ஆப்பிரிக்க முகமூடிகள் - மரபு வழி மக்களின் மேன்மைமிகு கலை!

African Masks
African Masks

ஆப்பிரிக்க முகமூடிச் சிற்பங்கள் (African Masks) மரத்தினால் அல்லது அழியக்கூடிய பிற பொருட்களால் ஆனவை. அதனால், மிகப் பழைய சிற்பங்கள் இன்று வரை நிலைத்திருக்கவில்லை. முந்திய மட்பாண்டச் சிற்பங்கள் பல பகுதிகளில் இருந்து கிடைத்துள்ளன.

மக்களைப் பொறுத்தவரை முகமூடிகளும், மனித உருவங்களும் கலையின் முக்கியமான கூறுகள். பெரும்பாலானவை உண்மைத்தன்மை அற்றவை. இச்சிற்பங்களில் பல்வேறுபட்ட பாணிகள் காணப்படுகின்றன. இவை பெரும்பாலும், ஒரே தோற்றச் சூழ்நிலைகளுக்குள்ளேயே அவற்றின் பயன்பாட்டைப் பொறுத்து, வேறுபடுகின்றன. அதேவேளை, பல்வேறு பிரதேசம் சார்ந்த போக்குகளும் காணப்படுகின்றன.

மேற்கு ஆப்பிரிக்காவில், நைகர் ஆறு, காங்கோ ஆற்று வடிநிலங்களில் வாழும் வேளாண்மைக் குழுக்களிடையே சிற்பங்கள் மிகவும் பொதுவாகக் காணப்படுகின்றன. இப்பகுதியில் கடவுள் சிலைகள் மிகக் குறைவே. ஆனால், முகமூடிகள் சமயச் சடங்குத் தேவைகளுக்காக உருவாக்கப்பட்டன.

African Masks
African Masks

மரபுவழி ஆப்பிரிக்க முகமூடிகள் துணை சகாரா ஆப்பிரிக்க மக்களின் மரபு வழிப் பண்பாடு, கலை ஆகியவற்றில் முக்கியமான அம்சங்கள். இவை பெரும்பாலும் சடங்கு தொடர்பானவை. சடங்குக்கான முகமூடிகளுடன் தொடர்பான குறிப்பிட்ட உட்பொருள்கள் பண்பாட்டுக்குப் பண்பாடு பெருமளவுக்கு வேறுபட்டாலும், சில கூறுகள் பெரும்பாலான ஆப்பிரிக்கப் பண்பாடுகளுக்குப் பொதுவானவை.

எடுத்துக்காட்டாக, முகமூடிகளுக்கு ஆன்மீக, சமயப் பொருள்கள் இருப்பதுடன், சடங்கு நடனங்களிலும், சமூக, சமய நிகழ்வுகளிலும் பயன்படுகின்றன. அத்துடன், முகமூடிகளை உருவாக்கும் கலைஞர்களுக்கும், அவற்றை அணிந்துகொண்டு நடனமாடுபவர்களுக்கும் சமூகத்தில் சிறப்புத் தகுதி உண்டு.

பெரும்பாலான வேளைகளில், முகமூடி செய்தல் என்பது, அவை குறிக்கின்ற குறியீட்டு அறிவுகளுடன், தந்தையிடமிருந்து மகனுக்குச் சொல்லித்தரப்பட்ட ஒரு கலையாகும்.

முகமூடிகள் ஆப்பிரிக்கக் கலையின் முக்கியமான கூறுகளில் ஒன்று. இதன் செல்வாக்குப் பொதுவாக ஐரோப்பிய, மேனாட்டுக் கலைகளில் காணப்படுகிறது. 20 ஆம் நூற்றாண்டில், கியூபிசம், போவியம், அகவுணர்ச்சி வெளிப்பாட்டியம் போன்ற கலை இயக்கங்கள் பரந்ததும், பல்வேறுபட்ட மரபுரிமைகளைக் கொண்டவையுமான ஆப்பிரிக்க முகமூடிகளிலிருந்து அகத்தூண்டல்களைப் பெற்றுள்ளன. இந்த மரபுரிமையின் செல்வாக்கு, தெற்கு மற்றும் நடு அமெரிக்க முகமூடிக் களியாட்ட ஊர்வலங்களில் இருப்பதைக் காணலாம்.

West Africa Nok culture sculptures
West Africa Nok culture sculptures

மேற்கு ஆப்பிரிக்காவில், அறியப்பட்ட மிகப் பழைய சிற்பங்கள் நோக் பண்பாட்டைச் சேர்ந்தவை. இப்பண்பாடு, இன்றைய நைசீரியாவில் கிமு 500 முதல் கிபி 500 வரை செழித்திருந்தது. கோண வடிவங்களையும் நீளமான உடலையும் கொண்ட மண் உருவங்கள் இப்பண்பாட்டுக்கு உரியவையாக உள்ளன.

பிந்தைய மேற்கு ஆப்பிரிக்கப் பண்பாடுகளில், புகழ்பெற்ற பெனின் வெண்கலச் சிற்பங்கள் போன்ற வெண்கல வார்ப்புக்கள் அரண்மனைகளை அலங்காரம் செய்வதற்காக உருவாக்கப்பட்டன. இவற்றுடன் யொரூபா நகரமான இஃபே பகுதியைச் சேர்ந்த மண்ணிலும், உலோகத்திலும் செய்யப்பட்ட 12 முதல் 14 ஆம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த இயற்கைத் தன்மையுடன் கூடிய அரசர்களின் தலைகளும் உள்ளன.

East African pole sculptures
East African pole sculptures

கிழக்காப்பிரிக்க மக்களிடையே சிற்பங்கள் பெரும்பாலும் காணப்படவில்லை. ஆனால் இப்பகுதியில் கம்பச் சிற்பங்கள் உள்ளன. மனித வடிவில் செதுக்கப்படும் இச்சிற்பங்கள் வடிவவியல் வடிவங்களால் அலங்கரிக்கப்படுகின்றன. மேற்பகுதியில், விலங்குகள், மக்கள் மற்றும் பல உருவங்கள் செதுக்கப்படுகின்றன. இந்தக் கம்பங்கள் பின்னர் புதைகுழிகளுக்குப் பக்கத்தில் நடப்படுகின்றன. இக்கம்பங்கள் இறந்தவர்களுடனும், மூதாதையர் உலகத்துடனும் தொடர்புபடுத்தப்படுகின்றன.

இதையும் படியுங்கள்:
மன அழுத்தத்தைப் போக்கும் வீட்டின் இன்டீரியர் சைக்காலஜி!
African Masks

முகமூடிகள் பெரும்பாலும் மக்கள், விலங்குகள் மற்றும் மக்கள் அடையாளம் காணும் பிற பொருட்களைப் போலவே செய்யப்படுகின்றன. பல ஆப்பிரிக்க முகமூடிகள் விலங்குகளைக் குறிக்கின்றன. சில ஆப்பிரிக்கச் சமூகங்கள் விலங்கு முகமூடிகள் காடுகளில் அல்லது திறந்த சவன்னாவில் வாழும் ஆவிகளுடன் தொடர்பு கொள்ள உதவும் என்று நம்புகின்றன.

African Masks
African Masks

முகமூடிகள், தலைக்கவசம் மற்றும் தலைப்பாகைகள் என்று முகமூடிகள் மூன்று முக்கிய வடிவங்களைக் கொண்டிருக்கின்றன. அதாவது, முகத்தைச் செங்குத்தாக மூடுதல், தலைக்கவசமாக முழு தலையையும் இணைத்தல், ஒரு முகடு போல தலைப்பகுதியின் மேல் இணைந்திருத்தல் என்று மூன்று வகையான முகமூடிகள் வழக்கத்திலிருக்கின்றன. முகமூடி மிகவும் பொதுவான வடிவம் மற்றும் பொதுவாக முகமூடியின் முகத்தில் வளைந்து, காதுகளுக்கு முன்பாக நிறுத்தப்படும்.

முகமூடிகளின் நிறங்கள், வடிவங்கள், பொருட்கள் மற்றும் முக அம்சங்கள் அனைத்தும் முகமூடிகளின் குறியீட்டு மொழிக்கு பங்களிக்கின்றன. ஆவிகள், மூதாதையர்கள் அல்லது தெய்வங்களை முதன்மைப்படுத்தலாம், மேலும், அவை பெரும்பாலும் கருவுறுதல், பாதுகாப்பு, குணப்படுத்துதல், தொடக்கம் அல்லது மூதாதையர் வழிபாட்டுடன் தொடர்புடையவை.

ஐரோப்பிய நவீன ஓவியங்களில் ஆப்பிரிக்க முகமூடிகளின் செல்வாக்கு இருக்கத்தான் செய்கின்றன. தற்காலத்தில் முகமூடிகள் சுற்றுலாப் பயணிகளுக்காகச் செய்யப்படுகின்றன.

ஆப்பிரிக்க முகமூடிகள் முதன்மையாக மரத்திலிருந்து செதுக்கப்பட்டவை, ஆனால், தற்போது டெர்ரா-கோட்டா, மெருகூட்டப்பட்ட மட்பாண்டங்கள், வெண்கலம், பித்தளை, தாமிரம், தந்தம் அல்லது தோல் ஆகியவற்றிலிருந்தும் செய்யப்படுகின்றன. இவை அனைத்து விதமான பொருட்களாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளன. துணி, ராஃபியா, தாவர இழைகள், குண்டுகள், மணிகள், நகங்கள், வண்ணக் கண்ணாடிகள், இறகுகள் மற்றும் கொம்புகள் போன்ற பொருட்களை கொண்டும் அலங்கரிக்கப்படுகின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com