த நடிகர், நடிகை மற்றும் பிரபலங்களின் பெயரை அல்லது உருவத்தை தங்கள் உடலில் பச்சை குத்திக்கொள்வதை கேள்விபட்டிருப்போம். ஆனால் இங்கே ஒரு ராப் பாடகர் இசை ஜாம்பவான் ஏ.ஆர்.ரகுமானின் கையொப்பத்தை தனது உடலில் பச்சை குத்திக்கொண்டுள்ளார். அது வேறுயாருமில்லை, யோயோ ஹனிசிங் தான்.
பாலிவுட்டில் பிரபல இசையமைப்பாளர், பாப் பாடகர், பாடலாசிரியர், நடிகர் என பல முகங்களைக் கொண்டவர் யோயோ ஹனிசிங். இவர் ஹிப்-ஹாப் மற்றும் ராப் பாடல்கள் பாடுவதில் மிகவும் பிரபலமானவர். ஹிர்தேஷ் சிங் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் ஏராளமான சுயாதீனப் பாடல்களையும், சினிமா பாடல்களையும் பாடி இசையமைத்துள்ளார்.
2003-ம் ஆண்டு ரெக்கார்டிங் ஆர்டிஸ்டாக தனது இசை பயணத்தை துவங்கிய இவர் பாலிவுட்டில் பிரபலமான இசையமைப்பாளர்களில் ஒருவராக வளர்ந்துள்ளார். பஞ்சாபி மற்றும் இந்தி படங்கள் சிலவற்றில் நடித்துள்ளார். மியூசிக் வீடியோக்கள் பலவற்றையும் வெளியிட்டுள்ளார். தமிழில் அனிருத் இசையில் ‘எதிர்நீச்சல்’ படத்திலும் ஒரு பாடல் பாடியுள்ளார்.
சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் வரும் லுங்கி டான்ஸ் பாடலை பாடியதுடன், அந்த பாடலுக்கு நடிகர் ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் உடன் நடனமும் ஆடியிருப்பார். அவர் பல இசை ஆல்பங்கள் பாடியிருந்தாலும் இந்த பாடல் இவரை மிகவும் பிரபலமாக்கியது.
இந்நிலையில் ராப் பாடகர் ஹனி சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனது முதுகில் ஏ.ஆர்.ரகுமானின் கையொப்பத்தை பச்சை குத்திக்கொள்வதை வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
அந்த வகையில், ஹனி சிங், ஏ.ஆர்.ரகுமான் மேல் உள்ள அன்பை வெளிப்படுத்தும் வகையில் அவரது பெயரை டாட்டூவாக வரைந்த இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் அதில் ஹனி சிங், ஏ.ஆர்.ரகுமானை "வாழும் புராணக்கதை" என்று குறிப்பிட்டு, இந்திய இசைக்கு அவர் செய்த பங்களிப்பிற்காக இந்த அஞ்சலியைச் செலுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக, மேலும் அந்த பதிவில் நான் உங்களை நேசிக்கிறேன். உங்கள் மீதான எனது அன்பிற்காக, உங்கள் இசையால் என்னை ஆசீர்வதித்ததற்கு நன்றி. இன்று நான் இசைக்கலைஞராக இருப்பதற்கு நீங்கள்தான் காரணம். நான் உங்களை என்றென்றும் நேசிக்கிறேன் என்றும் பதிவிட்டுள்ளார்.
ஹனி சிங், ஏ.ஆர்.ரகுமானை பெரிதும் மதிப்பதும், அவரது இசையை விரும்புவதும் குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே, அபுதாபியில் நடைபெற்ற ஐஐஎஃப்ஏ விருது வழங்கும் விழாவில் ஏ.ஆர்.ரகுமானின் காலில் விழுந்து ஹனி சிங் ஆசி வாங்கிய வீடியோவும் வைரலானது குறிப்பிடத்தக்கது.
மணிரத்னம் இயக்கிய ரோஜா படம் மூலம் இசையமைப்பாளராக தனது பயணத்தை தொடங்கியவர் ஏ.ஆர்.ரகுமான். இசையமைப்பாளராக களமிறங்கி 30 ஆண்டுகளுக்கும் மேலாக உலகளவில் பிரபலமான இசையமைப்பாளராக வலம் வருகிறார்.