
குடகு மலையில் உற்பத்தியாகும் காவிரிக்கு புகுந்த வீடு என்றால் தமிழகம்தான். ஆர்ப்பரித்து ஓடிவரும் பெருவெள்ளத்தை போற்றும் விதமாக நாம் கொண்டாடி மகிழ்வதுதான் ஆடிப்பெருக்கு. இப்பண்டிகையின் சிறப்புகளைப் பற்றி இப்பதிவில் காண்போம்.
கிராமத்தில் வாய்வழி கதையாக ஒரு வார்த்தை கூறுவார்கள். பெண்கள் காவிரியைத் தாயாகவும், தன்னை ஒத்த பெண்ணாகவும் கருதுகின்றனர். ஆடி மாதம் முதல் தேதியில் அப்பெண் பூப் பெய்தியதாகவும் அதற்கு உரிய சடங்குகள் முடிந்து விழா எடுப்பதாகவும் பதினெட்டாம் பெருக்கைக் குறிப்பிடுகின்றனர்.
திருமணமான புதுமணத் தம்பதிகள் ஆற்றிற்குச் செல்லும்போது திருமணத்தில் அணிவித்த மாலையை எடுத்துச் செல்வர். மற்றும் அப்பொழுது அணிவித்த மஞ்சள் கயிற்றை மாற்றி அதில் இருக்கும் தாலி, குண்டுகள், காசுகள் போன்றவற்றை வேறொரு கயிற்றிலோ அல்லது தங்கச் சங்கிலிலோ கோர்த்துக் கொள்வார்கள்.
தாலி பெருக்குதலின்போது புது பெண்ணிற்கு தாய் வீட்டுச் சீதனமாக தாலியில் கோர்த்து அணிவதற்கு தங்க மணிகள், மற்றும் விதவிதமான பொட்டு, காசுக்களை செய்து கொடுப்பார்கள். தாலிக் கயிற்றில் தாலியுடன் சேர்த்து அதிகமான தங்க, பவள மணிகளும் இடம் பெறும். இவ்வாறு தாலிச் சரட்டில் அதிகமான பொருள்கள் சேர்வதைதான் பெரு(க்)குதல் என்கிறார்கள். அதற்கு தாலிப் பெருக்குதல் என்று பெயர். பிறகு மணமேடையில் கட்டிய மஞ்சள் கயிற்றையும் ஏற்கனவே எடுத்துச் சென்ற கல்யாண மாலையையும் தாலிப்பெருக்கி முடிந்தவுடன் புதுமணத்தம்பதிகள் ஆற்றில் விட்டு விடுவர்.
ஆடிப்பெருக்கென்று நீர் பெருகி வருவதுபோல தங்கள் இனிய வாழ்வும் பெருகவேண்டும். தங்கள் கணவர் நீண்ட நாள் நலமோடு வாழ வேண்டும் என்பதே தாலிப் பெருக்கிக் கொண்டாடுவதன் நோக்கமாகும். நீரின் அவசியத்தை உணர்த்தும் வகையில் கொண்டாடும் பெரும் விழாவில் பதினெட்டாம் பெருக்கு முன்னிலை வகிக்கிறது.
காவிரி ஆற்றுக்கு உரிய மரியாதை செலுத்துவதற்காக மங்கலப் பெண்களும், கன்னிப் பெண்களும் முளைப்பாலிகைகளை தயாரிப்பார்கள். சிற்றுண்டியும் செய்வர். நவதானிய வகைகளை முளைக்கச் செய்து ஆற்றிற்கு எடுத்துச் செல்வதே முளைப்பாலிகை எனப்படும்.
ஆடிப்பெருக்கன்று திருமணமான பெண்கள் கலவை சாதம் எடுத்துக் கொண்டு, மஞ்சள் கயிறுகளை ஒரு தாம்பாளத்தில் எடுத்து வைத்து, முளைப்பாலிகை , பழம், பூ வெற்றிலை, பாக்கு, தேங்காய், காப்பரிசி கொண்டு செல்வர். அதோடு காதோலை கருகமணி அனைத்தையும் எடுத்துச் சென்று ஆற்றின் கரையில் ஒரு பகுதியை சுத்தம் செய்து, சாணத்தில் பிள்ளையார் பிடித்து வைத்து, அருகம்புல் வைத்து, கொண்டு சென்ற பொருள்கள் அனைத்தையும் வைத்து வழிபடுவர்.
பிறகு வழிபாடு முடிந்தவுடன் மஞ்சள் தடவிய நூலை அணிந்து கொள்வார்கள். அதோடு காதோலை, கருகமணி கோர்வையையும், நீரில் விட்டு முளைப்பாலிகையையும் நீரில் கரைத்துவிடுவர். பிறகு கொண்டு சென்ற சிற்றுண்டிகளை அனைவருக்கும் கொடுத்து, காப்பரிசியையும் கொடுத்து, தாங்களும் உண்டு மகிழ்வர். இவ்வாறு காவிரி அன்னையை அனைவரும் வழிபடுவர். சிறுவர்கள் சப்பரம் கட்டி இழுத்து விளையாடுவார்கள்.
ஆற்றுக்குச் செல்ல முடியாதவர்கள் வீட்டில் உள்ள குழாய் அடியில் குழாய்க்கு மஞ்சள் குங்குமம் பூவைத்து, பிள்ளையார் பிடித்து வைத்து மேற்கூறிய பொருட்கள் அனைத்தையும் அங்கு வைத்து வழிபாடு செய்வர். தவறாமல் வீட்டு பெண்மணிகள் அன்றைக்கு மஞ்சள் சரடு அணிவர். ஒவ்வொருவர் வசதிக்கேற்ப சிற்றாறு, நதி, வீட்டில் உள்ள நீர் நிலை என்று பதினெட்டாம் பெருக்கு கொண்டாடி மகிழ்வர். அதை எப்படி கொண்டாடினாலும் காவிரித் தாய்க்கு கொடுக்கும் மரியாதை நிமித்தமே என்பதுதான் அதன் நோக்கம் மற்றும் தத்துவம் என்பது.
நாமும் நமக்கு தினமும் நீர் வழங்கும் காவிரித்தாயை போற்றிக் கொண்டாடி மகிழ்வோமாக!