
ஆயக்கலைகள் 64 என்பவை பழந்தமிழர்கள் கண்டறிந்த ஒரு முழுமையான மற்றும் வெற்றிகரமான வாழ்க்கை வாழ்வதற்கு தேவையான 64 கலைகளின் தொகுப்பாகும். இது மனிதனின் ஆற்றலை முழுமையாக வளர்த்தெடுத்து, வெற்றிகரமான வாழ்வை வாழ்வதற்கான ஒரு முழுமையான வழிமுறையை வழங்குகிறது.
அறிவியல், இசை, ஓவியம், சிற்பம், போர்க்கலை போன்ற பல்வேறு திறன்கள் இவற்றில் அடங்குவதுடன், வானில் பறப்பது, கூடுவிட்டு கூடு பாய்வது போன்ற நம்ப முடியாத ஆழ்நிலை கலைகளும் இந்த தொகுப்பில் இடம்பெறுகின்றது.
நம் முன்னோர்களால் கண்டறியப்பட்ட இந்த கலைகள் அவர்களுடைய ஆழ்ந்த அறிவையும், வாழ்வியலோடு கலந்திருந்த அவர்களுடைய திறன்களையும் பிரதிபலிக்கின்றன. கம்பர் தன்னுடைய சரஸ்வதி அந்தாதியில் கல்விக்குத் தலைமை தெய்வமாக போற்றப்படும் கலைமகளே இந்த 64 கலைகளுக்கும் தலைவியாகவும், தெய்வமாகவும் விளங்குவதாக குறிப்பிட்டுள்ளார்.
ஆயக்கலைகள் வெறும் திறன்களை மட்டும் குறிப்பதல்ல, உடல் மற்றும் மனதின் திறன்களை ஒருங்கிணைத்து ஒரு முழுமையான வாழ்க்கையை வாழ உதவும் முழுமையான வாழ்வியலாகும் என்று கூறப்படுகிறது.
இந்தக் கலைகளில் காட்சி கலைகளான ஓவியம், சிற்பம், காவியம் மற்றும் பல்வேறு வாத்திய கலைகள் மட்டுமல்லாமல், போர்க்கலை, வானியல் மற்றும் சில ஆன்மீக கலைகளும் அடங்கும். ஆயக்கலைகள் 64 யும் அறிந்தவர்கள் என்று சிவபெருமானையும், கிருஷ்ணர், பலராமர், விஜயேந்திர தீர்த்தர் போன்றவர்களை வரலாறு குறிப்பிடுகின்றது.
முன்னோர்கள் தங்கள் வாழ்வின் ஒவ்வொரு செயலையும் ஒரு கலையாகக் கருதி முழுமையை அடைய நினைத்த மனப்பான்மையை இந்த கலைகள் காட்டுகின்றன. இவை ஒரு நபரின் அறிவு, திறமை, சமூகத்திறன் மற்றும் உடல் வலிமையை வளர்ப்பதோடு, ஒரு முழுமையான வாழ்க்கைக்கான வழிகாட்டியாகவும் விளங்குகின்றது. இவை வெறும் பொழுதுபோக்கிற்கு மட்டுமல்லாமல் படைப்பாற்றல் மற்றும் அறிவுத்திறனை வளர்க்கவும் உதவுகின்றது. தமிழ்க் கலைகள் காலத்தால் முந்தியவை என்றும், ஆயக்கலைகள் அவற்றின் வழி வந்தவை என்றும் இலக்கியங்கள் கூறுகின்றன.
ஆயக்கலைகள் 64ல் இலக்கியம், இசை, நடனம், ஓவியம், சிற்பம், கைவினைப் பொருட்கள், கணிதம், வானியல் போன்ற பல துறைகளை உள்ளடக்கியவை. நீதி சாஸ்திரம், ஜோதிட சாஸ்திரம், தர்மசாஸ்திரம், யோக சாஸ்திரம், மந்திர சாஸ்திரம், சகுன சாஸ்திரம், சிற்ப சாஸ்திரம், வைத்திய சாஸ்திரம், உருவ சாஸ்திரம் என சாஸ்திரங்கள் பலவற்றை உள்ளடக்கியது. வேதம், இதிகாசம், புராணம், வியாகரணம், காவியம், நடனம், நாடகம், மல்யுத்தம் என பல கலைகளை உள்ளடக்கியது.
உயர்வுக்கு வழிவகுக்கும் இந்த ஆய கலைகள் 64 மும் ஒருவர் கற்றறிந்து செயல்படுவது இன்றைய காலகட்டத்தில் கடினமானது. இருப்பினும் இவற்றில் பல கலைகள் இன்றைய நாளில் தொழில்முறைக் கலைகளாக வாழ்வின் வருவாய்க்கு உதவும் வகையில் பலருக்கும் கை கொடுக்கின்றன. இசைக் கலைகள், அழகு கலைகள், ஜோதிடம், நாடகம், எழுத்தாற்றல், ஆடல்கலை போன்றவை தனித்தனியாக பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றன. இவை நம் வாழ்வோடு பிணைந்த கலைகள் மட்டுமல்லாமல் நம் வாழ்விற்கு தேவையான வருவாயை ஈட்டும் கலையாகவும் உள்ளன.
இன்றைய காலகட்டத்தில் பண்டைய கலைகளான நடனம், இசை, கவிதை போன்ற பல கலைகள் சினிமா போன்ற புதிய வடிவங்களில் ஒருங்கிணைக்கப் பட்டுள்ளன. சினிமா, கணினி வடிவமைப்பு மற்றும் பிற தொழில்நுட்பத்துறைகள் கலைகளின் புதிய எல்லைகளை உருவாக்கி ஆயக்கலைகளின் பல அம்சங்களை உள்ளடக்கிக் கொண்டுள்ளன.