
நம்முடைய வாழ்கையில் தமக்கு தேவையேயில்லை என்று தூக்கிப்போடும் பொருட்களோ அல்லது உறவுகளோ எதுவாக இருந்தாலும், அது நமக்கு முழுமையாக உதவாமல் போவதில்லை. நாம் எதிர்ப்பாராத நேரத்தில் நமக்கு அதன் மதிப்பை சரியாக உணர்த்திவிடும். எனவே, ‘நமக்கு இது உதவாது!’ என்ற முடிவை எப்போது எந்த சூழ்நிலையிலும் நாம் எடுக்கக்கூடாது. இதை சரியாக புரிந்துக் கொள்ள ஒரு குட்டிக் கதையைப் பார்ப்போம்.
ஒரு ஊரில் ஒரு விவசாயி வாழ்ந்து வந்தான். அவனுடைய தோட்டத்தில் அடிக்கடி தக்காளியை பயிரிடுவதை வழக்கமாக கொண்டிருந்தான். தக்காளி பயிரிடுவது அவனுக்கு நல்ல விளைச்சலைக் கொடுத்தாலும், அவன் பயிரிடும் தக்காளிகளில் சில தக்காளிகள் அழுகி வீணாவது அவனுக்கு மன வருத்தத்தை தந்தது.
அவ்வாறு வீணாகும் தக்காளிகளை வேண்டாம் என்று தூக்கி அவனுடைய தோட்டத்தில் கடைசியில் உள்ள குப்பை மேட்டில் எறிந்து விடுவான். இவ்வாறு போய்க் கொண்டிருக்க ஒரு சமயம் அவன் தக்காளி இல்லாமல் வேறு பயிர்களை தோட்டத்தில் போடலாம் என்று எண்ணி அதற்காக அதிகமாக செலவிட்டு புதிய முற்சியை செய்துப் பார்க்கலாம் என்று முடிவெடுத்து செய்தான். ஆனால், அவனுடைய துரதிஷ்டம் இச்சமயம் விவசாயத்தில் பெரிய நஷ்டம் ஏற்பட்டது. இதனால் அவனுக்கு கடன் ஏற்பட்டு அனைத்தையும் இழந்துக் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தான். இப்போது அவன் கையில் இருப்பது அந்த விவசாய நிலம் மட்டும் தான்.
ஒருநாள் எதேச்சையாக தனது தோட்டத்தை சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்த விவசாயிக்கு அதிர்ச்சி கலந்த ஆச்சர்யம். ஏனெனில், அவன் இத்தனை நாட்களாக வேண்டாம் என்று தூக்கி எறிந்துக் கொண்டிருந்த அழுகிய தக்காளிகளில் இருந்த விதைகள் எல்லாம் பெய்த மழையால் பரவி தக்காளி செடிகளாக முளைத்திருந்தன.
அதுமட்டுமில்லாமல் தக்காளிகள் நிறைய காய்த்துக் குலுங்கிக் கொண்டிருந்தன. அச்சமயம் தக்காளிக்கு நல்ல மவுசு இருக்கவும், விவசாயி அந்த தக்காளிகளை விற்று நல்ல லாபம் பார்த்தான்.
இந்தக் கதையில் சொன்னதுப்போல, அந்த விவசாயி வேண்டாம் என்று தூக்கிப்போட்ட அழுகிய தக்காளிதான் அவன் பழைய நிலைக்கு மீண்டும் வருவதற்கு காரணமாக அமைந்தது.
நம்முடைய வாழ்விலும் அப்படி தான் யாரையும் வேண்டாம், இவர்கள் நமக்கு உதவ மாட்டார்கள் என்று அலட்சியம் செய்யக்கூடாது. அனைவரையும் மதிப்புடனும், மரியாதையுடனும் நடத்த வேண்டும். இதைப் புரிந்துக் கொண்டால் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். முயற்சித்துப் பாருங்கள்.