
பண்டைய வரலாற்றைப் படிக்கும் போது, காணாமல் போனவை குறித்த பல தகவல்கள் கிடைக்கின்றன. ஒரு தடயமும் இல்லாமல் கைவிடப்பட்ட முழு நகரங்கள், வரலாற்றுப் பதிவிலிருந்து திடீரென மறைந்து போன நாகரிகங்கள் மற்றும் மறைந்து போன மக்கள் என்று எத்தனையோ இருக்கின்றன. இருப்பினும், அங்கு அவை இருந்ததற்கான பொருள், ஆதாரங்கள் தொல்பொருள் ஆய்வுகளின் மூலம் வெளிச்சத்துக்கு வந்துவிடுகின்றன.
ஆனால், வெளிச்சத்துக்கு வராத பல மர்மங்களும் இருக்கத்தான் செய்கின்றன. அவற்றுள், ஒரு போருக்காகப் புறப்பட்டுப் போன 50 ஆயிரம் பேர்களைக் கொண்ட ஒரு முழு இராணுவம் திரும்பி வராமல் போன கதையும் இருக்கிறது. காம்பிசஸின் காணாமல் போன இராணுவம் (Lost Army of Cambyses) எனும் அந்த மர்மம் இன்னும் விடுவிக்கப்படாமல் இருக்கிறது.
பண்டைய வரலாற்றாசிரியர் ஹெரோடோடஸின் கூற்றுப்படி, காணாமல் போன காமிப்சஸ் இராணுவம் என்பது ஒரு பாரசீக இராணுவப் பிரிவாகும். இது அப்போதைய மன்னர் இரண்டாம் காம்பிசஸால் கிமு 525 ஆம் ஆண்டில் எகிப்திய மதப் பிரமுகரான ஆமோனின் ஆரக்கிளின் ஆதரவாளர்களால் பாரசீக ஆட்சிக்கு எதிரான கிளர்ச்சியை அடக்குவதற்காக அனுப்பப்பட்டது.
அந்தப் படையினர் சென்ற வழியில் திடீரென்று ஏற்பட்ட ஒரு பேரழிவு தரும் மணல் புயலில் சிக்கி, மணலுக்குள் புதையுண்டு போனதாகவும், அதன் பின்னர் அந்தப் படையினர் குறித்த எந்தத் தகவலும் இல்லாமல் போனது என்று ஹெரோடோடஸ் எழுதினார்.
ஆனால், ஹெரோடோடஸின் கணக்கு கேள்விக்குறியாகாமல் போகவில்லை. காரணம், அதற்கான தொல்பொருள் சான்றுகள் எதுவும் இல்லை. மணல் புயலில் புதைக்கப்பட்ட ஒரு இராணுவம் இன்னும் பாலைவன மணலுக்கு அடியில் எங்காவது இருக்கும்.
அத்தகைய எச்சங்கள் எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. மேலும், இது போன்ற ஒரு இயற்கைப் பேரழிவு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் மிகக் குறைவு. எகிப்தியலாளர் ஓலாஃப் கேப்பர் இந்தக் கதையைப் பற்றி, "ஒரு மணல் புயலால் பலர் இறந்து போவதற்கான சாத்தியக் கூறுகள் எதுவும் இல்லை.
இதுவரை அறிந்த பல மணல் புயல்கள் எதுவும் பெரும் அழிவைத் தரவில்லை என்பதை நீண்ட காலமாக நாம் அறிந்திருக்கிறோம்" என்று குறிப்பிடுகிறார்.
மேலும், போருக்குச் சென்ற 50 ஆயிரக் பேர்களைக் கொண்ட இராணுவத்தினருக்கு வேறு என்ன நடந்திருக்கும்? அழிந்து போன அடிச்சுவடுகளில்லாமல் எப்படி காணாமல் போயிருப்பார்கள்? என்ற கேள்வி இன்னும் இருக்கத்தான் செய்கிறது.
ஹார்வர்ட் நிதியுதவியுடன் 1983 ஆம் ஆண்டில் எகிப்து - லிபியா எல்லையில் தொலைந்து போன இராணுவத்தின் எச்சங்களைத் தேடும் முயற்சியானது ஆறு மாதங்கள் நடைபெற்றது. ஆனால், அந்தக் குழுவினரால் காம்பிசஸின் காணாமல் போன இராணுவத்துடன் நியாயமான முறையில் இணைக்கக்கூடிய எந்த ஒரு தடயத்தையும் கண்டுபிடிக்க இயலவில்லை.
2000 ஆம் ஆண்டில் எண்ணெய் ஆய்வாளர்கள், காணாமல் போன இராணுவத்துடன் சமகாலத்தியதாகத் தோன்றிய கலைப்பொருட்களைக் கண்டுபிடித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், அந்த இடமும் மேலும் ஆராயப்படவில்லை.
இன்றுவரை, தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் காணாமல் போன இராணுவத்திற்கான எந்தவொரு பதில்களையும் கண்டுபிடிக்கவில்லை. காம்பிசஸின் காணாமல் போன இராணுவம் குறித்த மர்மமும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
காணாமல் போன இராணுவம் உயிருடன் புதைக்கப்படவில்லை. மாறாக, இராணுவம் பெட்டுபாஸ்டிஸ் III என்ற எகிப்தியக் கிளர்ச்சித் தலைவரால் தோற்கடிக்கப்பட்டது என்றும், இந்தக் கோட்பாடு, கோயில் கட்டுமானத்தில் பயன்படுத்தப்பட்ட தொகுதிகளில் உள்ள கல்வெட்டுகளில் இருந்து வருகிறது என்றும் தெரிகிறது. பெட்டுபாஸ்டிஸ் III கிளர்ச்சியாளர்கள் மற்றும் இராணுவத்திற்கு இடையிலான போரில், கிளர்ச்சியாளர்களின் படைகள் வெற்றி பெற்றன என்றும் கூறுகின்றனர்.
அதன் பின்னர் பாரசீக மன்னர் டேரியஸ் தி கிரேட் எகிப்தின் கட்டுப்பாட்டை மீண்டும் கைப்பற்ற பெட்டுபாஸ்டிஸ் தலைமையிலான கிளர்ச்சியாளர்களைத் தோற்கடித்தார். எகிப்தியர்களால் தங்கள் இராணுவம் முன்பு சந்தித்தத் தோல்வியை அழிக்க அல்லது மறைக்க மணல் புயலின் கதையைப் பரப்பி விட்டிருக்கின்றனர் என்றும் சொல்கின்றனர்.
காம்பிசஸின் காணாமல் போன இராணுவத்தின் பதில்கள் மழுப்பலாக இருந்தாலும், அண்மையக் கால முன்னேற்றங்கள் இந்த வரலாறு என்று அழைக்கப்படுவது உண்மையில் பண்டைய ஓரவாரப் பரப்பறிஞர்களின் படைப்பாக இருக்கலாம் என்பதைக் குறிக்கிறது. பெட்டுபாஸ்டிஸ் III தொலைந்த இராணுவத்தின் உண்மையான இலக்காக இருந்தார் என்பதற்கான தொல்பொருள் சான்றுகள், ஹெரோடோடஸின் மணல் புயல் கதை பாரசீகப் பரப்புரை என்பதை வலுவாகக் குறிக்கிறது.
மேலும், இது காணாமல் போன இராணுவத்தின் பழங்கதையைப் பாரசீகப் பேரரசின் தலைவர்கள் தங்கள் அதிகாரத்தை மையப்படுத்தித் தக்க வைத்துக் கொள்ள உதவிய உள் நடைமுறைகளுக்கு ஒரு வெளிப்படையான உதாரணமாகக் கொள்ளலாம்.