வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோவில் - வரலாற்று சிறப்பும் சிற்பக் கலையும் ஒருங்கே இணையும் அற்புதம்!

ஜலகண்டேஸ்வரர் கோவில்
ஜலகண்டேஸ்வரர் கோவில்
Published on

தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் வரலாற்று சிறப்புகளை தாங்கியுள்ள மாவட்டங்களில் ஒன்றுதான் வேலூர் மாவட்டம். வேலூர் கோட்டைக்கு உள்ளேயே அமைந்துள்ள ஜலகண்டேஸ்வரர் கோவில் பல்வேறு சிறப்புகளைப் பெற்றிருப்பது போலவே சிற்பக் கலைகளாலும் நிறைந்துள்ளது.

வேலூரில் சுமார் 136 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமாக அமைந்துள்ளது வேலூர் கோட்டை. இக்கோட்டையின் உள்ளே ஏழு படிநிலைகளைக் கொண்ட பிரம்மாண்ட ராஜ கோபுரத்துடன் ஜலகண்டேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. வலது பக்கம் குளமும் இடது பக்கம் கல்யாண மண்டபமும் அமைந்துள்ளது. இந்த கல்யாண மண்டபம் முழுக்க முழுக்க புடைப்புச் சிற்பங்களால் நிரம்பி வழிகிறது.

கிரானைட் கற்களை பயன்படுத்தி அமைக்கப்பட்டுள்ள புடைப்புச் சிற்பங்கள் மிகவும் தத்ரூபமாகவும் நுண்ணிய வேலைப்பாடுகள் நிறைந்ததாகவும் காணப்படுகின்றன. இதன் மையப் பகுதியில் அலங்கார விளக்குகள் போன்ற அமைப்பில் அமைக்கப்பட்டுள்ள மேல் விமானத்தை தாங்கும் கிளிகள் போன்ற அமைப்பு கண்ணைக் கவரும் வகையில் உள்ளது. ஒவ்வொரு தூணிலும் பல்வேறு கதைகளை சொல்லும் வரலாற்று நிகழ்வுகள் புடைப்புச் சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளன.

ஒரு பெரிய தூணில் செதுக்கப்பட்டுள்ள போர்க்காட்சிகளில் இடுப்பில் சொருகப்பட்ட கத்தி உறை, சிறுத்தையை தாக்கும் காட்சி, குதிரை, போர் வீரரின் தலைக்கவசம் என ஒவ்வொன்றையும் மிகவும் நுணுக்கமாக வடிவமைத்துள்ளனர். மற்றொரு சிற்பத்தில் நான்கு வீரர்கள் சேர்ந்து ஒரு சிறுத்தையை வேட்டையாடும் வகையிலும், ஒரு வீரர் தன் கையில் உள்ள கத்தியை கொண்டு சிறுத்தையின் முதுகில் குத்துவது போன்றும், சிறுத்தையின் உடலில் உள்ள புள்ளிகளை தெளிவாக காட்சிப்படுத்தும் வகையிலும் மிகவும் தத்ரூபமாக சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இதையும் படியுங்கள்:
‘நமக்கு இது உதவாது!’ - வீணான தக்காளி விவசாயிக்கு உணர்த்தியது என்ன?
ஜலகண்டேஸ்வரர் கோவில்

இந்த கல்யாண மண்டபத்தின் மேல் புறத்தில் மண்டபம் ஒன்றும் அந்த மண்டபத்தை ஆமை ஒன்று தாங்கும் வகையிலும் சிறப்பாக வடிவமைத்துள்ளனர். நீளமான இந்த கல்யாண மண்டபத்தில் உள்ள ஒவ்வொரு தூணிலும் ஒவ்வொரு விதமான அலங்கார வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பல்வேறு வடிவங்களில் அமைக்கப்பட்டுள்ள சாளரம் போன்ற வடிவங்கள் பார்ப்பதற்கு கண்களை கவரும் வண்ணம் மிகவும் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும் ஆமை மண்டபத்தைச் சுற்றிலும் யானை, பாம்பு, யாழி மற்றும் வசிஷ்டர், அகத்தியர், கௌதமர், வால்மீகி போன்ற சப்தரிஷிகளும் சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளனர்.

இதன் வலது பகுதியில் உள்ள குளமானது மிகவும் சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது. அகழிகளில் இருந்து நீர் வந்து இந்த குளத்தில் சேகரிக்கப்படும்படி மிகவும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. கோவிலின் உள்ளே நுழையும் போது அகிலாண்டேஸ்வரி அம்மன் சன்னதியில் அமைக்கப்பட்டுள்ள தூண்கள் உருளை வடிவத்தில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த சன்னதியில் 1981 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை அணையாமல் பாதுகாக்கப்பட்டு வரும் நவசக்தி சத்யஜோதி என்ற மாபெரும் விளக்கு ஒன்றும் உள்ளது.

மேலும் இங்குள்ள நந்தி சிலைக்கு அருகில் மண்ணால் செய்யப்பட்ட விளக்கு ஒன்றும் வைக்கப்பட்டுள்ளது. மனதில் நினைத்த காரியம் நடக்குமா? இல்லையா? என்பதை அறிய கண்களை மூடிக்கொண்டு இந்த மண் விளக்கு மீது கை வைக்கும்போது ஏதேனும் அதிர்வினை உணர்ந்தால் அது நம்பிக்கை உரியதாகவும் பார்க்கப்படுகிறது.

மேலும் இங்கு உள்ள வசந்த மண்டபத்தில் கிருஷ்ணர், நடராஜர், சரபேஸ்வரர், கண்ணப்பர் போன்ற பல்வேறு புடைப்புச் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. மத்தளம் வசிக்கும் பெருமாள் சிலையும், ருத்ராட்ச பந்தலின் கீழ் காட்சியளிக்கும் சிவலிங்கமும் இங்கு மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.

இங்கு கருவறையில் அமைக்கப்பட்டுள்ள சிவலிங்கம் கூம்பு வடிவில் இருப்பதாகவும், சிவலிங்கத்திற்கு கீழ் கங்கை நீர் இருப்பதால் இத்திருத்தலத்திற்கு ஜலகண்டேஸ்வரர் என்ற பெயர் வந்ததாகவும் சொல்லப்படுகிறது. கங்கை, சிவன், பைரவர் ஆகிய மூவரும் ஒன்றாக சேர்ந்து காட்சியளிக்கும் திருத்தலமாகவும் இது அமைந்துள்ளது. எனவே இங்குள்ள சிவலிங்கத்தை வழிபட்டால் காசி விஸ்வநாதரை வழிபட்ட புண்ணியம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
‘அகரம் பவுண்டேஷன்’ கட்டடம் திறப்பு விழாவில்... சூர்யா நெகிழ்ச்சி!
ஜலகண்டேஸ்வரர் கோவில்

ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி பௌர்ணமியில் சிவபெருமானுக்கு இங்கு அன்னாபிஷேகம் நடைபெறுவது மிகவும் சிறப்புவாய்ந்த ஒன்றாகும். மேலும் பெண்கள் தங்களுடைய திருமாங்கல்யத்தை காணிக்கையாக செலுத்துவதும் இக்கோவிலில் சிறப்புக்குரிய ஒன்றாகும். இக்கோவிலில் உள்ள ஒவ்வொரு சிற்பங்களும் நாயக்கர் மற்றும் விஜயநகர பேரரசுகளின் சிறப்புகளை விளக்கும் வண்ணம் மிகவும் சிறப்பாக பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

வேலூர் கோட்டையின் வரலாற்று சிறப்புகளை அறிய விரும்பும் பலரும் இனி ஜலகண்டேஸ்வரர் திருக்கோவிலின் சிற்பங்களையும் பார்த்து மகிழலாம்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com