200 ஆண்டுகள் பழமையான 'நாச்சார் வீடுகள்'! போய் வருவோமா?

Nachar houses
Nachar houses
Published on

நாற்சார் வீடுகள் என்று அழைக்கப்பட்டு, பின்னர் பேச்சு வழக்கில் நாச்சார் வீடுகள் என்று மாறிப்போன வீடுகள் இலங்கையின், யாழ்ப்பாணம் முழுதும் பரவலாக இருந்தன. மானிப்பாய், வட்டுக்கோட்டை, மருதனார்மடம் உள்ளிட்ட வலி மேற்கு, வலி வடக்கு போன்ற பகுதிகளில் அதிக அளவில் காணப்படுகின்றன. நாச்சார் வீடுகள் கருங்கல்லும் சுண்ணாம்பும் கொண்டு அமைக்கபட்டவை. சுமார் இருநூறு ஆண்டுகள் பழமையான வீடுகளும் இருக்கின்றன.

நாச்சார் வீடுகளின் மையத்தில் செவ்வக வடிவில் முற்றம் ஒன்றும், அதைச் சுற்றி சற்று உயரமான நடை மேடையும், தூண்களும், பின்னர் அதனைச் சுற்றி அறைகளும் அமைக்கபட்டிருக்கும். மரவேலைப்பாடுகள் கொண்டவையாகவும் அமைக்கபட்டுள்ளன. இந்த வீடுகள் மரபு வழியிலான பெரிய கூட்டுக் குடும்பங்களுக்காக கட்டபட்டவை. அதற்கேற்றவாறு சில வீடுகள் பத்து பன்னிரண்டு அறைகள் கொண்டதாகவும் இருக்கும். வண்ணார்பண்ணைப் பகுதியில் இரண்டு முற்றங்களைக் கொண்ட சில வீடுகளும் இருந்திருக்கின்றன.

இவ்வீடுகளில், தெருவில் இருந்து வீட்டுக்குள் செல்வதற்கு ஒரு நடைபாதை இருக்கும். இதை 'நடை' என அழைப்பர். இது நடு முற்றம் வரை செல்லும். சில வீடுகளில் நடைக்கு, சதுரமாக வெட்டி, மட்டம் செய்யப்பட்ட கருங்கல் பதிக்கப்பட்டிருக்கும். நடையின் இரண்டு பக்கங்களிலும் ஒன்றரை அல்லது இரண்டு அடி உயரமான திண்ணைகள் இருக்கும். வீட்டுக்கு வரும் விருந்தினர்களை அக்காலத்தில் இத்திண்ணைகளில் அமர வைத்து உபசரித்தனர்.

இந்த வீடுகள், காரைக்குடிப் பகுதியிலுள்ள செட்டிநாட்டினர் வீடுகளை நினைவுபடுத்தினாலும், இவ்வீடுகளின் மேற்கூரை ஓடுகளைக் கொண்ட அமைப்புடன் இருப்பதைப் பார்க்கும் போது, இவை கேரளத்தில் உள்ள நாலுகெட்டு வீடுகளைப் போன்றவை எனலாம்.

யாழ்ப்பாணம் பகுதியிலிருந்து சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளிநாடுகளுக்கு வேலைக்குச் சென்று, அதிகமாகப் பொருளீட்டிய பணக்காரக் குடும்பங்களால் இவ்வகை வீடுகள் முதலில் கட்டப்பட்டன. அதனைத் தொடர்ந்து, இந்த வீடுகளை உள்ளூர்க்காரர்களும் கட்டிக் கொண்டனர்.

இதையும் படியுங்கள்:
முத்து குளிக்க வாறீகளா? எப்படி?
Nachar houses

கூட்டுக் குடும்ப வாழ்க்கைக்கு வசதியாக அமைக்கப்பட்ட நாச்சார் வீடுகள், தற்போதையக் கூட்டுக் குடும்பங்களின் சிதைவால், வீடுகளில் கூட்டமின்றி போய்விட்டன. வயதானவர்கள் மட்டும் வாழக்கூடிய வீடுகளாக மாறிப் போய் விட்டன. உள்நாட்டுப் போரின் போது, இவ்வகையான பல வீடுகள் சேதமடைந்து போய்விட்டன என்றாலும், தற்போதையக் காலத்துக்கு இந்த வீடுகள் பயனில்லாதவை என்ற கருத்தின் அடிப்படையில், அதிகமான வீடுகள் இடித்து அழிக்கப்பட்டு, அவ்விடங்களில் நவீன மாடிக் கட்டிடங்கள் பல உருவாகி விட்டன. வணிக இட வசதித் தேவைக்கேற்பவும் இவ்வகை வீடுகள் இடிக்கப்பட்டு, அவ்விடங்களில் வணிகக் கட்டிடங்கள் வந்துவிட்டன.

யாழ்ப்பாணத்திற்குப் பெருமை சேர்த்து வந்த நாச்சார் வீடுகள் இன்று இல்லாமல் போய்க் கொண்டிருப்பது வருத்தத்திற்குரியதுதான்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com