
இந்தியா, உயரிய ஆன்மீக நோக்கங்களை கொண்ட நாடாக உலகளவில் அறியப்படுகிறது. சைவம் ஆன்மீகத்துடன் நெருக்கமாக தொடர்புடையது. இந்துக்கள் மற்றும் ஜைனர்கள் சைவத்தின் மீது மிகப்பெரிய ஈடுபாடு கொண்டவர்கள். இந்து மதம், சமண மதம் மற்றும் புத்த மதத்தின் சில பிரிவுகள் ஊக்குவிக்கும் சைவ உணவுப் பழக்கவழக்கங்களில் கலாச்சார, மத மற்றும் வரலாற்று காரணிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்தியாவில் ஆன்மிக இடங்களாக கருதப்படும் சில நகரங்களில் அசைவ உணவுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்தியாவில் அசைவ உணவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள முக்கியமான நகரங்களை பற்றி அறிந்து கொள்ளலாம்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஹரித்வார், இந்துக்கள் மத்தியில் மத முக்கியத்துவம் வாய்ந்த நகரமாக கருதப்படுகிறது. இதனால் ஹரித்வாரில் இறைச்சி, மீன் மற்றும் முட்டைகளை விற்பனை செய்வதற்கும் சாப்பிடுவதற்கும் கடுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. ஹரித்வார் ஒரு புனித தலம் என்பதால், இங்கு அசைவ உணவு விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது.
ரிஷிகேஷ், ஹரித்வாரை போல் மற்றொரு பிரபலமான யாத்திரை தளம் மற்றும் இந்துக்களின் புனிதமான இடங்களில் ஒன்றாகும். அசைவ உணவு மற்றும் மது அருந்துவது இங்கு கண்டிப்பாக தடை செய்யப்பட்டுள்ளது.
உத்தரபிரதேசத்தில் உள்ள அயோத்தி நகரம் ராமர் பிறந்த புனித இடமாகும். ராமர் கோவில் திறக்கப்பட்டதில் இருந்தே அயோத்தி சுற்றுலா தலமாக மாறி விட்டது. அயோத்தியைச் சுற்றியுள்ள 15 கி.மீ புனித யாத்திரை பாதையில் அசைவ உணவு மற்றம் மதுபானங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நவராத்திரி மற்றும் பிற முக்கியமான ஆன்மிக பண்டிகைகளின் போது, அசைவம் முற்றிலுமாக தடைசெய்யப்பட்டுள்ளது.
உத்தரபிரதேசத்தில் உள்ள பிருந்தாவனம் பகவான் கிருஷ்ணாவுடனான ஆழமான தொடர்பைக் குறிக்கிறது. இது ஒரு முக்கிய இந்து புனித யாத்திரைத் தலம் என்பதால், பிருந்தாவனம் பகுதியில் அசைவ உணவுகளை விற்பது மற்றும் சாப்பிடுவது முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் குஜராத் மாநிலத்தின் பவநகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது பாலிதானா. இங்கு அசைவ உணவு விற்பனை செய்வது மற்றும் சாப்பிடுவது முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது. இங்கு அசைவம் சாப்பிடுவது, விற்பது சட்டவிரோதமாக கருதப்படுகிறது. பாலிதானா நகரம் அசைவ உணவு விற்பனை மற்றும் நுகர்வுக்கு தடை விதித்த உலகின் முதல் நகரமாக வரலாறு படைத்துள்ளது. நன்கு அறியப்பட்ட ஜெயின் புனிதத் தலமான பாலிதானாவில் விலங்குகளைக் கொல்வதும் இறைச்சியை விற்பது அல்லது சாப்பிடுவதும் சட்டவிரோதமானது மற்றும் குற்றமாகும்.
ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோவில் உலகளவில் பெயர் பெற்றது. திருப்பதி புனிதம் நிறைந்த பகுதியாக கருதப்படுவதால் இந்த கோயில் வளாகம் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் இறைச்சி சாப்பிடுவது மற்றும் விற்பனை செய்வது தடைசெய்யப்பட்டுள்ளது.
ராஜஸ்தானில் உள்ள புஷ்கர் நகரத்தில் அசைவ உணவுகளை உட்கொள்வது தடைசெய்யப்பட்டுள்ளது. இது இந்துக்கள் மற்றும் சீக்கியர்களுக்கு புனித யாத்திரை ஸ்தலம் என்பதால் அசைவ உணவுகளை விற்கவும், மது அருந்தவும் தடை செய்யப்பட்டுள்ளது.
சீரடியில் அசைவ உணவுகளைத் தடைசெய்யும் கடுமையான மத விதிமுறைகள் உள்ளன. சாய்பாபா கோவில் அமைந்துள்ள ஷீரடி நகரத்தில் ஆன்மீக மற்றும் கலாச்சார மரபுகளுக்கு ஏற்ப, சைவ உணவுகளே வழங்கப்படுகின்றன.