
கேலிச்சித்திரம் என்பது ஓவியங்கள், பென்சில் ஸ்ட்ரோக்குகள் அல்லது பிற கலை வரைபடங்கள் மூலம் அதன் பொருளின் அம்சங்களை எளிமைப்படுத்தப்பட்ட அல்லது மிகைப்படுத்தப்பட்ட முறையில் காட்டுகின்ற படமாகும். இவை பாராட்டும் விதமாகவோ, கேலி செய்யும் விதமாகவோ, பொழுதுபோக்குக்காகவோ வரையப் படுகிறது. ஆரம்பகால கேலிச்சித்திரங்களில் சில லியோனார்டோ டாவின்சியின் படைப்புகளில் காணப்படுகின்றன. இத்தாலிய கலைஞர் பியர் லியோன் கெஸியின் படைப்புகள் மூலம் கேலிச்சித்திரம் பிரபலம் அடைந்தது.
கேலிச்சித்திர படங்கள் பரஸ்பர மகிழ்ச்சிக்காக பரிமாறப்பட்டன. பின்பு இது பிரிட்டனுக்கு பரவியது. இங்கிலாந்தில் பத்திரிகை சுதந்திரம் அதிகம் இருந்ததால் கடுமையான அரசியல் நையாண்டியில் இவை பயன்படுத்தப்பட்டது.
கேலிச்சித்திரங்கள் (Caricatures) ஒரு கலை வடிவமாக மனித வரலாற்றின் ஆரம்ப காலங்களிலிருந்து நீண்ட காலமாகவே இருந்து வருகின்றது. இவை நையாண்டி செய்வதற்கும், கேலி செய்வதற்கும் ஒரு வடிவமாக ஆரம்பகால குகை ஓவியங்கள் மற்றும் எகிப்திய கல்லறைகளில் காணப்படுகின்றன.
கேலிச்சித்திரங்கள் என்பது ஒரு கலை வடிவம் மட்டுமல்ல, சமூக மற்றும் அரசியல் கருத்துக்களை வெளிப்படுத்தும் ஒரு கருவியாகவும் இருந்து வருகிறது. சமூக நிகழ்வுகளை விமர்சிப்பதற்கும், பிரபலமான நபர்களை கேலி செய்வதற்கும் பயன்படுத்தப்படுகின்றன.
கார்ட்டூன் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் கேலிச்சித்திரங்கள் நகைச்சுவையை தூண்டும் வகையில் வரையப்படும் சித்திரங்களாகும். நூற்றுக்கணக்கான சொற்களில், வரிகளில் உணர்த்த முடியாததை கேலிச்சித்திரங்கள் எளிதாக உணர்த்தி விடும். அரசியல், பொருளாதாரம், சமயம், சமுதாயம் என பல துறைகளில் இடம் பெறுகின்ற ஊழல்களையும், குறைகளையும் நகைச்சுவையுடன் உணர்த்தும்படியாக கேலிச்சித்திரங்கள் அமைகின்றன.
சமூக நிகழ்வுகளை விமர்சிப்பதற்கும், மனிதர்களை கேலி செய்வதற்கும் வரையப்படும் cartoon படங்கள் நகைச்சுவை உணர்வுடன் பிறர் மனதை புண்படுத்தாத வகையில் வரையப்படுகிறது. அப்படி வரையப்படும் படங்கள் உண்மையின் அடிப்படையிலும், மக்களுக்கு சில செய்திகளை கூறும் வகையில் அதே சமயம் சிந்திக்க வைக்கும் வகையிலும் வரையப்படுகிறது. தமிழ்நாட்டில் முதன் முதலாக மகாகவி சுப்பிரமணிய பாரதியார் ஆங்கிலேயர் ஆட்சியின் குறைகளை 'இந்தியா' எனும் இதழில் கேலிச்சித்திரங்களின் மூலம் வெளியிட்டார்.
இத்தாலி மொழியில் கார்ட்டூன் என்பது கெட்டியான காகிதத்தை குறிக்கும். கெட்டியான காகிதங்களில்தான் அப்போது அங்கே ஓவியங்கள் வரைவார்கள். 1921 ஆம் ஆண்டில் பிரிட்டனின் புதிய பாராளுமன்ற கட்டிடத்தை அலங்கரிப்பதற்காக ஓவியர்களிடையே போட்டி ஒன்று நடந்தது. அந்தப் போட்டிக்காக கெட்டியான காகிதங்களில் (கார்ட்டூன்) வரையப்பட்ட பல ஓவியங்கள் நிராகரிக்கப்பட்டது. கேலிச்சித்திரங்கள் போன்று இருந்த அந்த நிராகரிக்கப்பட்ட ஓவியங்களை பஞ்ச் என்ற பத்திரிகை ஒன்றில் பஞ்ச் கார்ட்டூன் என்ற தலைப்பில் ஒவ்வொன்றாக வந்து பிரசித்தி பெற்றது. காலப்போக்கில் இவ்வித கேலிச்சித்திரங்கள் கார்ட்டூன் என்ற பெயரில் நிலைத்துவிட்டது.
கேலிச்சித்திரத்திற்காக உலகம் முழுவதும் ஏராளமான அருங்காட்சியகங்கள் உள்ளன. 'அரபு உலகில்' முதல் கேலிச்சித்திர அருங்காட்சியகம் மார்ச் 2009 ல் எகிப்தின் ஃபயூமில் திறக்கப்பட்டது.
தமிழ்நாட்டின் கேலிச்சித்திர கலைஞர்கள்:
தமிழ் பத்திரிகையின் முதல் கேலிச்சித்திரக் கலைஞர்களில் ஒருவராக கருதப்படும் 'மாலி' புகழ்பெற்ற கல்கி இதழின் கேலிச்சித்திரங்களை வரைந்தவர். 'கோபுலு' 60 ஆண்டுகளுக்கும் மேலாக கல்கி, விகடன், குமுதம், அமுதசுரபி என தமிழில் அனைத்து முன்னணி வார இதழ்களிலும் ஓவியங்கள், நகைச்சுவை துணுக்குகள், கேலி சித்திரங்கள் என 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஓவியங்கள் வரைந்துள்ளார். 'மதன்' குறைந்த கோடுகளைப் பயன்படுத்தி சிறப்பான கேலிச்சித்திரங்களை வரைவதில் வல்லவர்.
நவீன பயன்பாடு:
அரசியல் மற்றும் பொது நபர்களின் நையாண்டியைத் தவிர பெரும்பாலான சமகால கேலிச்சித்திரங்கள் பரிசுகளாகவும், நினைவுப் பொருட்களாகவவும் பயன்படுத்தப்படுகின்றன. இவை பெரும்பாலும் தெரு விற்பனையாளர்களால் வரையப்படுகின்றன. தெரு கண்காட்சிகள், திருவிழாக்கள் மற்றும் திருமணங்களில் கூட இவை பிரபலமாக உள்ளன. சுற்றுலாப்பயணிகள் அடிக்கடி வரும் இடங்களில் கேலிச்சித்திர கலைஞர்கள் குறைந்த கட்டணத்தில், சில நிமிடங்களில் அவர்களை சித்திரங்களாக வரைந்து சந்தோஷம் தருகின்றனர்.