கிராமப்புறங்களில் ஒருசில செய்கைகளைக் குறிக்கவும், அதன் மூலம் கருத்து சொல்லவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நம் முன்னோர்கள், பழமொழிகளை சொல்லி வந்தனர். பழமொழி என்பது ஏதாவது ஒரு செய்கையை குறிக்கவோ, ஒரு செயலுக்கு விளக்கம் தரவோ சொல்லப்படுகிறது. பழமொழிகள் அனுபவத்துடன் சேர்த்து, அறிவுரையும் சொல்லும். தற்போதும் வழக்கில் இருக்கும் பல பழமொழிகளுக்கு அதற்குரிய உண்மையான அர்த்தங்கள் சொல்லப்படாமல், நாளடைவில் மருவி வேறு ஏதோ அர்த்தங்கள் சொல்லப்படுகின்றன. அவ்வாறு சொல்லப்படும் சில பழமொழிகளின் சரியான விளக்கங்களை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
‘கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை?’:
இதன் உண்மையான வார்த்தைகள், ‘கழு தைக்க தெரியுமாம் கற்பூர வாசனை’ என்பதுதான். 'கழு' என்பது ஒரு வகை கோரை புல் ஆகும். அதை பாய் தைக்கப் பயன்படுத்துவர். 'கழு' கொண்டு பாய் தைக்கும்பொழுது அதில் கற்பூர வாசனை வரும். அதைத்தான் நமது முன்னோர்கள், 'கழு தைக்க தெரியுமாம் கற்பூர வாசனை' என்று கூறினர். இதுவே மருவி, 'கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை' என்று வழக்கானது.
‘சட்டியில் இருந்தாதானே ஆப்பையில் வரும்’:
‘சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும்’ என்பதே இப்படி மருவி விட்டது. அதாவது, ‘சஷ்டியில் விரதம் இருந்தால் அகப்பை எனப்படும் கருப்பையில் குழந்தை வளரும்' என்பதைத்தான் அப்படிச் சொல்லியிருக்கிறார்கள். முருகப்பெருமானுக்காக அவரது பக்தர்கள் மேற்கொள்ளும் விரதங்களில் முதன்மையானது சஷ்டி விரதம். ஐப்பசி மாதம் மகா சஷ்டி விரதம் 6 நாட்கள் மேற்கொள்ளும் பெண்களுக்கு திருமணத்திற்குப் பின்னர் எந்தவித தடங்களும் இன்றி குழந்தை வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இதுவே மருவி நாளடைவில் ‘சட்டியில் இருந்தாதானே ஆப்பையில் வரும்’ என்று ஆகிவிட்டது.
‘ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யணம் பண்ணி வை’:
‘ஆயிரம் முறை போய் சொல்லி கூட ஒரு கல்யாணம் பண்ணலாம்’ என்பதே இப்படி மருவி விட்டது. அதாவது நம் உறவினர்கள், நண்பர்கள் ஆகியோருடன் நாம் பகைமை கொண்டு நம் வீட்டில் நடக்கும் கல்யாணம் போன்ற சுப தினங்களுக்கு அவர்களை நாம் அழைக்காமல் இருப்போம். ஆனால், அவர்களை விட்டுவிடாமல் ஆயிரம் முறை போய் சொல்லியாவது அவர்களை அழைத்து நம் வீட்டில் திருமணம் நடத்த வேண்டும் என்பதே இதன் உண்மை அர்த்தமாகும். இப்படி நல்ல நோக்கத்திற்காக சொல்லப்பட்ட இந்த பழமொழிதான் பின்னாளில் மருவி, ‘ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணம் பண்ணி வை’ என்றாகி விட்டது.
‘ஆறிலும் சாவு நூறிலும் சாவு’:
மகாபாரதத்தில் கர்ணனின் தாய் குந்திதேவி, பாண்டவர்களுடன் கர்ணனை சேர்ந்துக்கொள்ளுமாறு கேட்கின்றாள். அப்போது அவன் பாண்டவர்களுடன் சேர்ந்து ஆறாவதாக வந்தாலும் தனக்கு சாவு நிச்சயம், கெளரவர்கள் நூறு பேருடன் சேர்ந்திருந்தாலும் தனக்கு சாவு நிச்சயம். எனவே. செஞ்சோற்றுக் கடனுக்காக கௌரவர்களுடனேயே இருந்துவிடப் போவதாகக் கூறுகின்றான். அதாவது, ஐந்து பேர் பாண்டவர்களுடன் ஆறாவதாகச் சேர்ந்தாலும் தனக்கு சாவுதான். நூறு பேர் கௌரவர்களுடன் இருந்தாலும் தனக்கு சாவுதான் என்பதுதான் அது. ஆனால், ‘ஆறிலும் சாவு நூறிலும் சாவு என்பது இன்று வயதைக் குறிப்பதாக அர்த்தப்பட்டு விட்டது.
‘நாயை கண்டால் கல்லைக் காணோம்; கல்லைக் கண்டால் நாயை காணோம்’:
பண்டைக் காலத்தில் அற்புத சிற்பங்கள் வடிக்கப்பட்டன. மாமல்லபுரம், தஞ்சை, காஞ்சி சிற்பங்கள் இதற்கு எடுத்துக்காட்டாக விளங்கின. ஒரு சிற்பி நாயின் உருவத்தை கல்லில் சிற்பமாக வடித்திருந்தான். அந்த சிற்பத்தை ஒருவன் மிகவும் ரசித்தான். அந்த ரசிகனைச் சிற்பி, ‘எனது சிற்பம் எப்படி இருக்கிறது?’ என்று கேட்டான். அதற்கு அந்த ரசிகன் சொன்ன பதில், 'நாயை கண்டால் கல்லைக் காணோம்; கல்லைக் கண்டால் நாயை காணோம்' என்பதாக இருந்தது. அதாவது அந்த சிற்பத்தில் நாயைப் பார்த்தால் கல் தெரியவில்லை. கல்லைப் பார்த்தால் நாய் தெரியவில்லை என்பதுதான் உண்மைப் பொருள். இந்த பழமொழி இன்று நகைச்சுவையாக மாறிவிட்டது.
‘ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்’:
ஒருவனின் மனைவி கர்ப்பமாக இருக்கும்போது (என்னதான் அவள் தனது மனைவியாகவே இருந்தாலும், அவள் இன்னொருவன் அதாவது ஊரான் பிள்ளைதானே) அவளை நன்றாக கவனித்துகொண்டால், அவளின் வயிற்றில் வளரும் தன்னுடைய பிள்ளை தானாக வளரும் என்பதே இதன் உண்மைப் பொருளாகும்.
‘மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே’:
‘மண் குதிரை நம்பி ஆற்றில் இறங்காதே’ என்பதுதான் மருவி மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே என்றாகி விட்டது. அதாவது ஆற்றுப்படுகைகளில் மண் குதிர்கள் காணப்படும். அவற்றில் கால் வைத்தால் கால்கள் உள்ளே இழுத்துக்கொண்டு பதியும். அந்த மண் குதிரை (குதிர் ஐ) நம்பி ஆற்றில் இறங்காதே என்பதுதான் இப்பழமொழியின் உண்மைப் பொருள்.