
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டத்தில் ஜயங்கொண்ட சோழபுரத்திலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது கங்கை கொண்ட சோழபுர பிரகதீஸ்வரர் ஆலயம். அம்மன் பெரியநாயகி. கி.பி 1036 இல் முதலாம் இராஜேந்திர சோழனால் கங்கைகொண்டசோழீச்சரம் கோவில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.
இன்றளவும் வாழும் வரலாறாக உள்ள இக்கற்கோவில், முதலாம் இராஜேந்திர சோழனின் காலம் முதல் சோழர்களின் கலை மற்றும் கட்டிடக்கலைகளின் அழகிய தொகுப்பாக உள்ளது. ஆந்திரா, கர்நாடகா மற்றும் வங்காளம் ஆகிய இடங்களிலிருந்து எடுத்து வந்த பல சிற்பங்கள் இக்கோவிலில் உள்ளன.
இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள ,13.5 உயரமும்,60 அடி சுற்றளவும் கொண்ட சிவலிங்கம் மிகப் பெரியது. வேறு எந்த கோவிலிலும் இல்லாத வகையில், இக்கோவில் கருவறை சுவர் பகுதியில் பாதிக்கப்பட்டுள்ள சந்திரகாந்த் கல், வெயில் காலத்தில் குளிர்ச்சியையும், குளிர் காலத்தில் இதமான வெப்பத்தையும் ஏற்படுத்துகிறது.
இங்கு தாமரை மலர் மீது அமர்ந்துள்ள ஞான சரஸ்வதி சிற்பம் மனம் கவரும் வகையில் உள்ளது. ராஜேந்திர சோழனுக்கு இறைவனும், இறைவியும், தம்பதி சேர முடிசூடுவதை போன்று உள்ள ஒரு சிற்பம், வேறெங்கும் காண முடியாத ஒன்று. இக்கோயில் , தஞ்சை பெரிய கோயில் வடிவமைப்புடன் கட்டப்பட்டுள்ளது. ஒரே கல்லில் வட்ட வடிவமாக அமைக்கப்பட்ட நவக்கிரக சிற்பம் மற்றும் கோவில் வளாகத்தில் உள்ள சிங்கமுக கிணறு உள்ளிட்டவை வேறு எங்கும் காணக் கிடைக்காத அம்சங்கள்.
கோவிலின் கர்ப்பகிரகத்தில் உள்ள சிவலிங்கத்தின் மீது தினமும் சூரிய ஒளி நேரடியாக விழுவது குறிப்பிடத்தக்க அம்சமாகும். இங்குள்ள நந்தி சுண்ணாம்புக் கல்லில் செய்யப்பட்டு தரையில் அமர்ந்துள்ளது. இந்த நந்தியும் மிகவும் பெரியது. சூரியன் உதயமானதிலிருந்து மறையும் வரை நந்தியின் நெற்றியில் பட்டு பிரதிபலிக்கும் சூரிய ஒளிக்கீற்று 200 மீட்டர் தொலைவில் உள்ள லிங்கத்தின் மீது விழும் காட்சி வேறு எங்கும் காணமுடியாத அற்புத காட்சியாகும்.
இங்குள்ள துர்க்கை மிகவும் சக்தி வாய்ந்தவள். இவள் ராஜேந்திர சோழனின் குலதெய்வம். 9 வயது சிறுமியின் வடிவில் சிரித்த முகத்துடன் 20 திருக்கரங்களுடன் மகிஷாசூரனை வதம் செய்த கோலத்தில் அருளுகிறாள். இத்தகைய கோலத்தை காண்பது மிகவும் அபூர்வம். இவளை “மங்கள சண்டி” என்று அழைக்கிறார்கள். இவளுக்கு கோவிலின் இடது பக்கம் தனி சன்னதி உள்ளது.
கோயில் உள்ளே நுழைந்து செல்லும் போது வலப்புறம் நவக்கிரக பீடமுள்ளது. இங்குள்ள நவக்கிரக அமைப்பு விந்தையானது. ஒன்பது கிரகங்களும் ஒரே கல்லில் சானசாஸ்திர முறைப்படி செதுக்கப்பட்டுள்ளன. பீடம் தாமரை வடிவம். நடுவில் சூரியன்; சுற்றிலும் எட்டு கிரகங்கள் இதழ்கள் போன்ற அமைப்பில் உள்ளன. கீழே ஏழு குதிரைகள் பூட்டிய தேரை அருணன் சாரதியாக இருந்து செலுத்துவது போல் செதுக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு மூலையில் முப்பரிமாண நடராஜர் சிலை இப்படி பல்வேறு சிறப்புகளைக் கொண்ட இக்கோயில் சோழர் கால கட்டட கலைக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு.
தஞ்சை பெரிய கோயில் அமைப்பில் இக்கோயில் கட்டப்பட்டிருந்தாலும் இது பல வகையிலும் மாறுபட்டது. தஞ்சை பெரிய கோயில் விமானம் நான்கு பக்கங்களை கொண்டது. இக்கோயிலோ எட்டு பக்கங்களோடு அமைக்கப்பட்ட விமானம் கொண்டது. கோவிலின் விமானம் கீழே சதுரமாகவும், அதன் மேல் எண்பட்டை வடிவிலும், உச்சிப் பகுதி வட்ட வடிவிலும் அமைக்கப்பட்டு சிவலிங்க வடிவில் காட்சி தரும். 160 அடி உயரம் கொண்ட கோபுரத்தின் மீதுள்ள கலசத்தின் நிழல் தஞ்சை கோயிலில் உள்ளது போலவே இங்கும் பூமியில் விழாது.
சாளுக்கியர்கள் மீது படையெடுத்து அவர்களை வென்று சாளுக்கிய தலைநகரை கைப்பற்றியது தான் ராஜேந்திர சோழனின் மகன் ராஜாதிராஜனின் முதல் பெரிய யுத்தம். இந்த வெற்றியின் நினைவாக தனது தந்தைக்கு இரண்டு ஜதை துவார பாலகர் சிலைகளை கொடுத்ததாக கூறப்படுகிறது. அதில் ஒன்று இக்கோயிலின் வாயிலில் தற்போதும் பிரமாண்டமான அளவில் உள்ளது.
இக்கோவிலின் கர்ப்பக் கிரகத்திற்குள் சென்று பார்த்தால், அதன் உட்புறச் சுவர்கள் எல்லாவற்றிலுமிருந்து தண்ணீர், வியர்வைபோல முத்து முத்தாய், வடிவதைக் காணலாம். கர்ப்பக்கிரகம் 10 டன் ஏசி போட்டது போன்று குளுமையாக இருக்கும். கடும் கோடையில்கூட அந்தக் குளிர்ச்சி மாறாது. இன்றுவரை குளிர்ச்சியாகவே இருக்கிறது. ‘சந்திரகாந்தக்கல்’ என்று குறிப்பிடப்படும் ஒருவகைக் கற்களால் கட்டியதால்தான் இந்தக் குளிர்ச்சி நிலை என்று கூறப்படுகிறது.
ஐ.நா சபையின் யுனெஸ்கோ அமைப்பு, உலக அளவில் பாரம்பரிய சின்னமாக இந்தக் கோவிலை அறிவித்துள்ளது.