வேஷ்டி என்பது ஆண்கள் உடுத்தும் ஆடையாகும். இது உடம்பின் கீழ் பாகத்தில், அதாவது இடுப்பில் உடுத்தப்படுகிறது. பொதுவாக, தமிழக மக்கள் வெண்ணிற வேஷ்டி மட்டுமே உடுத்துகின்றனர். வெண்ணிற வேஷ்டி தமிழர்களின் பாரம்பரிய உடையாகும்.
வேஷ்டி என்பது தமிழர்களின் அடையாளம். பருத்தி நூலில் நூற்கும் வேஷ்டியை நம் முன்னோர்கள் கட்டி வந்தனர். வேஷ்டியில் முகூர்த்த வேஷ்டி, தற்காப்பு கலை வேஷ்டி, பட்டு வேஷ்டி, பூஜை வேஷ்டி, சாதாரண வேஷ்டி ஆகிய பல வேஷ்டிகள் உள்ளன. இதை வேஷ்டியின் கரையின் வண்ணம் வெளிப்படுத்தும். ஒவ்வொரு குடும்பத்துக்கும் தக்க வேஷ்டியின் கரை மஞ்சள், பச்சை, நீலம், காவி என வேறுபடும். வேஷ்டி கட்டுவதால் ஆபத்து விலகி நிற்கும். ஒவ்வொரு வகையான வேஷ்டிக்கும் வெவ்வேறு வகையான நன்மைகள் உண்டு. பழைய காலங்களில் ஒருவர் கட்டி இருக்கும் வேஷ்டி அவரை அடையாளப்படுத்துவதாகவும் திகழ்ந்தது.
தற்காப்புக் கலை வேஷ்டி என்பது வழக்கமாக மடித்துக் கட்டுவதைப் போன்றது அல்ல. இந்த வகையான வேஷ்டியை லங்கோடு என்ற அழைப்பார்கள். இதை கட்டிக்கொண்டு சண்டை போடுவது ஆண்களுக்கு பாதுகாப்பானதாக இருக்கும். இந்த வேஷ்டிக்கு மேலே சாதாரண வேஷ்டி கட்டுவார்கள். இதை முழங்கால் தெரியும்படி கட்டுவது வழக்கம். இந்த வேஷ்டியை யாராவது கட்டி இருந்தால் அவர்கள் சண்டை பயிற்சி பெற்றவர்கள் என்பதை அவர்கள் சொல்லாமலேயே தெரிந்து கொள்ளலாம். வேஷ்டியின் நாலாபுறமும் கோடு இருந்தால் அதை கட்டி இருப்பவர், ‘எனக்கு யாருடைய தயவும் தேவையில்லை’ என்பதை வெளிப்படுத்துகிறார் என்று அர்த்தம்.
சிவனை வழிபட கரையில்லா வெள்ளை வேஷ்டி, விஷ்ணுவை தரிசிக்க மஞ்சள் நிற வேஷ்டி, அம்மனை வேண்ட சிவப்பு நிற வேஷ்டி, அனுமனை கும்பிட காவி நிற வேஷ்டி, ஐயப்பனை வணங்கிட கருப்பு அல்லது நீல நிற வேஷ்டி, முருகனை வேண்டிட பச்சை நிற வேஷ்டி என பல வகைகளில் வேஷ்டியை கட்டுகிறார்கள்.
பட்டு வேஷ்டியை திருமணம் போன்ற விழாக்களுக்குக் கட்டுவார்கள். பண்டைய காலத்தில் வாழ்ந்த அரசர்களும் புலவர்களும் தங்களுடைய வேஷ்டிகளில் தங்கத்திலான ஜரிகைகளை வைத்திருந்தனர். பருத்தி வேஷ்டிகள் அன்றாடம் பயன்படுத்த ஏதுவாக இருக்கும். பட்டு வேஷ்டிகள் முக்கிய நிகழ்வுகளில் மட்டுமே பயன்படுத்தப்படும். வேஷ்டியின் அளவை வைத்தும் அதனுடைய வகையை நிர்ணயம் செய்வது உண்டு. நான்கு முழ வேஷ்டி, எட்டு முழ வேஷ்டி அல்லது இரட்டை வேஷ்டி, கரை வேஷ்டியை அதனுடைய வகைகளாகும்.
வேஷ்டி என்ற சொல்லின் தோற்றம் தமிழ் மொழியின் ஆழத்திலிருந்து வருகிறது. வேட்டுதல் என்ற வினைச்சொல்லில் இருந்து பெறப்பட்டதாக நம்பப்படுகிறது. இதன் பொருள் மூடுதல் அல்லது சுற்றி அடைத்தல் என்பதாகும். இனி, சில வேஷ்டி வகைகளைக் காண்போம்.
கானகம் வேஷ்டி: இது மிகவும் பிரபலமான வகையில் வண்ணக் கரைகள் இருக்கும்.
சித்திரை வேஷ்டி: இது குங்குமப்பூ கரை அமைப்புகளைக் கொண்டிருக்கும்.
பட்டு வேஷ்டி: விழாக்கள் மற்றும் திருமணங்களுக்குப் பயன்படுத்தப்படும் ஆடம்பரமான வகை.
தங்கன் வேஷ்டி: இது கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரபலமானது.
ராமநாதபுரம் வேஷ்டி தனித்துவமான நெசவு முறையில் தயாரிக்கப்படுகிறது. வேஷ்டியை மிதமான சூடுள்ள நீரில் துவைத்து காய வையுங்கள். வேஷ்டியை முறுக்கிப் பிழிந்து உலர்த்தக் கூடாது. தளர வைத்து உலர்த்த வேண்டும். வேஷ்டியில் கஞ்சி போட வேண்டுமானால் அரிசி கஞ்சியில் போடுவதே சாலச் சிறந்தது. வேஷ்டியை அயன் செய்யும்போது மிதமான சூட்டிலேயே செய்ய வேண்டும்.
வேஷ்டி கட்டுவதால் உடலில் வியர்வை தங்காது. கால்களில் வலிகள் ஏற்படாது. வேஷ்டி உடலுக்கு ஒரு பொருத்தமான ஆடையாக அமையும். வேஷ்டி ஆடவர்களுக்கு ஒரு கம்பீரத் தோற்றத்தை தருகிறது. வேஷ்டியை அணிவதால் அதை நெசவு செய்யும் தொழிலாளர்களும் வளம் பெறுவார்கள். வாரத்தில் ஒரு நாள் அலுவலகங்களுக்கு வேஷ்டியை அணிந்து செல்லலாம்.
ஆண் சிறுவர்களுக்கு சிறு வயதிலேயே வேஷ்டி கட்டி பழக்கி ஆலயங்களுக்கும் உறவினர்களைப் பார்க்கவும் அழைத்துச் செல்லலாம். தமிழகத்தில் வேஷ்டி நாள் என்பது வேஷ்டி கட்டுவதை இளைஞர்களிடம் ஊக்குவிக்கும் விதமாக ஜனவரி மாதம் ஆறாம் தேதி கொண்டாடப்படுகிறது.
ஜனவரி மாதம் முதல் வாரமே வேஷ்டி வாரம்தான். அதிலும் ஜனவரி ஆறாம் தேதி வேஷ்டி தினமாகும்.