உடல் ஆரோக்கியம் வேண்டி உணவியல் நிபுணர்களிடம் செல்பவர்களுக்கு, அவர்கள் கூறும் ஆலோசனை, ‘ABCகளை எடுத்துக் கொள்ளுங்கள்’ என்பதேயாகும். ‘அதென்ன ஏபிசி?’ என்றுதானே யோசிக்கிறீர்கள். A ஆப்பிள், B பீட்ரூட், C கேரட். இதுதான் அவர்கள் சொல்லும் உடல் ஆரோக்கியத்திற்கான உணவு வகைகள்.
பொதுவாகவே, இவை மூன்றும் அநேக நன்மைகள் தரும் சத்துக்கள் கொண்டவை என அனைவரும் அறிவோம். இந்த ஏபிசி உணவுகள் கல்லீரலைப் பாதுகாக்க உதவுகின்றன. உடல் பருமனை எதிர்த்துப் போராடும் கரையக்கூடிய நார்ச்சத்து இவற்றில் உள்ளதால் எடையை கட்டுக்குள் வைக்கிறது. சருமத்திற்கு விரைவில் வயோதிகம் ஏற்படுவதில் இருந்தும், சோர்ந்துபோவதில் இருந்தும் உடலைக் காக்கிறது. முடி உதிர்வைக் குறைத்து வளர்ச்சியைத் தருகிறது. இப்படி ஏகப்பட்ட நன்மைகள் தரும் இதிலுள்ள சத்துக்களைப் பெற இவற்றை எப்படிப் பயன்படுத்தலாம் என்பதை இந்தப் பதிவில் காண்போம்.
ஆப்பிளில் வைட்டமின் ஏ, பி1, பி2, பி6, சி, ஈ மற்றும் கே, ஃபோலேட், நியாசின், துத்தநாகம், தாமிரம், பொட்டாசியம், மாங்கனீசு மற்றும் பாஸ்பரஸ் உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்திருப்பதால் இது நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதில் சிறந்ததாகிறது. இரத்தத்தை சுத்திகரித்து செல்களைப் புதுப்பிப்பதால் கேன்சர் போன்ற பாதிப்பை தடுக்கிறது. மேலும், இரத்த அழுத்தத்தை சீராக வைத்து சருமப் பளபளப்பை அதிகரிக்கிறது.
பீட்ரூட்டில் உள்ள இரும்புச்சத்து, வைட்டமின் A, C, பொட்டாசியம், மெக்னீசியம், நார்ச்சத்து போன்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன. இதில் நார்ச்சத்து அதிக அளவில் உள்ளதால் சிறந்த கழிவு நீக்கியாக செயல்புரிகிறது. சருமத்தில் உள்ள கழிவை நீக்கி அதிக எண்ணெய் உற்பத்தியை கட்டுப்படுத்துகிறது. இதனால் முகப்பருக்கள் போன்ற சரும பாதிப்பு வராமல் தடுக்கிறது. மேலும், இதய பாதுகாப்பு மற்றும் அதீத கொழுப்பின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
கேரட்டில் உள்ள பீட்டா கரோட்டின் சூரிய ஒளியில் இருந்து சருமத்துக்கு பாதுகாப்பை அளிக்கிறது. இதில் உள்ள அழற்சிக்கு எதிரான உட்பொருட்கள், சிவந்த தன்மை மற்றும் சருமத்தில் எரிச்சலை குறைக்கிறது. குறிப்பாக, சரும நெகிழ் திறனுக்கு கொலாஜன் உற்பத்தி மிகவும் அவசியம்.
ஆப்பிள் மற்றும் கேரட்டில் வைட்டமின் சி சத்து நிறைந்துள்ளது. இது கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கிறது. சருமம் தொய்வடைவதைத் தடுத்து இளமைத் தோற்றம் தருகிறது. வைட்டமின் ஏ உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்ற உதவுவதோடு, கல்லீரலில் இருந்து பித்தம் மற்றும் கொழுப்பையும் குறைக்கிறது.
இந்த மூன்றையும் அதன் இயல்பு மாறாமல் அப்படியே உண்பது ஆரோக்கியத்துக்கு மிகச் சிறந்த வழி. இல்லையெனில் இவற்றை பக்குவமாக உலர வைத்து பொடித்து அதனுடன் பொடித்த முந்திரி பருப்பு, பிஸ்தா, அக்ரூட் பருப்பு, ஏலக்காய் மற்றும் நாட்டுச் சர்க்கரை அல்லது பனங்கற்கண்டு சேர்த்து மால்ட் போல தயாரித்து சூடான பானங்களில் கலந்து குடிக்கலாம்.
இதுபோன்ற பானங்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றதாக இருக்கும். செயற்கை உணவுகளைத் தவிர்த்து இதுபோன்ற இயற்கை உணவுகளை உண்பது உடலுக்கும் நலம் தரும்.