வாயில் வைத்து இசைக்கப்படும் மர்மக் கருவி! இதுதான் மோர்சிங்!

Musical instrument Morcing
This is Morcing...
Published on

லகம் முழுவதும் மரத்தால் செய்யப்பட்ட இசைக்கருவிகள், தோலால் செய்யப்பட்ட இசைக்கருவிகள், எலெக்ட்ரானிக் இசைக்கருவிகள் என ஆயிரக்கணக்கான இசைக்கருவிகள் பயன்பாட்டில் உள்ளன. இசைக்கருவிகளின் துணை இல்லாமல் அது எந்த வகை சங்கீதமாக இருந்தாலும் அது முழுமை பெறாது. வயலின், கிடார், கீபோர்டு, டிரம்ஸ் என சில இசைக்கருவிகள் உலகம் முழுவதும் பிரபலமாக பயன்பாட்டில் உள்ளன. சில இசைக்கருவிகள் சில நாடுகளில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அத்தகைய ஒரு இசைக்கருவிதான் மோர்சிங். இதைப் பற்றி நாம் இந்த பதிவில் சற்று தெரிந்து கொள்ளலாம்.

தென்னிந்தியா, இராஜஸ்தான், அஸாம் முதலான மாநிலங்களில் மோர்சிங் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவைத் தவிர்த்து ஆசியாவின் சில பகுதிகள் மற்றும் சைபீரியா பகுதிகளில் மோர்சிங் பயன்பாட்டில் உள்ளது. தொடக்கத்தில் இக்கருவியானது மூங்கிலால் செய்யப்பட்டு வாசிக்கப்பட்டுள்ளது. இந்த மூங்கில் இசைக்கருவியை கிராமப்புறங்களில் சிறுவர்களும் மலைவாழ் மக்களும் இசைத்து வந்துள்ளனர்.

தென்னிந்தியாவில் கர்நாடக சங்கீதத்தில் மோர்சிங் முக்கிய இடத்தை வகிக்கிறது. கர்நாடக சங்கீத வித்வான்கள் தங்கள் இசைக்கச்சேரிகளில் மிருதங்கம், கடம், கஞ்சிரா, மோர்சிங், வயலின் முதலான பக்கவாத்திய இசைக்கருவிகளை வைத்துக்கொண்டு பாடுவது வழக்கம். மோர்சிங் கர்நாடக சங்கீதத்தில் மிகமுக்கியமானதொரு பங்கு வகிக்கிறது.

அஸாமில் நாட்டுப்புறப் பாடல்களைப் பாடும்போது மோர்சிங் உபயோகிக்கப்படுகிறது. வங்காளத்தில் ரவீந்திரசங்கீதத்தை இசைக்கும் போது மோர்சிங் பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக கர்நாடக சங்கீத நிகழ்ச்சிகளில் தாள வாத்தியக் குழுக்களில் மோர்சிங் முக்கியமான ஒரு இசைக்கருவியாக பயன்படுத்தப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
மதுரையா? மருதையா? மதிரையா? ஒண்ணும் புரியலையா?
Musical instrument Morcing

தமிழில் இக்கருவி “நாமுழவு” மற்றும் “முகச்சங்கு” என்று அழைக்கப்படுகிறது. மோர்சிங்கை முகத்தின் அருகில் வாயில் வைத்து இசைப்பதாலும் சங்கு போன்ற அமைப்பில் உள்ளதாலும் இக்கருவியை முகச்சங்கு என்று அழைக்கின்றனர்.

மிகவும் தொன்மையான ஒரு இசைக்கருவியாக மோர்சிங் கருதப்படுகிறது. கிராமப்புறங்களில் இந்த இசைக்கருவியானது “மூர்ச்சங்க்” என்று அழைக்கப்படுகிறது. இந்தி இலக்கியங்களில் மோர்சிங் முகர்சங்க் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அகோபிலர் என்பவர் எழுதிய சங்கீத பாரிசாதம் என்ற சமஸ்கிருத நூலில் இக்கருவி முகசங்க் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இராஜஸ்தானில் இந்த இசைக்கருவி “மோர்சாங்” என அழைக்கப்படுகிறது. மிகவும் பழமையான வடிவத்தில் அமைந்த இதைப் போன்ற ஒரு கருவியை ஆங்கிலத்தில் “Jaws Harp” என்று அழைக்கின்றனர். இதற்கு தாடைப்பகுதியில் வைத்து இசைக்கப்படும் இசைக்கருவி என்று அர்த்தம்.

எட்டு சென்டிமீட்டர் நீளம் கொண்ட மோர்சிங் இரும்பு, எஃகினால் செய்யப்படுகிறது. சிறிய அளவில் திரிசூலம் போல காட்சியளிக்கும் மோர்சிங்கின் முனையில் நாக்கு போன்ற ஒரு அமைப்பு உள்ளது. இக்கருவி பார்ப்பதற்கு எளிமையாக காட்சி அளித்தாலும் இதை வாசிப்பதற்கு பெரும் பயிற்சி வேண்டும்.

மோர்சிங்கை பற்களில் படும்படி வைத்து ஸ்வரங்களை நாக்கைக் கொண்டு காற்றின் மூலம் ஊதி இரண்டு விரல்களால் இக்கருவியில் உள்ள தந்திக்கம்பியை முறைப்படி சுண்டினால் இனிமையான வித்தியாசமான இசை பிறக்கும். கர்நாடக சங்கீதம், நாட்டிய சங்கீதம் மற்றும் வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகளில் மோர்சிங் பெரிதும் பங்கு வகிக்கிறது. மோர்சிங்கை சரியாகப் பயன்படுத்தாவிட்டால் நாக்கை பதம்பார்த்துவிடும் என்றும் கூறுகிறார்கள்.

இதையும் படியுங்கள்:
கங்கைகொண்டசோழீச்சரம்... அற்புதங்களும் ஆச்சரியங்களும் தெரிஞ்சா அசந்து போவீங்க!
Musical instrument Morcing

வாத்தியக் கலைஞர்கள் மோர்சிங்கை இடது கையில் பிடித்துக் கொண்டு சங்கு போன்ற வளைந்த பாகத்தை பற்களில் கடித்துக் கொண்டு மோர்சிங்கின் நாக்குப் பகுதியை வலது கையின் ஆள்காட்டி விரலால் தட்டி இசையை உருவாக்குவர்.

ஆள்காட்டி விரலால் தட்டி மீட்டப்படும் போது இசைப்பவரின் வாயானது ஒலியை உண்டாக்குகிறது. மோர்சிங்கை வெவ்வேறு விதமாக வாயில் வைத்துக்கொண்டு இசைப்பதாலும் வாய் மூலம் வெளியேற்றும் காற்றை கட்டுப்படுத்துவதாலும் பலவிதமான இனிமையான ஒலிகள் இதில் உருவாகின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com