
பரபரப்பான நகர வாழ்க்கையில் இருந்து விலகி ஓய்வெடுக்க முதலில் நாம் செல்வது சிறந்த கோடை வாசஸ்தலமாக விளங்கும் மலைகளின் அரசியான ஊட்டிக்குதான். இந்த குளுகுளு ஊட்டியை உருவாக்கிய நீலகிரி மாவட்டத்தின் முதல் கலெக்டரான ஜான் சல்லீவன் குறித்து இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.
1815-ல் கோவை மாவட்ட சிறப்பு வருவாய்த்துறை அதிகாரியாக நியமிக்கப்பட்டு அதன் பிறகு அதே ஆண்டு கோவை மாவட்ட நிரந்தர ஆட்சியராகவும் நியமிக்கப்பட்டார் ஜான் சல்லிவன்.
அப்போதைய கோவை மாவட்டமானது இப்போதைய ஈரோடு, நீலகிரி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியதாக இருந்தது.
நீலகிரி மலை பற்றிய உண்மைத்தன்மை அறிக்கையை அளிக்க கிழக்கிந்திய கம்பெனி இவரை கேட்டுக் கொண்டது. மலைப்பகுதியின் காலநிலையும், இயற்கை அமைப்பும் இவருக்கு பிடித்துப்போக, 1819-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 22-ம் நாள், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பிரபல இயற்கை ஆர்வலரான சேன் பாபிசுட் லூயிசுடன் நீலகிரி மலையில் ஏற்கெனவே வாழ்ந்துவந்த படுகர் மக்களின் வழிகாட்டுதலுடன் உதகமண்டலப் பகுதியை அடைந்தார். சுமார் மூன்று வார காலம் அங்கேயே சுற்றித் திரிந்து, அம்மலைப்பகுதியை எழிலுற அழகுபடுத்த முடிவு செய்தார்.
முதலில் நீலகிரியின் கன்னேரிமுக்கு என்ற கிராம மக்கள் உதவியுடன் கற்களால் வீடு ஒன்றைக் கட்டி, அதை தன் அதிகாரபூர்வ பங்களாவாகவும், அலுவலகமாகவும் பயன்படுத்ததினார். நீலகிரியின் முதல் கட்டடமான இது சில ஆண்டுகளுக்கு முன்பு புதுப்பிக்கப்பட்டு ஜான் சல்லிவன் நினைவகமாக மாற்றப்பட்டது.
இங்கு நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர், கோத்தகிரி, ஊட்டி உள்ளிட்ட நகரங்களில் அரிய புகைப்படங்கள், பழங்குடியின மக்களின் வாழ்க்கை முறை ஆகியவை காட்சிபடுத்தப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து நீலகிரியின் மையப்பகுதியான ஊட்டியில் அண்டை மாவட்ட அதிகாரிகளுக்கும் குடியிருப்புகளைக் கட்டினார். இதனால் 1822-ம் ஆண்டில் நீலகிரி, மெட்ராஸ் பிரசிடென்சியின் கோடைக்காலத் தலைமையகமாக அறிவிக்கப்பட்டது.
சாலை வசதிகளை மேற்கொண்டதோடு ,ஐரோப்பிய, தென்னாப்பிரிக்க நாடுகளில் இருந்து பல வகையான மலர்கள், காய்கள், பழம் தரும் மரவகைகளை இறக்குமதி செய்து தேயிலை, சின்கோனா, தேக்கு உள்ளிட்ட பயிர்களையும் , முட்டைகோஸ், கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு உள்ளிட்ட காய்கறிகளையும் பயிரிட்டு அறிமுகப்படுத்தினார். படுகர் மக்களின் உயர்வுக்காக பார்லி விதைகளையும் இறக்குமதி செய்தார். ஊட்டி நகரின் நடுவில் மிகப்பெரிய ஏரி ஒன்றையும் வெட்டி மலையின் பல பகுதிகளில் ஓடிய சிறிய ஓடைகளை அதனுடன் இணைத்தார்.
கோவையின் கலெக்டராக ஜான் சல்லிவன் இருந்தபோது, "உழுபவர்க்கே நிலம்" என்பதை அறிவித்து, பட்டா, சிட்டாவை தமிழகத்தில் அறிமுகப்படுத்தியினார்.
கங்கையை பிழிந்து, உறிஞ்சி, தேம்ஸ் நதியில் விட்டு பிழைக்கிறார்கள்" என்று பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திடம் அன்று ஜான் சல்லிவன் சொன்ன வார்த்தை, உலகளவில் மிகப்பெரிய விவாதத்தை இன்னமும் ஏற்படுத்தி கொண்டிருக்கிறது.
ஊட்டியை உருவாக்கி அதன் முதல் கலெக்டராகப் பொறுப்பேற்று மக்களுக்குப் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் செய்த ஜான் சல்லிவனுக்கு ஊட்டியின் 200-வது ஆண்டு விழாக் கொண்டாட்டத்தில் விடுத்த ககோரிக்கையை ஏற்று அரசு, ஜான் சல்லிவனை நினைவுகூரும் விதமாக உதகை அரசு தாவரவியல் பூங்கா சாலையில் அவரது மார்பளவு வெண்கலச் சிலையையும் "ரோஜா சல்லீவன் "என்ற ஒரு ரோஜா வகையையும் அறிமுகப்படுத்தியுள்ளது.
இவ்வளவு கஷ்டப்பட்டு உருவாக்கிய ஊட்டியை இன்றைய தலைமுறையினர் சேதாரம் இன்றி பாதுகாப்பதையாவது உறுதிகொள்ள வேண்டும்.