மாயன் நாகரிகம் (Mayan Civilization) என்பது சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மத்திய அமெரிக்காவில் செழித்தோங்கிய ஒரு பிரம்மாண்ட நாகரிமாகும்.
மாயன் மக்களின் கட்டடக்கலை, கணிதம் மற்றும் வானியல் அறிவு இன்றுவரை உலகின் மிகப்பெரிய புதிர்களில் ஒன்றாக உள்ளது. குறிப்பாக, அவர்கள் உருவாக்கிய ஒரு சிக்கலான காலண்டர் (Mayan Calender), அதிர்ச்சிதரும் தகவல்களை கொண்டதாக கூறப்படுகிறது.
மாயன்கள் ஒரே நேரத்தில் பல காலண்டர்களைப் பயன்படுத்தினர். அவற்றில் முக்கியமானவை:
சோல்கின் (Tzolk'in): 260 நாட்களைக் கொண்ட ஒரு புனிதமான நாட்காட்டி. இது சடங்குகளுக்கும், நல்ல நேரங்கள் மற்றும் கெட்ட நேரங்களைப் பார்க்க பயன்படுத்தப்பட்டது.
ஹாப் (Haab'): 365 நாட்களைக் கொண்ட சூரிய நாட்காட்டி. இது விவசாயம் மற்றும் பருவகாலத்தைக் கணிக்கப் பயன்பட்டது.
நீண்ட கணக்கு (Long Count): இதுவே பிரபஞ்சத்தின் ஆழமான ரகசியங்களை உள்ளடக்கியது. இது பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளைக் கணக்கிடப் பயன்பட்டது.
மாயன் கணிப்பு ரகசியம்:
மாயன் நாட்காட்டிகள் மிகவும் துல்லியமானவை. உதாரணமாக, அவர்கள் வீனஸ் (Venus) கோளின் சுழற்சியை சுமார் 584 நாட்கள் என கணக்கிட்டனர். நவீன வானியல் கருவிகளைக் கொண்டு அளவிடப்பட்ட அதன் சரியான காலம் 583.92 நாட்கள். இது மிகச்சிறிய பிழைதான் என்பது நவீன விஞ்ஞானிகளைக் கூட வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது.
அவர்கள் பூமியின் சாய்மானம் , சந்திரனின் சுழற்சி, கிரகணங்கள் ஆகியவற்றைக் குறித்து மிகவும் துல்லியமான அட்டவணைகளை உருவாக்கினர். 'நீண்ட கணக்கு' நாட்காட்டியானது, பிரபஞ்சம் மீண்டும் மீண்டும் அழிந்து உருவாகும் சுழற்சியைக் குறித்தது. ஒரு சுழற்சி சுமார் 5125 ஆண்டுகள் ஆகும். 2012-ஆம் ஆண்டு உலகம் அழியும் என்ற அச்சத்தை மக்களுக்கு தூண்டியது இதன் காரணமாகதான். ஆனால், மாயன்களைப் பொறுத்தவரை, அது அழிவாகப் பார்க்கப்படவில்லை, ஒரு பெரிய 'யுக மாற்றம்' என்றே சொல்லப்பட்டது.
நகரங்களின் மர்ம மறைவு:
கி.பி. 800 மற்றும் 1000 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், மாயன் மக்கள் தங்களின் பிரமிடுகளும், அரண்மனைகளும் நிறைந்த பெரிய நகரங்களை திடீரெனக் கைவிட்டு, மழைக்காடுகளுக்குள் குடியேறினர். ஒரு மாபெரும் நாகரிகத்தின் இந்த மர்மமான முடிவுக்கு எந்த ஒரு தெளிவான காரணமும் இதுவரை கண்டறியப்படவில்லை.
புராணக் கதைகளும், ஊகங்களும் பல இருந்தாலும், தொல்பொருள் ஆய்வாளர்கள் சில முக்கியக் காரணங்களை முன்வைக்கின்றனர்:
அதாவது நீண்ட கால வறட்சி முக்கிய காரணங்களுள் ஒன்று. மாயன் பகுதிகளில் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக கடுமையான வறட்சி நிலவியதற்கான வலுவான வானிலை தரவுகள் கிடைத்துள்ளன. இதனால் நீர்வளத்தை மட்டுமே நம்பியிருந்த விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டது.
மேலும் நகரங்களில் மக்கள்தொகை மிக அதிகமாகப் பெருகியபோது, உணவு மற்றும் நில வளங்களுக்காக நகரங்களுக்குள் கடுமையான போட்டி மற்றும் தொடர் போர்கள் வெடித்திருக்கலாம் என்றும் கணிப்புகள் கூறுகின்றன.
தீவிர விவசாயத்திற்காகக் காடுகளை அதிக அளவில் அழித்ததால் மண் வளம் குன்றி, உணவு உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டு, சுற்றுச்சூழல் சமநிலை சீர்குலைந்தது என்றும் சொல்லப்படுகிறது.
நீண்ட கால வறட்சி மற்றும் உணவுப் பற்றாக்குறை காரணமாக, ஆட்சியாளர்களின் மீதான மக்களின் நம்பிக்கை குறைந்து, அரசாங்கம் வீழ்ச்சியடைந்து, மக்கள் தங்கள் பிழைப்புக்காக அந்நகரை விட்டு வெளியேறியிருக்கலாம்.
மாயன் நாகரிகம் முழுமையாக அழியவில்லை. அவர்கள் இன்றும் மத்திய அமெரிக்கப் பகுதிகளில் வாழ்கின்றனர். ஆனால், அவர்களின் பிரம்மாண்ட நகரங்கள் மட்டும் வரலாற்றின் மர்மப் புதையலாகக் காடுகளுக்குள் மறைந்து கிடக்கின்றன.