விமர்சனம்: 'கெணத்த காணோம்' இல்ல கதையை காணோம்!
ரேட்டிங்(2.5 / 5)
யோகி பாபு, லவ்லின் சந்திரசேகர் நடிப்பில் உருவாகியுள்ள படம் கெணத்த காணோம். இந்த படத்தை சுரேஷ் சங்கையா இயக்கி உள்ளார். ராமநாதபுர மாவட்டத்தில் வானம் பார்த்த பூமியாக இருக்கும் ஒரு கிராமம். கிராமத்தில் குடிநீருக்கு மக்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். இந்த கிராமத்தில் கோவில் பூசாரியாக இருக்கிறார் மணி வாசகம் (யோகி பாபு) இவர் கிராமத்தில் உள்ள வறட்சியால் இவர் திருமணத்திற்கு யாரும் பெண் கொடுக்க முன் வரவில்லை. இருந்தாலும் பக்கத்துக்கு கிராமத்தில் உள்ள யாழினி (லவ்வின் சந்திரேசேகர்) மணி வாசகத்தை காதலிக்கிறார். மணி வாசகத்தின் கிராமத்தில் இருக்கும் தண்ணீர் கஷ்டத்தை மனதில் கொண்டு மணி வாசகத்திற்கு, தன் மகளை திருமணம் செய்து வைக்க மறுக்கிறார் யாழினியின் தந்தை.
இந்த சூழ்நிலையில் மணி வாசகத்தின் வீட்டிற்கு அருகில் நீரோட்டம் இருப்பதை தெரிந்தது கொள்ளும் கிராம மக்கள், மணி வாசகத்தின் வீட்டு வாசலில் கிணறு தோண்ட முயற்சி செய்கிறார்கள். மணி வாசகமும் இதற்கு சம்மதிக்கிறார். கிணறு தோண்ட ஆரம்பித்து ஓரிரு நாளில் டைனோசரின் மிகப்பெரிய எலும்பு கிடைக்கிறது. இதை தெரிந்து கொண்ட தொல்லியல் துறை இந்த கிராமத்தை கைப்பற்றுகிறது. தொடர்ந்து கிணறு தோண்ட தடை விதிக்கிறது. அரசின் இந்த செயல்பாடு கிராம மக்களுக்கும், அரசிற்கும் எதிரான மோதலாக மாறுகிறது. இந்த மோதலால் என்ன ஆனது? கிராமத்திற்கு குடிநீர் கிடைத்ததா? மணி வாசகத்திற்கு திருமணம் ஆனதா? என்று சொல்கிறது கெணத்த காணோம் (Kenatha Kanom).
படத்தின் பாசிட்டிவான அம்சங்களை இங்கே பார்க்கலாம். இயற்கை அழகை ஒளிப்பதிவு செய்வது அவ்வளவு கடினம் அல்ல. ஆனால் ஒரு வறண்ட நிலப்பரப்பை ஒளிப்பதிவு செய்வதற்கு சில நுட்பங்கள் தெரிந்திருக்கவேண்டும். இந்த நுட்பங்களை பயன்படுத்தி, ராமநாதபுர மாவட்டத்தின் வெப்பம், கருவேலமரம், மகளின் உணர்வுகள் போன்றவற்றை கவிதை போல படம் பிடித்துள்ளார் ஒளிப்பதிவாளர் தியாகராஜன். இவரின் ஒளிப்பதிவிற்கு நிவாஸ் கே. பிரசன்னாவின் இசை கைகோர்த்து செல்கிறது.
நீண்ட நாட்களுக்கு பிறகு யோகி பாபு கொஞ்சம் சிரிக்க வைக்கிறார். ஓரளவு நடிக்கவும் செய்திருக்கிறார். லவ்வின் சந்திரேசேகர்க்கு நடிக்க பெரிய வாய்ப்பு எதுவும் இல்லை. தாத்தா, நீரோட்டம் பார்ப்பவர், யோகி பாபுவின் அக்கா போன்ற கதாபாத்திரங்களை உருவாக்கிய விதம் சிறப்பாக உள்ளது.
தண்ணீர் பிரச்சனை, கிணறு தோண்டும் பணி என சுவாரசியமாக செல்லும் முதல் பாதிகதை டைனோசர் வந்த பின்பு படுத்தே விட்டது. இரண்டாவது பாதி தண்ணீர் பிரச்சனை இருந்து விலகி விடுவதால் ரசிக்க முடியவில்லை. பல காட்சிகள் பல இடத்தில வந்தது போல உள்ளது. ராமநாதபுரத்தில் நிலவும் தண்ணீர் பிரச்சனைக்கு ஒரு சரியான தீர்வை முன் வைத்திருந்தால் இது சரியான படம் என்று சொல்லியிருக்கலாம். தண்ணீர் பிரச்சனையை பேச வேண்டிய படம் டைனோசர் பிரச்சனையை பேசுகிறது.
ராமநாத புர மாவட்டத்தின் குடி தண்ணீர் பிரச்சனைக்கு சரியான தீர்வை முன் வைத்திருந்தால் இந்த படம் சரியான காலத்திற்கு ஏற்ற கதையை பேசி இருக்கிறது என்று பாராட்டி இருக்கலாம். இப்போது சினிமாவில் ட்ரெண்டிங் ஆக இருக்கும் கார்ப்பரேட் நிறுவனங்கள் ஊர் நிலத்தை ஆக்கிரமிக்கும் போது பொங்கி எழும் ஹீரோ என்ற கதையை போலவே இந்த படமும் இருக்கிறது. அங்கே கார்ப்பரேட் என்றால் இங்கே தொல்லியல் துறை அவ்வளவுதான் வித்தியாசம்.
மொத்தத்தில் கெணத்த காணோம் - பின் பாதியில் கதையை காணோம்.

