
உலகத்தில் மனிதனின் புரிதலுக்கு அப்பாற்பட்ட 5 வரலாற்று மர்மங்கள் (Mysteries) பற்றித் தெரிந்து கொள்வோமா..?
வரலாற்று மர்மங்கள் வரிசையில் முன்னால் நிற்பது சிந்து சமவெளி நாகரிகம் தான். கி.மு காலகட்டத்தில் சுமார் 2000 ஆண்டுகளுக்கு இருந்த ஒரு பெரிய நாகரிகம் இது. இப்போதிருக்கும் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வடமேற்கு இந்தியா பகுதிகளை இணைத்தபடி இந்த நாகரிகம் புழக்கத்தில் இருந்திருக்கிறது.
மெசபட்டோமியா, எகிப்து நாகரிகங்களை ஒப்பிடும்போது இது பரப்பளவில் பெரியது. அகழாய்வில் இந்த நாகரிகத்தின் அழகிய நகரங்கள் கண்டுபிடிக்கப்பட்டது அனைவரும் அறிந்ததே.
இதன் மர்மம், இங்கு வாழ்ந்த மக்கள் பயன்படுத்திய மொழி தான். சுமார் 400 குறியீடுகள் கொண்டதொரு மொழியினை இந்த மக்கள் பயன்படுத்தி இருக்கிறார்கள். இன்று வரை இந்த மொழியை யாராலும் படிக்க முடியவில்லை. அதனால் இந்த மக்களை ஆண்டவர்கள் யார், எந்த மதத்தை இந்த மக்கள் பின்பற்றினார்கள் என்பதெல்லாம் மர்மமாகவே உள்ளன. இத்தனை பெரிய இந்த நாகரிகம் திடீரென்று அழிந்தும் போயிருக்கிறது. எப்படி என்பது இன்றுவரை ஒரு வரலாற்று மர்மமாகவே நீடிக்கிறது.
மகாராஷ்டிராவில் எல்லோரா குகைகளுக்கு நடுவில் உள்ள ஒரு பிரும்மாண்டமான மர்மம் இந்த கைலாசா கோவில். பொதுவாக கற்கோவில்கள் கீழிருந்து மேலாகத்தான் செதுக்கப்படும். ஆனால் இந்த கைலாச கோவிலை, பெரிய கருங்கல் மலையொன்றை மேலிருந்து கீழாக செதுக்கிக்கொண்டுபோய் கட்டி இருக்கிறார்கள்.
கிபி எட்டாம் நூற்றாண்டில் முதலாம் கிருஷ்ணா என்ற ராஷ்டிரகூட மன்னரால் இக்கோவில் கட்டப்பட்டது. இக்கோவிலை 18 ஆண்டுகள் செதுக்கியதாக வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். கிட்டத்தட்ட நான்கு லட்சம் டன் பாறைகளை அப்புறப்படுத்தி இக்கோவிலைச் செதுக்கியிருக்கிறார்கள். அந்த நான்கு லட்சம் டன் பாறை குப்பைகளை எங்கே கொட்டி இருக்கிறார்கள் என்பது இந்த கோவில் பற்றிய முதல் மர்மம்.
மேலிருந்து கீழாக இத்தனை துல்லியமாகக் கட்டுவதற்குப் பயன்படுத்தப்பட்ட கருவிகள், திட்டவரைபடம், இதற்காக உழைத்தவர்கள் யார் என்பதெல்லாம் மர்மமாகவே நீடிக்கிறது. சுரங்க பாதைகள், இக்கோவிலின் அடிமானத்தில் இருப்பதாகச் சொல்லப்படும் வெற்றிடம், இவை பற்றி எல்லாம் எதுவும் கண்டுபிடிக்க முடியவில்லை. இக்கோவிலின் ஒரு பகுதியில் எதிரொலி டெக்னாலஜி ஒன்றையும் பயன்படுத்தி இருக்கிறார்கள். அதை எப்படிச் செய்தார்கள், செய்தவர் யார் என்பதெல்லாம் தெரியவில்லை. இன்னும் பல மர்மங்களை இக்கோவில் கொண்டிருக்கிறது.
2000 ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட மிகப் பழைய இயந்திரம் இது. 1901ல் கிரேக்கத்தின் ஆண்டிகிதெரா தீவுக்கு அருகில் கப்பல் விபத்து நடந்த இடமொன்றில் இது கண்டுபிடிக்கப்பட்டது. 30 வெங்கல சக்கர கியர்கள், ஒரு frame, கொண்ட மிகவும் சிக்கலான இயந்திரமாக இதனை உருவாக்கியிருக்கிறார்கள். 2000 ஆண்டுகளுக்கு முன்பிருந்த தொழில்நுட்பத்தை விட இது பல மடங்கு அதிநவீனமாக உள்ளது என்பதுதான் இதன் மர்மமாகும்.
இது கால்குலேட்டரா, கம்ப்யூட்டரா, காலண்டரா, கடிகாரமா, வானத்தில் கோள்களின் நிலைகளை நகர்வுகளை ஆராயும் கருவியா, என்பது பற்றி பல்லாண்டுகளாக ஆய்வு செய்கிறார்கள்.
2005ல் இந்த இயந்திரத்தை X-ray எடுத்துப் பார்த்து இது கோள்களின் நகர்வுகளைக் கணக்கிடும் கருவி தான் என்று உறுதிசெய்தார்கள். இக்கருவியிலும் கிரேக்க மொழியில் சில குறிப்புகளும் வேறு சில குறியீடுகளும் உள்ளன. அவற்றின் அர்த்தத்தைப் புரிந்து கொள்ள முடியவில்லை. மொத்தத்தில் உண்மையில் இந்த இயந்திரம் என்னது, எதற்காக இது பயன்பட்டது, இதைச் செய்தவர் யார் என்பது மர்மமாகவே உள்ளது.
எகிப்தில் அஸ்வான் என்ற இடத்தில் 42 மீட்டர் நீளத்தில் 1600 டன் எடையில் ஒரு கல் தூண் முடிக்கப்படாத நிலையில் உள்ளது. ஒரே கல்லில் முக்கால்வாசி செதுக்கிய நிலையில் இந்தத் தூண் காணப்படுகிறது. ஏன் இந்தத் தூணை முழுவதுமாக செதுக்கி நிமிர்த்தாமல் விட்டு விட்டார்கள் என்பது ஒரு மர்மமாக உள்ளது.
இத்தூணில் விழுந்த பெரிய விரிசல் தான் இதற்குக் காரணம் என்றும், இதனைச் செதுக்கச் சொன்ன ராணி இறந்து விட்டதால் இந்த வேலை பாதியில் விடப்பட்டது என்றும் கூறப்படுகிறது. ஆனால் இந்தத் தூண் முடிக்கப்படாததற்கு உண்மையான காரணம் என்னவென்பது இன்னும் மர்மமாகவே உள்ளது.
நார்வே நாட்டின் பழைய நாணயமான மேன் பென்னி (Maine Penny) பல வரலாற்று விவாதவர்களுக்கு காரணமான ஒன்றாகும். 1065-1080 காலகட்டத்தில் நார்வே நாட்டில் புழக்கத்தில் இருந்த இந்த நாணயம் 1957ல் அமெரிக்காவின் மேன் மாகாணத்தில் நடந்த ஒரு தொல்பொருள் ஆய்வின் போது கண்டுபிடிக்கப்பட்டது என்பதுதான் இதில் மர்மமான விஷயம்.
எனில் கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடிப்பதற்குப் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே நார்வே நாட்டுக்கும் அமெரிக்க பழங்குடியினருக்கும் இடையே வர்த்தகம் நடைபெற்றதா என்பதுதான் பெரிய மர்மமாக உள்ளது.
இக்கட்டுரையில் உள்ள ஐந்தைத் தவிர இன்னும் புரிந்து கொள்ள முடியாத வரலாற்று மர்மங்கள் இந்த உலகத்தில் நிறைய உள்ளன. பண்டைய காலத்தின் மொழியைப் படிக்கத் தெரிந்தவர் இப்போது எவரும் இல்லை என்பதுதான் பல மர்மங்கள் மர்மங்களாகவே நீடிப்பதற்கான காரணமாக உள்ளது. ஒருவேளை அந்த மொழியையும் குறியீடுகளையும் சரியாகப் புரிந்துகொள்ள முடிந்தால் பல மர்மங்களுக்கு விடை கிடைத்தவிடும்.