
காக்கை ஒழுக்கமுடைய ஒரு பறவை. மற்ற பறவைகளைப் போல், காகம் பொதுவெளியில் பாலுறவு கொள்வதில்லை. தன்னுடைய கூட்டில் இருக்கும் தனது முட்டைகளுடன் குயிலின் முட்டை இருக்கிறது என்று காகம் அறிந்திருந்தாலும், அந்த முட்டையையும் சேர்த்து அடை காத்து, குயிலின் குஞ்சுக்கும் இரை கொடுத்து அதனைக் காப்பாற்றும் பெருந்தன்மை கொண்ட பறவை காக்கை. தன்னுடைய தேவைக்கு அதிகமான உணவு என்று தெரிந்தால், தன்னுடைய இனத்தையேக் கூவி அழைத்துப் பகிர்ந்து கொண்டு, மனிதர்களுக்கு நல்ல பாடத்தைக் கற்றுக் கொடுக்கும் பறவை காக்கை. நினைவுத் திறன் அதிகம் கொண்ட பறவை, அறிவுத்திறன் கொண்ட பறவை என்று காக்கையின் பெருமைகளைச் சொல்லிக் கொண்டேப் போகலாம்.
காக்கையின் பெருமைகள் பல இருக்க, சில மனிதர்கள் தங்கள் சொந்த நன்மைக்காக, மற்றவர்களைப் பயன்படுத்தி எந்த ஒரு செயலையும் சாதித்து கொள்ளும் செயல்பாட்டை, “காக்கா பிடித்தல்” என்று சொல்கின்றனரே, ஏன்? என்று நமக்குச் சந்தேகம் வருவது இயல்பே.
சில வேளைகளில் காக்கைகள் தனது உணவுத் தேடலின் போது, மற்றப் பறவைகளை ஏமாற்றி, அதற்கான உணவை எடுத்துக் கொள்ளும் தன்மை கொண்டவை. காக்கையின் இந்தப் பண்பை, தங்களுக்கு மேலானவர்களுக்குத் தேவையானதைச் செய்து அல்லது அவர்கள் விரும்புவதை செய்து கொடுத்து, தங்களுக்குத் தேவையானதைப் பெற்றுக் கொள்கின்றனர். தந்திரம் மற்றும் ஏமாற்றுதலை அடிப்படையாகக் கொண்ட இச்செயல்பாட்டையே, ‘காக்கா பிடித்தல்’ என்று சிலர் சொல்கின்றனர்.
இது உண்மையில்லை, சிலர் தங்களுக்குச் சாதகமான சில செயல்களைச் செய்து கொள்வதற்கு, தங்களுக்கு மேலானவர்களின் கால், கைகளைப் பிடித்து வேண்டுகின்றனர். இதனை, கால்கை பிடித்துப் பெற்றுக் கொண்டதாகச் சொல்லி வந்தனர். பின்னாளில், கால்கை பிடித்தல் என்பதே காக்கை பிடித்தல் என்றாகி, காக்கா பிடித்தல் என்று மாறிவிட்டது என்று சிலர் சொல்வதுடன், இதனை உறுதிப்படுத்த வேறு சில சொற்றொடர்களையும் உதாரணங்களாகச் சொல்கின்றனர்.
‘கால்கை வலிப்பு’ என்று சொல்லி வந்ததே தற்போது, ‘காக்காய் வலிப்பு’ என்றாகி விட்டது. இதேப் போன்று ‘எச்சில் கையால் கால் கை ஆட்டமாட்டான்’ என்று சொல்லி வந்த சொற்றொடர், ‘எச்சில் கையால் காக்காய் ஓட்டமாட்டான்’ என்று மாற்றமாகி விட்டது.
இந்து சமயத்தில், சனீஸ்வரருக்குக் காகம் வாகனமாக இருக்கிறது என்பதை அனைவரும் அறிவர். காகம் நினைவுத் திறன் அதிகம் கொண்ட பறவை. தனக்குக் கெடுதல் செய்தவர்களைக் காகம் மறப்பதில்லை, அடுத்து அவர்களைக் காணும் போது, அவர்களைக் கொத்துவதற்காக விரட்டும் தன்மை கொண்டவை. பிறருக்குக் கெடுதல் செய்வோருக்கு, தண்டனை வழங்கும் சனீஸ்வரர், இதனாலேயே காகத்தை வாகனமாக ஏற்றுக் கொண்டார் என்று சொல்கின்றனர்.
திருநெல்வேலி மாவட்டம், விக்கிரமசிங்கபுரம், சிவந்தியப்பர் கோயிலில் இருக்கும் சனீஸ்வரர் சிலை, காகத்தை வாகனமாகக் கொண்டிருப்பதுடன், தீய செயல்கள் செய்பவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில், கையில் ஒரு காகத்தைப் பிடித்துக் கொண்டிருப்பது போல் அமைந்திருக்கிறது. காக்கையைக் கையில் பிடித்துக் கொண்டிருக்கும் சனீஸ்வரரை வழிபட்டால், அவர் தரும் தீய பலன்களிலிருந்து தப்பி விடலாமென்று இங்கு வந்து செல்லும் பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.
அப்புறமென்ன, நமக்கு நல்லது நடக்க வேண்டுமென்றால், ‘காக்கா பிடிப்பது’ சரிதானே என்கிறீர்களா...? எந்தவொரு செயல்பாடும் அவரவர் மனநிலையைப் பொறுத்தது அவ்வளவுதான்...!