சித்திரக்கதை (COMICS) தமிழுக்கு வந்த கதை!

Tamil comics
Tamil comics
Published on

வரைகதை அல்லது சித்திரக்கதை (Comics) என்பது ஒரு கதையின் நிகழ்வுகள் வரிசைப்படுத்தப்பட்ட முறையில் வரையப்பட்டு, அக்கதையின் கதைப்பாத்திரங்களுக்கிடையான உரையாடல்கள் பெட்டிகளில் அல்லது ஊதுபைகளில் (balloons) தரப்படும். இக்கதை ஓவிய வெளிப்பாட்டு வடிவம் ஆகும். தமிழில் வரைகதை அல்லது படக்கதை என்று சொல்லப்பட்டாலும், காமிக்ஸ் (Comics) என்ற ஆங்கில சொல்லைத் தமிழ்படுத்திப் பரவலாகப் பயன்படுத்தி வருகின்றனர்.

ஆங்கில மொழியில் 'காமிக்ஸ்' (Comics) என்ற வார்த்தை நகைச்சுவை என்ற பொருளைத் தருகிறது. இது ஆரம்பகால அமெரிக்க பத்திரிகைகளில் அதிக ஆதிக்கம் செலுத்தியது. 'வரைகதைப் புத்தகம்' என்ற சொல், குழப்பமான வரலாற்றைப் பெற்றுள்ளது. வரைகதை புத்தகங்கள் பெரும்பாலும் நகைச்சுவையானதாக இல்லை. இவை வழக்கமான புத்தகங்களோ அல்லது பருவ வெளியீடுகளோ அல்ல. 

வரைகதைகள், ஜப்பானீய மொழியில், மங்கா (manga) என்றும், பிரஞ்சு மற்றும் பெல்ஜியன் வரைகதை பந்தேஸ் டெஸ்ஸினீஸ் (Bandes Dessinées - BDs) அல்லது Franco-Belgian Comics என்றும் அழைக்கப்படுகின்றன. வேறுபட்ட பண்பாடுகளில், அவரவர்களின் மொழிகளில் வெவ்வேறு விதமாகக் குறிக்கப்பட்டாலும், 'காமிக்ஸ்' எனும் ஆங்கில வார்த்தை அனைவராலும் பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது. 

ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்க ஐக்கிய நாடுகள், ஜப்பான் ஆகிய நாடுகள் வரைகதைத் துறையில் வெவ்வேறு பாதைகளைக் கொண்டுள்ளன. ஐரோப்பியர்களைப் பொருத்தமட்டில், 1827 ஆம் ஆண்டில் சுவிஸ் நாட்டின் ரோடால்ஃப் டாப்ஃபெர் (Rodolphe Töpffer) வரைகதைகளைத் துவக்கி வைத்தார். 1890 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் ரிச்சர்டு எஃப் அவுட்கால்ட் (Richard F. Outcault) வெளியிட்ட 'மஞ்சள் குழந்தை' எனும் செய்தித்தாள், அமெரிக்க வரைகதைத் துறையின் அடித்தளமாகும். இருப்பினும், பல அமெரிக்கர்கள், ரோடால்ஃப் டாப்ஃபெர் தான் முன்னோடி என அங்கீகரிக்கின்றனர். 

ஜப்பான் நாட்டு நையாண்டி கார்ட்டூன்களும், வரைகதைகளும், நீண்ட வரலாற்றைப் பெற்றுள்ளன. 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் யுகியோ-இ (ukiyo-e) கலையின், ஜப்பானிய வரைகலைஞர் ஒக்குசாய், கேலிச்சித்திரங்களையும், வரைகதைகளையும் பிரபலப்படுத்தினார். இரண்டாம் உலகப் போருக்குப் பின், நவீன ஜப்பானிய வரைகதைகள், செழுமையுற்று தழைத்தோங்கத் தொடங்கின. ஒசாமு தெசூகா வளமிக்க வரைகதைகளை, உருவாக்கினார். 

1956 ஆம் ஆண்டு ஆனந்த விகடனில் ஜீமந்தார் மகன் என்ற சித்திரக்கதை வெளிவந்தது. இதுவே தமிழ் பத்திரிகையில் வெளிவந்த முதல் சித்திரைக்கதையாகும். 1970 ஆம் ஆண்டிலிருந்து 1990 ஆம் ஆண்டின் முற்பகுதி வரையிலான காலத்தை, தமிழ் வரைகதைகளின் பொற்காலம் என்கின்றனர். இக்காலத்தில் லயன் காமிக்ஸ், ராணி காமிக்ஸ் (1984-1995), வாண்டுமாமா சித்திரக் கதைகள் உட்பட பல தமிழ் வரைகதை இதழ்கள் வெளிவந்தன. அம்புலிமாமா, பாலமித்திரா, கோகுலம் போன்ற சிறுவர் இதழ்களிலும் வரைகதைகள் வெளிவந்தன. 

துப்பறியும் கதைகள், வெளிக்கிரகக் கதைகள், குதிரை வீரர்- செவ்விந்தியர் கதைகள் ஆகியவை தமிழில் பெரிதும் வெளி வந்தன. வாண்டுமாமாவின் தமிழ் சித்திரக்கதைகள், பூந்தளிர் (சித்திரக்கதை), தமிழ்வாணன் சித்திரக் கதைகள் ஆகியவை தமிழில், தமிழ்ச் சூழலுடன் தொடர்பான பாத்திரங்கள், இடங்கள், நிகழ்வுகள் கொண்டு வரையப்பட்டு வெளியாகின. தமிழ்நாட்டில் இருந்து ஆக்கப்பட்ட வரைகதைகள் தமிழ்ச் சூழலில் இருந்து கதைகளைப் பெற்றன. எழுத்தாளர் கல்கி எழுதி, பெரும் வரவேற்பைப் பெற்ற மோகினித் தீவு புதினத்தின் சித்திரக்கதை இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு. வாண்டுமாமாவின் கதைகளும் தமிழ் சிறுவர்களை, அல்லது கதா பாத்திரங்களைக் கொண்டவைகளே.

இதையும் படியுங்கள்:
சிதிலமடையும் ஆரணியின் இரண்டு அரண்மனைகள்... தமிழக அரசு புனரமைக்குமா?
Tamil comics

1990 ஆம் ஆண்டில் தொலைக்காட்சி, கணினி ஆகியவற்றின் வருகையால், தமிழ் வரைகதைகள் மட்டுமின்றி, இதழ்கள் வாசிப்பு பழக்கம் பெருமளவில் குறைந்து போயின. தமிழில் வெளியான பல வரைகதை இதழ்கள் நின்று போயின. தமிழில் வாசிப்பதைத் தவிர்த்து, ஆங்கில மொழியில் வாசிக்கும் வழக்கம் பெருகியதும், இதழ்கள் விற்பனை குறைய முக்கிய காரணம் எனலாம்.

அதன் பின்னர், 2015 ஆம் ஆண்டின் காலப் பகுதியில் எண்ணிம வரைகதைகளும், வரைகலைப் புதினங்களும் தமிழில் வெளிவரத் தொடங்கின. சிவப்புக்கல் மூக்குத்தி தமிழில் வெளிவந்த முதல் எண்ணிம வரைகதைப் புதினமாக அறியப்படுகின்றது. விகடன் வெளியிட்ட சந்திரஹாசம் வரைகலைப் புதினம் புத்தகக் கண்காட்சிகளில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com