நோய் நொடி இல்லாத ஆரோக்கியமான உடலை விரும்பாதவர் இந்த உலகில் யாரேனும் உண்டா? ஆனால், காலநிலை மாற்றம், உணவுப் பழக்க வழக்கம், தற்போதைய வாழ்க்கை முறை போன்ற காரணங்களால் நாளுக்கு நாள் வியாதிகள் அதிகரித்துக்கொண்டேதான் வருகின்றன. ஒருவர் தன்னை நோய்களிலிருந்து தற்காத்துக்கொள்ள கடைபிடிக்க வேண்டிய காலை நேர பழக்க வழக்கங்களைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
1. வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்துதல்: இரவில் சுமார் ஏழு அல்லது எட்டு மணி நேர தூக்கத்திற்குப் பிறகு உடலில் நீர்ச்சத்து குறைந்திருக்கும். தூங்கி எழுந்ததும் ஒரு டம்ளர் தண்ணீர் குடிப்பதன் மூலம் ஒருவர் தனது அன்றைய நாளை உற்சாகமாகத் தொடங்க முடியும். இது எளிய பழக்கம்தான். ஆனால், உடலின் வளர்சிதை மாற்றத்தை கிக் ஸ்டார்ட் செய்ய உதவுகிறது. நச்சுக்களை வெளியேற்றி சரியான உறுப்பு செயல்பாட்டை ஆதரிக்கிறது. வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்துதல் என்பது ஆரோக்கியமான நாளுக்கு அடித்தளமாக அமைகிறது.
2. உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, யோகா: நடைப்பயிற்சி, யோகா அல்லது சில எளிய உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும். இவை இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. மேலும், நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கின்றன. மிக முக்கியமாக மன அழுத்தத்தைக் குறைக்கின்றன. தினமும் நடைப்பயிற்சி மற்றும் உடற்பயிற்சி செய்யும் நபர்கள் அன்றைய நாளை மிக உற்சாகமாக எதிர்கொள்கிறார்கள். ஒட்டுமொத்த நாளுக்குமான சக்தி உடலுக்கு மட்டுமல்ல, மனதிற்கும் சேர்த்தே கிடைக்கிறது. நோய்களை தூர விரட்டுகிறது.
3. தியானம்: ஓரிடத்தில் அமர்ந்து அமைதியாக தியானத்தில் சில நிமிடங்களை செலவிட வேண்டும். தியானம் அல்லது மனதைக் கூர்ந்து கவனிக்கும் பயிற்சி, மனதை கூர்மையாக்குவதோடு, உணர்ச்சி ரீதியாகவும் வலுவாக வைத்திருக்கும். தினசரி தியானம் செய்பவர்கள் அதிக சவால்களை சமாளிக்கும் திறன் பெற்றவர்கள். அவற்றை உணர்ச்சி வேகத்துடன் எதிர்கொள்ளாமல் உணர்ச்சி சமநிலையுடன் நேர்மறையான அணுகுமுறையுடன் எதிர்கொள்ளும் ஆற்றல் மிக்கவர்களாகத் திகழ்வார்கள்.
4. சூரிய ஒளி: நமது எலும்புகள் வலுடன் திகழவும் நோய் எதிர்ப்பு மண்டலம் ஆற்றலுடன் விளங்கவும் வைட்டமின் டி மிகவும் அவசியம். இது சூரிய ஒளியில் மிக எளிதாக இயற்கையாகக் கிடைக்கிறது. எனவே, காலையில் சிறிது நேரம் சூரிய ஒளி உடல் மீது படுமாறு நிற்கவும் அல்லது நடக்கவும். சூரிய ஒளி ஒரு மனிதனின் ஒட்டுமொத்த மனநிலையையும், உடலின் ஆற்றலையும் அதிகரிக்கிறது. இது உடல் மற்றும் மன நலனை மேம்படுத்த உதவும் எளிய வழியாகும்.
5. சத்தான காலை உணவு: காலை நேரத்தில் மிகவும் சத்தான உணவை எடுத்துக்கொள்வது அவசியம். முழு தானியங்கள், மெலிந்த புரதங்கள், பழங்கள் போன்றவை காலை நேர உணவில் அவசியம் இருக்க வேண்டும். இது இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைக்கிறது. உடலுக்குத் தேவையான ஆற்றலை வழங்குகிறது. சமச்சீரான உணவு உடலுக்கு ஊட்டமளிப்பதுடன் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் உறுதி செய்கிறது.
ஐந்து பழக்கங்களினால் கிடைக்கும் நன்மைகள்: இந்த ஐந்து பழக்கங்களை தினசரி காலையில் நடைமுறைப்படுத்தும் மக்களுக்கு உடல் மற்றும் மன ஆரோக்கியம் மேம்படும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்தல், உடல், மன ஆரோக்கியம், இதய ஆரோக்கியம், இரத்த சர்க்கரை கட்டுக்குள் இருத்தல போன்ற நன்மைகள் கிடைக்கும். நாள்பட்ட நோய்கள் ஏற்படாமலும் தடுக்கிறது. மேலும், இத்தகைய ஆரோக்கியமான பழக்க வழக்கங்கள் ஒருவரது மனதையும் மிக உற்சாகமாக வைக்கிறது என்பது கூடுதல் நன்மையாகும்.