மழைக்காலம் முடிந்து பனிக்காலம் தொடங்கி விட்டது. இக்காலகட்டத்தில் வைரஸ் காய்ச்சல்கள் அதிகளவு நம்மிடையே பரவிக் கொண்டிருக்கிறது. இதன் கூடவே சளி, இருமல், தொண்டை வலி போன்றவையும் அதிகரித்துவிட்டன. வைரஸ் காய்ச்சல் இருந்தால் சாப்பிட வேண்டிய 5 சிறந்த உணவுகள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
இளநீர்: காய்ச்சல் நேரத்தில் உடலின் நீர்ச்சத்துக்கள் சட்டென்று குறைய ஆரம்பிக்கும். காய்ச்சல் ஒருபுறம் அதிகமாக இருந்தாலும் இதனால் உடல் சோர்வை சந்திக்க நேரிடும். இந்நேரத்தில் கட்டாயம் இளநீர் குடிப்பது நல்லது. இதில் உள்ள அழற்சி எதிர்ப்புப் பண்புகள் உடலுக்கு ஆற்றலை அளிப்பதோடு உடல் சோர்வை நீக்கவும் உதவியாக உள்ளது. மேலும், காய்ச்சலின்போது அதிக வியர்வையால் ஏற்படக்கூடிய நீர் இழப்பையும் மீட்டெடுக்க உதவுகிறது.
சிட்ரஸ் பழங்கள்: காய்ச்சலின்போது ஏற்படக்கூடிய உடல் சோர்வைத் தவிர்க்க வேண்டும் என்றால் வைட்டமின் சி ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்த ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற பல்வேறு சிட்ரஸ் பழங்களைச் சாப்பிடுவது நல்லது. இவை உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை தொற்றுநோய்களிலிருந்து காத்து உடலை வலுப்படுத்துவதோடு, அதன் தீவிரத்தைக் குறைக்க உதவுதோடு உடலை எப்போதும் நீரேற்றமாக வைத்திருக்கிறது. காய்ச்சலின்போது ஏற்படக்கூடிய தொண்டை புண்களை விரைவாக ஆற்றுவதற்கும் இப்பழங்கள் உதவுகின்றன.
இஞ்சி டீ: வைரஸ் காய்ச்சலின்போது இஞ்சி டீயை உட்கொள்வது நல்லது. இதில் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. உடலின் இரத்த ஒட்டம் சீராக இருப்பதற்கு இஞ்சி டீ உதவியாக உள்ளது.
மஞ்சள் பால்: வைரஸ் தொற்று பாதிப்பின் அறிகுறிகளில் முக்கியமானது தலைவலி, சளி மற்றும் இருமல். இவற்றைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைக்க வேண்டும் என்றால் மஞ்சள் கலந்த பாலைக் கட்டாயம் குடிக்க வேண்டும். இதில் உள்ள குர்குமின் மற்றும் வலுவான அழற்சி எதிர்ப்புப் பண்புகள் தொண்டையில் ஏற்படக்கூடிய புண்களை ஆற்றவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவும்.
கஞ்சி: வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டால் ஏழு நாட்களுக்குத் தொடர்ச்சியாக காய்ச்சல் பாதிப்பு இருக்கும். இதனால் சரியாக சாப்பிட முடியாது மற்றும் ஜீரண சக்தியும் குறைவாக இருக்கும். இந்த நேரத்தில் எளிதில் ஜீரணிக்கக்கூடிய உணவுகளைக் கட்டாயம் சாப்பிட வேண்டும். குறிப்பாக கஞ்சி சாப்பிடுவது நல்லது.
மேற்கண்ட ஐந்து உணவுகளை எடுத்துக்கொள்வதோடு தண்ணீரை காய்ச்சி வெதுவெதுப்பாக அருந்துங்கள். கூடியவரை உணவுகளை சூடாக சாப்பிடுங்கள். இவற்றை முறையாகக் கடைப்பிடித்தாலே வைரஸ் காய்ச்சல் குணமாகிவிடும்.