
"ஆடிப்பெருக்குல,
ஆத்தோரம் போயி,
ஆடிப்பாடி ஆத்தாள
கும்பிடலாம்!
அம்மாச்சி கதம்பச்சோறு
சாப்பிடலாம்! "
ஆடிப்பதினெட்டு அன்று அம்மாச்சி செய்யும் ஸ்பெசல் கதம்பச்சோறு ச்சும்மா கம-கமவென ஊரைக்கூட்டும்.
பொதுவாக, ஆடிப் பதினெட்டிற்கு, எலுமிச்சை, தேங்காய், புளிக்காய்ச்சல், எள்ளு போன்றவைகளை உபயோகித்து தயாரித்த கலந்த சாதங்களை, டப்பாக்களில் போட்டு எடுத்துக் கொண்டு குடும்பத்துடன் ஆற்றங்கரைக்கு சென்று சாப்பிடுவது வழக்கம்.
கிராமப்புறங்களில் கதம்பச்சோறும் செய்து எடுத்துக்கொண்டு போவது வழக்கம்.
ஆடிப்பதினெட்டு அன்று ஆண்டாளுவும், வள்ளியும் ஆத்துக்குப் போகைல, அம்மாச்சி செய்த ஸ்பெசல் கதம்பச்சோறு பற்றி பேசுவதை நாமும் கேட்டு ரசிப்போமே...!
"வள்ளி! ரெடியா..?"
"என்ன விசேசம் ஆண்டாளு..?
"ரெண்டு நாளு முன்னாடிதானே சொன்னேன். ஆடி பதினெட்டன்னைக்கு ஆத்துக்குப் போய் கதம்பச்சோறு சாப்பிடலாம்னு. மறந்திடிச்சா..?
"ஆமா! மறந்திட்டேன். இன்னொரு வாட்டி விலாவாரியா சொல்லு! "
" ம்...! சொல்லுதேன். உனக்கு சொல்லாம யாராண்ட சொல்ல..?
"பக்கத்தூரு ஆத்தங்கரைல, 18 படிகள் கட்டி வெச்சிருக்காங்க. இன்னைக்கு, அம்புட்டு படிகளும், வெள்ளத் தண்ணியில முங்கி கெடக்கும்.
"அடி ஆத்தி! நா வரலை. நாம முளுகிப் போய்டுவோம்.
"வள்ளி! பயந்துக்கிடாதே! முளுகிப் போமாட்டோம். ஆத்துல ஓடுத தண்ணிய, அம்மனா நெனைச்சு, பூசை பண்ணி, வெத்தல-பாக்கு-மஞ்சள்-பூவு-பணம், கருகமணி எல்லாத்தையும் தண்ணீல வுட்டு அல்லாரும் கும்புடுவாங்க. பாக்க நல்லா இருக்கும். ஆத்து மண்ணுல ஓடிப்புடிச்சு வெளயாடலாம். சோறு சாப்பிடலாம். போலாம் வா!"
" சோறு கொணாந்திருக்கயா..?"
"ம்...அம்மாச்சி ஸ்பெசலா பண்ணிக் கொடுத்த கதம்பச்சோறு, இனிப்புச்சோறு, அப்பளம் எல்லாம் கொணாந்திருக்கேன்.
"கதம்பச் சோறுன்னா இன்னா ஆண்டாளு ..?"
"சொல்லுதேன் கேளு! அம்மாச்சி செய்யேல பாத்துக்கினு இருந்தேன். !"
" ஒரு பெரிய ஏனத்துல, வெங்காயம், கத்தரிக்கா, உருளக்கிளங்கு, அவரக்காய், பூசணிக்கா இப்படி எல்லாத்தையும் களுவி, நறுக்கி, மஞ்சப்பொடி, உப்பு போட்டு, தண்ணீ விட்டு வேகவிடணம். கொஞ்சம் புளித்தண்ணிய ஊத்தணம்.
"ம்....பொறவு....!
"வாணலீல, மிளகா, கொத்தமல்லி, கடலப்பருப்பு, லவங்கப் பட்டை, பெருங்காயம் போட்டு வறுத்து, அம்மீல நல்லா அரைச்சு கொதிக்கிற கறிகாய்ல கலந்து, கொதி வந்து கெட்டியானதும் கீள இறக்கணம். நெய்யில கடுகு, கருவேப்பிலையை தாளிச்சு இதுல போடணம்.
"அடேங்கப்பா! கதை கணக்கா இருக்கு. கதம்பச்சோறு செய்ய நெறைய நேரம் பிடிக்கும் போல!"
"கதம்பச்சோறுன்னா சும்மாவா..? அப்பால சோத்தை உதிரி உதிரியா வடிச்சு எடுத்து ஆறவிட்டு, கெட்டியான காய்கறி கலவைல போட்டு கலந்துற வேண்டியதுதான். ரொம்ப ருசியா இருக்கும். அம்மாச்சிக்கு சோலி அதிகம்தான்."
"அம்மாச்சி வரலையா..? அப்பத்தா எங்க...?
"அப்பத்தா பக்கத்து ஊருக்கு போயிருக்காக. அம்மாச்சிக்கு ரொம்ப அலுப்பா இருக்காம். வரலை. போதுமா..? ச்சும்மா நொய்-நொய்யினு கேட்டுக்கிட்டு. நேரமாச்சு. வெரசா கெளம்பு வள்ளி! "
"இரு ஆண்டாளு. இந்த பளைய தாவணிய மாத்திக்கிட்டு வரேன். அம்மாச்சி கதம்பச்சோறு சாப்பிட, இப்பவே வாயில எச்சு ஊறுது.!'
வள்ளி புதுத்தாவணி அணிந்துவர, இருவரும் --
"ஆடிப்பெருக்குல,
ஆத்தோரம் போயி,
ஆடிப்பாடி ஆத்தாள கும்பிடலாம்!
அம்மாச்சி கதம்பச்சோறு சாப்பிடலாம்!" என ஆடிப்
பாடியவாறே சென்றனர்.
வரீங்களா! நாமும் போய் அம்மாச்சியின் கம-கம கதம்பச் சோறு சாப்பிடலாம்.